மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!
17 Apr 2026, 8:00 pm

மோடி அரசு கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதா உட்பட 3 மசோதாக்கள் மக்களவையில் தோல்வியடைந்தது.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-லிருந்து 850 ஆக உயர்த்தும் அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா 2026-ஐ தாக்கல் செய்வதற்காக, 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தப் போவதாக கூறி இந்த சிறப்பு அமரவை, மோடி அரசு கூட்டியுள்ளது. இதற்கு, தனக்கு செல்வாக்கு இல்லாத தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக் கட்டுவதற்காகவே, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை எனும் சூழ்ச்சியான ஆயுதத்தை மோடி அரசு கையில் எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலையில், நேற்று தொடங்கப்பட்ட சிறப்பு கூட்டத்தில் மக்களவையில் 3 மசோதாக்களை அறிமுகம் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, இதற்கு 251 எம்.பி-க்கள் ஆதரவாகவும், 185 எம்.பி-க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். இதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதா ஆகிய 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மக்களவையில் 3 மசோதாக்கள் மீதான விவாதம் நடத்தப்பட்டு இன்று மாலை 7.15 மணிக்கு மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில், மொத்தம் 489 எம்.பி-க்கள் பங்கேற்ற டிவிஷன் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இந்த மசோதாக்கள் வெற்றிப் பெற, டிவிஷன் வாக்கெடுப்பில் 326 வாக்குகள் (2/3 பங்கு) தேவை என்றிருந்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகள் பதிவாகின. இதன் மூலம் இந்த மசோதாக்கள் தோல்வியடைந்தன.