தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாசிச பாஜக அணியை வீழ்த்துவதே பிரதான கடமை! எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய எம்.ஏ. பேபி அழைப்பு!

15 Jul 2026, 9:49 pm
பாசிச பாஜக அணியை வீழ்த்துவதே பிரதான கடமை!  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய எம்.ஏ. பேபி அழைப்பு!

பாசிச பாஜக அணியை வீழ்த்துவதே பிரதான கடமை! எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய எம்.ஏ. பேபி அழைப்பு!

புதுதில்லி, ஜூலை 15 - நாட்டில் அதிகரித்து வரும் பாசிச மற்றும் நவதாராளவாத அச்சுறுத்தல்களில் இருந்து தேசத்தையும் அதன் கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாக்க, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து பாஜக கூட்டணியை வீழ்த்துவதை முதன்மை இலக்காகக் கொண்டு ஓரணியில் திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. புதுதில்லி ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில் ஜூலை 11 முதல் 13 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நிறைவடைந்தது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி. ராகவலு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து, புதுதில்லி ஏகேஜி பவனில் ஜூலை 14 செவ்வாயன்று நடைபெற்ற பத்திரிகை யாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி விரிவாக விளக்கமளித்தார். அப்போது, பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாஜக அரசை வீழ்த்துவதற்கு, அகில இந்திய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் முழுமையான அரசியல் மற்றும் கொள்கை ரீதியான முதிர்ச்சியுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பாஜக எதிர்ப்புப் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் கடமையும்

மத்தியக் குழு கூட்டத்தின் விவாதங்கள் குறித்து விளக்கிய எம்.ஏ. பேபி, பாஜக என்பது சாதாரணமான ஒரு அரசியல் கட்சி அல்ல என்றும், அது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதலில் இயங்கும் ஒரு பாசிசக் கட்டமைப்பு என்றும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மாநில அளவிலான சில முரண்பாடுகள் இருந்தாலும், நாட்டைப் பிளவுபடுத்தும் பாசிச சக்திகளுக்கு எதிரான பிரதான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்.

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கார்ப்பரேட் சக்திகளுடன் கொண்டுள்ள அச்சுறுத்தலான பிணைப்பை முறியடிப்பதற்கு, அனைத்து மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு கட்சிகளும் தங்களது பரஸ்பர கருத்து வேறுபாடுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணிக்கு எதிரான போராட்டத்திற்கு முதன்மை முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்தியக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

‘இந்தியா’ அணியும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையும்

செய்தியாளர் சந்திப்பில் ‘இந்தியா’ அணி சேர்க்கையின் ஒருங்கிணைப்பு மற்றும் தலைமை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எம்.ஏ. பேபி மிகவும் தெளிவான மற்றும் விரிவான விளக்கத்தை அளித்தார். ‘இந்தியா’ அணியைப் பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாகவோ அல்லது கூட்டாகவோ எந்தவொரு தனிநபர் தலைவரும் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அணியில் உள்ள மிகப்பெரிய ஒற்றைக் கட்சியின் தலைவர் என்ற முறையிலும், நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் ராகுல் காந்திக்கு மிக முக்கியப் பொறுப்பும் கூட்டுத் தலைமையும் இயல்பாகவே உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய எம்.ஏ. பேபி, மற்றபடி ‘இந்தியா’ அணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் முறைப்படி கூடி, ராகுல் காந்தியை தங்களது பொதுவான தலைவராகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

முந்தைய காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மட்டுமே அணியின் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் போன்றதொரு குறிப்பிட்ட பொறுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும், அத்தகையதொரு அதிகாரப்பூர்வ பொறுப்பு கார்கேவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார். கடந்த 2024 பொதுத்தேர்தல் சமயத்தில் நிதிஷ் குமார் இக்கூட்டணியில் இருந்தபோது, அவரும் இத்தகையதொரு முதன்மைப் பொறுப்பை எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்ட எம்.ஏ. பேபி, அதன் தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ் பின்னணியில் இயக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாகவும், அதற்குச் சரியான உத்தி களுடன் எதிர்வினையாற்ற வேண்டிய காங்கிரஸ் கட்சி வெறும் மவுன சாட்சியாகக் கடந்துபோனதாலும் ‘இந்தியா’ கூட்டணியில் பிளவுகள் ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டி னார். இத்தகைய தவறுகள் நிகழாமல் இருந்திருந்தால் 2024 தேர்தல் முடிவுகளே முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அகில இந்திய அளவில் இத்தகைய கூட்டுப் போராட்டத்தை வலுப்படுத்துவதில் தற்போது பல தடைகளும் சவால்களும் நீடிப்பதை சுட்டிக்காட்டிய எம்.ஏ. பேபி, தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் இடையேயான மோதல் போக்குகள், அதேபோல தமிழ்நாட்டில் திமுக எடுத்து வரும் தற்போதைய அணுகுமுறைகள் என மாநிலத்திற்கு மாநிலம் முரண்பாடுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றார். எனினும், ஒவ்வொரு எதிர்க்கட்சியும் இத்தருணத்தின் அரசியல் மற்றும் கொள்கை ரீதியான முக்கியத்துவத்தை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஆர்எஸ்எஸ் - பாஜக பாசிசக் கூட்டணியை வீழ்த்துவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு எதிர்க்கட்சித் தலைமைகளிடம் கூடுதல் முதிர்ச்சியும் பொறுப்பு ணர்வும் தேவைப்படுகிறது என்றும், தற்போதைய சூழலில் சில தலைவர்களிடமும் கட்சிகளிடமும் அத்தகைய முதிர்ச்சி இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை என்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி மிக விரிவாகக் குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் பாஜக எழுச்சியும் மம்தா பானர்ஜியின் வரலாற்றுத் தவறும்

மேற்கு வங்கத்தில் பாஜக முதன்முறையாக சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றுள்ள சூழல் குறித்து கவலை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர், அங்கு பாஜக காலூன்றுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியே முழுமுதற் காரணம் என்று சாடினார். கடந்த காலத்தில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் அவர் ரயில்வே அமைச்சராகப் பங்கேற்றதன் மூலம், மாநிலத்தில் பாஜக ஒரு அரசியல் சக்தியாக வளர்வதற்கு மம்தா பானர்ஜி வழிவகுத்தார் என்றும், அன்று அவர் செய்த வரலாற்றுத் தவறின் விளைவுகளைத்தான் இன்று மேற்கு வங்க மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் பாஜகவும் வெளியில் சண்டையிட்டுக் கொள்வது போல நடித்தாலும், திரைக்குப் பின்னால் அவை வைத்துள்ள ரகசியக் கூட்டு தற்போது அம்பலமாகியுள்ளது. பல தொகுதிகளில் திரிணாமுல் வேட்பாளர்கள் விலகிக் கொண்டு பாஜக வேட்பாளரை ஆதரித்ததை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால், சிபிஐ(எம்-எல்) லிபரேசன் உள்ளிட்ட முற்போக்கு இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள ‘இடது முன்னணி +’ கூட்டணியை மக்கள் மாற்றுச் சக்தியாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். மேற்கு வங்கத்தின் அரசியல் சூழல் மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து ஆகஸ்ட் 28 முதல் 30 வரை நடைபெறவுள்ள மாநிலக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு உத்திகள் வகுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு, கேரளத்தில் சிபிஎம் அரசியல் நிலைப்பாடுகள்

தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் சூழல் மற்றும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்தும் எம்.ஏ. பேபி செய்தியாளர்களிடம் விளக்கினார். தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது எந்த அணியிலும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்எல்) லிபரேசன் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் பிரச்சனைகளில் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார். மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற சாம்சங் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் முன்னின்று நடத்தியது என்பதை நினைவுகூர்ந்த அவர், கூட்டணியில் இருந்தாலும் மக்கள் நலப் பிரச்சனைகளில் கட்சியின் சுதந்திரமான கொள்கை நிலைப்பாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை என்றார்.

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் நலக் கொள்கைகளை இந்த அரசு செயல்படுத்தும் வரை தங்களது ஆதரவு தொடரும் என்றும், அதேநேரம் ஏழை - எளிய மக்களுக்கு எதிரான போக்குகள் இருந்தால் அதனை கடுமையாக விமர்சிக்கத் தயங்க மாட்டோம் என்றும் தெளிவுபடுத்தினார்.

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்துப் பேசிய அவர், பிரச்சார உத்திகள் மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் நிலவிய குறைபாடுகள் சுயவிமர்சனத்தோடு கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இக்குறைபாடுகளைக் களைந்து கட்சியைப் பலப்படுத்த செப்டம்பர் மாத மத்தியில் கேரள மாநிலக் குழுவின் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு தீவிர ‘திருத்த இயக்கம்’ முன்னெடுக்கப்படும்.

கேரள வேட்பாளர் தேர்வில் தலைவர்க ளின் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு களுக்குப் பதிலளித்த அவர், கம்யூனிஸ்டுகளிடம் பொதுமக்கள், மிக உயர்ந்த நெறிமுறைகளை எதிர்பார்ப்பது இயல்பானது என்றாலும், கட்சிக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் ஒருவருக்கு- அவர் ஏதோ ஒரு தலைவரின் உறவினர் என்ற காரணத்திற்காக வாய்ப்புகளை மறுக்க முடியாது என்றார். கேரளத்தில் பதவியேற்றுள்ள யுடிஎப் அமைச்சர்களில் சுமார் பத்து பேர் முன்னணி தலைவர்களின் வாரிசுகளாகவோ உறவினர்களாகவோ தான் உள்ளனர் என்றும், ஆனால் ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்துவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், விழிஞ்ஞம் துறைமுகப் பங்குகளை அதானி குழுமம் மாற்றிய விவகாரத்தில், முந்தைய யுடிஎப் அரசு செய்த உடன்படிக்கையின் சட்டப் பிணைப்புகளே அடுத்து வந்த எல்டிஎப் அரசுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது என்றும், இவ்விவகாரத்தில் கூடுதல் விவரங்கள் வெளிவர வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

பாசிச அடக்குமுறைகளும் மதவாதப் போக்குகளும்

மேலும், ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் சீர்குலைக்கும் வகையில் எடுத்து வரும் பல்வேறு பிற்போக்கான நடவடிக்கைகளை எம்.ஏ. பேபி பட்டியலிட்டார். குறிப்பாக, மக்கள்தொகை மாற்றங்களை ஆராய ஒன்றிய அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழுவில் ஒரு புள்ளிவிவர நிபுணரோ அல்லது மக்கள்தொகை வல்லுநரோ கூட இடம்பெறவில்லை. இது ஆர்எஸ்எஸ் திட்டத்தின்படி சிறுபான்மையினரைக் குறி வைக்கும் ஒரு ஆபத்தான நடவடிக்கையாகும். இதைத் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

குஜராத் மாநில காவல்துறை சிறுபான்மை யினரை குறிவைக்கும் வகையில் வெளியிட்டுள்ள புதிய நிலையான செயல்பாட்டு முறை தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். தாடி வளர்ப்பவர்களைக் கண்கா ணிப்பது போன்ற குஜராத் காவல்துறையின் நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றம் வழங்கிய தனிநபர் ரகசியக் காப்புரிமைக்கு எதிரானது. அதேபோல, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரை விடவும் தீவிரமான மதவாதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். பிரபல பாடகர் பூபேன் அசாரிகாவின் ஓவியத்தை வரைந்ததற்காக மாணவர் அமைப்பினரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வோம் என்று மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என பேபி சாடினார்.

இத்தகைய ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைத்து சமரசமற்ற போராட்டங்களை சிபிஐ(எம்) முன்னெடுக்கும் என்று எம்.ஏ. பேபி செய்தியாளர் சந்திப்பில் உறுதிபடத் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.