அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
12 Jun 2026, 2:08 pm

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவது தொடர்பான வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் 8 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளை, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கி, தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்யும் மரபையே பல ஆண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இந்த மரபை மாற்றி, அரசு நிகழ்ச்சிகளில் முதலில் 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டு, பின்னர் தேசிய கீதம், அதற்கு பிறகு மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படுகிறது.

கடந்த ஜனவரி 28ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சுற்றிக்கையில் அரசு நிகழ்ச்சிகளை ‘வந்தே மாதரம்’ பாடல் பாடி தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது; மாநில பாடலை பாடி அரசு நிகழ்ச்சியை தொடங்க எந்தத் தடையையும் விதிக்கவில்லை; எனவே தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் 8 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.