சவுரவ் தாஸுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!
1 hour before

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்வில் 'காக்ரோச் இயக்கம்' குறித்துப் பேசுவதற்காக சவுரவ் தாஸ் லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதை எதிர்த்து அவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி அமித் மகாஜன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, நவம்பர் 22-23 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் மகாராஷ்டிரா காவல்துறையால் சவுரவ் தாஸுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உரிய மன்றத்தை அணுகி இதனை எதிர்த்து முறையிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சவுரவ் தாஸின் பிறந்த இடம், முகவரி மற்றும் பெற்றோர் விவரங்கள் ஆகியவற்றின் உண்மைத்தன்மை குறித்து புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், பாஸ்போர்ட்டில் உள்ள இந்தக் குளறுபடிகள் அவரது இந்தியக் குடியுரிமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்; தற்போது வரை அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்படவோ அல்லது முடக்கப்படவோ இல்லை. சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அனுப்பிய விளக்கம் கோரும் நோட்டீஸுக்கு அவர் உரிய ஆவணங்களுடன் பதிலளித்தால் போதும் என தெரிவித்துள்ளார்.

சவுரவ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அகில் சிபல் வாதிடுகையில், "வெளிநாடு செல்வது என்பது அடிப்படை உரிமை. விளக்கம் கோரும் நோட்டீஸ் நிலுவையில் உள்ளது என்பதற்காக ஒருவரை வெளிநாடு செல்லவிடாமல் தடுக்க முடியாது. மேலும், LOC பிறப்பிக்கப்பட்டது குறித்து தாஸுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை; அதைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள அந்தச் சுற்றறிக்கையின் நகலை வழங்க வேண்டும்" என்று கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், சவுரவ் தாஸின் மனுவுக்குப் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.