தீக்கதிர் முக்கிய செய்திகள்
7 Feb 2026, 2:02 pm

எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு

சென்னை, பிப்.7 - பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், திரைப்பட இயக்கு நர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு 2024-2025 ஆம் ஆண்டுகளுக்கான கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தமிழக திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டு தோறும் கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2022-இல் எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா ஆரூர்தாஸும், 2023-இல் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், 2025 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரொக்கப் பரிசாக தலா ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப் பரிசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் பற்றி பேசும் விஜய் தனது ஊதியத்தை வெளிப்படுத்துவாரா? அமைச்சர் கேள்வி

சென்னை, பிப்.7 - ஊழல் பற்றி பேசும் நடிகர் விஜய், தான் வாங்கும் ஊதி யத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். வருமானத்தை மறைத்ததால் அபராதம் விதிக்கப் பட்டுள்ள நிலையில் ஊழல் பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தவறு செய்த வர்கள் அனைவரும் விஜய்யுடன் உள்ளனர். இவர்கள் நாட்டை ஆண்டால் எப்படி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வரி ஏய்ப்பு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள நிலையில், விஜய் ஊழலை ஒழிப்பார் என்று எப்படி கூற முடியும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுள்ளார். கி.வீரமணி இந்நிலையில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி, ஊழல் குறித்துப் பேச விஜய்க்கு எந்தத் தகுதியும் கிடையாது என்றும், எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அரசியல் ஷூட்டிங் நடத்தி வருகிறார் என்றும் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

தேவநேயப் பாவாணருக்கு முதலமைச்சர் புகழாரம்

சென்னை, பிப்.7- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் நினைவாக புகழாரம் செலுத்தி வெளியிட்டுள்ள பதிவில், “தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன் எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்தார். இந்திய மொழிகளிலேயே வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழின் தனித் தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித் தமிழறிஞர் பாவாணர் வாழ்க” என்று தெரிவித்துள்ளார்.