தொழிலாளர்கள் போராட்டம்: பிரதமருக்கு எம்.ஏ.பேபி கடிதம்!
19 Apr 2026, 4:05 pm

தில்லி, ஹரியானா, நொய்டாவில் போராடி வரும் தொழிலாளர் பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப் பிரதேசம், ஹரியானா, தில்லி-என்.சி.ஆர் ஆகிய பகுதிகளில் மிகவும் கடுமையான பணிச்சூழல், மிகக் குறைந்த ஊதியம் மற்றும் பணியிட விபத்துக்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக தொழிலாளர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச மாத ஊதியமே உத்தரப் பிரதேசத்தில் ரூ.11,314/- முதல் தில்லியில் ரூ.18,456/- வரை மட்டுமே உள்ளது. தில்லி NCR பகுதியின் விலைவாசியை கணக்கில் கொண்டால், தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கான கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் மேற்கொள்ள இந்த ஊதியம் போதுமானதாக இல்லை. அடிப்படைத் தங்குமிடம், உணவு மற்றும் வாடகை போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்வதற்கு இந்த ஊதியம் மிகவும் போதாததாகவே உள்ளது.

அதே போல், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச அரசுகள் அண்மையில் ஊதியத்தை உயர்த்தியிருந்தாலும், அந்த உயர்வு சராசரி வாழ்க்கைத்தரத்தை எட்டக்கூடப் போதுமானதாக இல்லை. மேலும், குறைந்தபட்ச ஊதிய விதிமுறைகள் பெரும்பாலும் அமைப்புசார் துறையில் மட்டுமே அமல்படுத்தப்படுகின்றன என்பதும், அமைப்புசாராத் துறையைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் மிகக் குறைந்த சொற்ப ஊதியத்திலேயே தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போராடி வரும் தொழிலாளர் பிரச்சினையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், உடனடி நடவடிக்கையாக, தற்போதைய விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, மாதம் ரூ.26,000-ஐ குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும்; காவல் துறையினரின் அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் மீதான பொய் வழக்குப்பதிவு போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்; தொழிலாளர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.