மகிழ்வாய் வாழ்க!
10 Jan 2026, 12:25 pm
<p><strong>மகிழ்வாய் வாழ்க!</strong></p>
<p>நெஞ்சைத் தொட்ட நல்ல தம்பி! இஞ்சி மஞ்சள் பயிரிடு வோர்க்கும் இனிக்கும் கரும்பு பயிரிடு வோர்க்கும் இன்னல் தீர்த்திடும் இன்பத் திருநாள்! கொஞ்சிப் பேசும் சின்ன தம்பி! வஞ்சிப் போர்க்கும் வாழ்வைத் தந்து நஞ்சை நெல்மணி பயிரிடுவோர்க்கும் நன்றியைக் காட்டும் நம்மோர் திருநாள்! குட்டிப் பயலே! குட்டிப் பயலே! சட்டிப் பானை செய்யும் குயவரை விட்டுவி டாமல் போற்றுந் திருநாள்! கட்டுக் கதைகள் கலவாத் திருநாள்! சேட்டை செய்யும் சின்னப் பயலே! வீட்டைத் தூய்மை செய்யும் திருநாள்! மாட்டை மதித்துப் போற்றுந் திருநாள்! நாட்டின் பெருமை காட்டும் திருநாள்! காளையை அடக்கும் காளையின் வீரமும் உழைப்பின் மதிப்பும் உணர்த்தும் திருநாள்! பழகுதற் கினிய பண்புடை யாளராம் உழவர் பெருமையைப் போற்றுந் திருநாள்! தெருவினில் அழகாய்க் கோலம் போட்டு ஒருவரை ஒருவர் மதிக்கும் திருநாள்! உள்ளுவ தெல்லாம் உயர்வுள் ளல்லெனும் வள்ளுவன் வாய்மொழி போற்றுந் திருநாள்! தமிழர் வாழ்வின் பெருமையை எண்ணி தமிழ்ப்பண் பாடு காத்திடும் நாளில் தருவோம் தம்பி மனநிறை வாழ்த்து! தரணியில் யாவரும் மகிழ்வாய் வாழவே!!</p>
