கால்பந்து இருக்கும் வரை... மெஸ்ஸி
8 Oct 2026, 9:08 pm

கால்பந்து இருக்கும் வரை... மெஸ்ஸி

2026ஆம் ஆண்டு அக்டோபர் 6 அன்று இரவு பியூனஸ் அயர்ஸ் மோனுமெண்டல் (அர்ஜெண்டினா) மைதானத்தில் 85,000 பேர் கூடியிருந்தனர். அவர்களின் ஆரவாரம் அலையாய் எழுந்து, சில கணங்களில் அமைதியிலும் அடங்கியது. காரணம், தன் 208ஆவது, கடைசிச் சர்வதேசப் போட்டிக்காக லியோனல் மெஸ்ஸி மைதானத்தில் இறங்கியிருந்தார்.மூன்று மகன்களின் கைபிடித்து அவர் மைதானத்தில் நடந்துவந்தார். தேசிய கீதம் ஒலித்தபோது, 21 ஆண்டுகளாகக் கால்பந்து உலகை ஆண்ட அந்த மனிதரின் கண்கள் கலங்கின. அது தோல்வியின் கண்ணீரல்ல. ஒரு வாழ்நாள் கடமையை நிறைவாக முடித்த மனிதனின் கண்ணீர்.

ரொசாரியோவின் சிறுவன்

இந்தக் கதை ஒரு பெரிய மைதானத்தில் தொடங்கவில்லை. 1987 ஜூன் 24 அன்று அர்ஜெண்டினாவின் ரொசாரியோ நகரில், எஃகு ஆலைத் தொழிலாளி ஜார்ஜ் மெஸ்ஸிக்கும், துப்புரவுப் பணியாளர் செலியா குசிட்டினிக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தான் ஒரு சிறுவன். செல்வம் இல்லாத வீடு அது. ஆனால் கனவுகளுக்கு அங்கே குறைவில்லை. 5 வயதில் பந்தைத் தொட்ட அந்தக் கால்களில் ஏதோ ஒரு மாயம் குடிகொண்டிருந்தது. 12 வயதுக்குள் ஏறத்தாழ 500 கோல்கள் அடித்து ஊரையே வியக்க வைத்தான். அந்தத் திறமையை முதலில் கண்டுகொண்டவர் பாட்டி செலியா. அவர்தான் பேரனை உள்ளூர் கிளப்பில் சேர்த்துவிட்டார். இன்றும் கோல் அடித்ததும் மெஸ்ஸி இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்துகிறார். அது மறைந்த அந்தப் பாட்டிக்கு அவர் சொல்லும் நன்றி.

முதல் தடை

கால்பந்து அந்தச் சிறுவனுக்கு உயிர். ஆனால் உடல் எதிரியானது. வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்கு மாதம் 900 டாலர் தேவை. அது அந்தக் குடும்பத்துக்கு எட்டாத உயரம். உள்ளூர் கிளப்பும் அந்தச் செலவை ஏற்க முன்வரவில்லை. திறமை இருந்தும் உடல் ஒத்துழைக்காத சிறுவனுக்கு அந்த வயதில் எது துணை? அப்போது கடல் கடந்து ஒரு கரம் நீண்டது. திருப்பம் தந்த ஒரு டிஷ்யூ காகிதம்!

ஸ்பெயினின் பார்சிலோனா கிளப்பின் விளையாட்டு இயக்குநர் கார்லஸ் ரெக்சாக், சிறுவனின் ஆட்டத்தைக் கண்டு வியந்தார். மருத்துவச் செலவை ஏற்பதாக உறுதியளித்தார். அந்த வரலாற்று ஒப்பந்தம் ஒரு டிஷ்யூ காகிதத்தில் அவசரமாக எழுதப்பட்டது என்று சொல்வார்கள். 2000ஆம் ஆண்டு மெஸ்ஸியின் குடும்பம் புதிய மண்ணுக்குப் புலம் பெயர்ந்தது. புதிய மொழி, புதிய சூழல், எல்லாம் அந்நியம். ஆனால் அவன் கையில் இருந்த பந்து மட்டும் பழகிய தோழன்.

2004-இல் பார்சிலோனா சீனியர் அணியில் அறிமுகமானார். அடுத்த 17 ஆண்டுகள் அந்த மைதானம் அவருடைய சாம்ராஜ்யமாக இருந்தது. பந்தைக் காலோடு கட்டிவைத்தது போல எதிரணியினரை மின்னலாய்க் கடக்கும் வேகம், யாரும் கணிக்க முடியாத பாஸ்கள், கவிதை போலச் சொட்டும் கோல்கள் என ரசிகர்கள் மெய்மறந்தனர். ரொனால்டினோவிடமிருந்து பெற்ற ‘10’ எண் ஜெர்சி, அவர் தோளில் ஏறியபின் கால்பந்தின் உயர்ந்த அடையாளமாகவே மாறியது. 2011-12 பருவத்தில் ஒரே சீசனில் 73 கோல்கள் குவித்தார். லா லிகாவில் மட்டும் 474 கோல்கள். ஒட்டுமொத்தமாக 900-க்கும் மேற்பட்ட கோல்கள்.

பிரிவின் வலி

எந்த உறவுக்கும் ஒரு நாள் முடிவு உண்டு. 2021-இல் பார்சிலோனா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. லா லிகாவின் நிதி விதிகளுக்குள் புதிய ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய முடியவில்லை. தன் ஊதியத்தில் பாதியைக் குறைத்துக்கொள்ளவும் மெஸ்ஸி தயாராக இருந்தார். ஆனாலும் அந்தப் பந்தம் முடிவுக்கு வந்தது. வெற்றிகளும் வேதனைகளும் நிறைந்த பதினேழு ஆண்டுகளுக்குப் பின், அவர் விடைபெற்றார்.

நீலமும் வெள்ளையும்!

ஆனால் தாய்நாட்டின் நீல-வெள்ளை ஜெர்சி மட்டும் அவருக்கு எளிதில் வசப்படவில்லை. 2005-இல் அறிமுகம், 2006-இல் குரோஷியாவுக்கு எதிராக முதல் கோல். அதன்பின் ஒவ்வொரு ஆட்டத்திலும் “மாரடோனா எங்கே?” என்ற கேள்வி அவரைத் துரத்தியது. அந்த ஒப்பீடு ஒரு மலையளவு பாரமாக அவர் மேல் அழுத்தியது.

2014 உலகக் கோப்பை இறுதியிலும், தொடர்ந்த கோபா அமெரிக்கா இறுதிகளிலும் தோல்வி. மனம் உடைந்த மெஸ்ஸி 2016-இல் சர்வதேசக் களத்திலிருந்து விலகினார். “சிங்கம் வீழ்ந்தது” என்று பலர் எழுதினர். ஆனால் சிங்கத்தின் வீழ்ச்சி சில நேரம் பாய்ச்சலுக்கான பதுங்கல் மட்டுமே.

ரசிகர்களின் அன்புக்காக அவர் திரும்பி வந்தார். 2021-இல் இறுதிப்போட்டியில் பிரேசிலை வீழ்த்தி கோபா அமெரிக்கா கோப்பை. 2022-இல் உலகக் கோப்பை, பல ஆண்டுக் கனவின் நிறைவு. 2024-இல் மீண்டும் கோபா கோப்பை. விமர்சனங்களுக்கு அவர் வாயால் பதில் சொல்லவில்லை, மைதானத்தில் பதில் சொன்னார். 8 முறை பாலன் டி ஆர் விருது பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையும் அவருக்கே.

ஒப்பீடுகளுக்கு அப்பால்

பீலேயின் கோல் வேட்டை ஒரு காலத்தின் அதிசயம். மாரடோனாவின் ஆக்ரோஷம் ஒரு தலைமுறையின் நெருப்பு. ரொனால்டோவின் உழைப்பும் உடற்தகுதியும் ஒரு யுகத்தின் வியப்பு. அவர்களோடு மெஸ்ஸியை ஒப்பிடுவது ரசிகர்களுக்கு இனிய விவாதம். ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேல் கிளப்பிலும் நாட்டிலும் குன்றாத நிலைத்தன்மை, ஆட்டத்தையே தன் விரல்நுனியில் ஆட்டுவிக்கும் பிறவித் திறமை. இவையே அவரைத் தனியிடத்தில் நிறுத்துகின்றன. அதனால்தான், அவர் பிறந்து வளர்ந்த வீடும், ஓடி ஆடிய கால்கள் பதித்த தெருவும், பயிற்சி எடுத்த மைதானமும் இன்றும் கால்பந்து ரசிகர்களுக்கு அருங்காட்சியகமாகக் காட்சியளித்து வருகின்றன.

“தி லாஸ்ட் டாங்கோ”

இந்த ஆண்டு உலகக்கோப்பை இறுதியில் அர்ஜெண்டினா ஸ்பெயினிடம் தோற்றது. அப்போது மெஸ்ஸி சொன்னார்: “நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இனி கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை.” அத்துடன் ஓய்வை அறிவித்தார். கடைசிப் போட்டி நாளன்று, மைதானத்துக்குச் சென்ற அணிப் பேருந்தின் வழியெங்கும் ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்களைப் பார்த்த மெஸ்ஸி கண்ணீருடன் கையசைத்தார். மைதானத்தின் நடுவே “Gracias” (நன்றி) என்று எழுதப்பட்ட பிரம்மாண்ட ஜெர்சி விரிக்கப்பட்டிருந்தது. மனைவி அன்டோனெலா ரொகுசோவும், தாய் செலியா குசிட்டினியும் சிறப்பு இருக்கைகளில் அமர்ந்து, சிறுவனாய் ரொசாரியோவில் பந்து உதைத்த அந்த மகன் இன்று உலகம் முன் விடைபெறுவதைப் பார்த்தனர்.

ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் ஆட்டம் சில நொடிகள் நின்றது. 10-ஆம் எண்ணுக்கான மரியாதையாக, 85 ஆயிரம் பேரும் எழுந்து நீண்ட நேரம் கைதட்டினர். அது ஒரு தலைமுறையே சொன்ன நன்றி.

அன்றிரவும் மெஸ்ஸி ஏமாற்றவில்லை. பெனால்டியில் தன் 126-வது சர்வதேச கோலை அடித்தார். நிகோலஸ் ஒடமெண்டி கோல் அடிக்க வழிசெய்தார். அர்ஜெண்டினா 3-0 என வென்றது. ஆட்ட நாயகன் விருதும் அவருக்கே. போட்டிக்குப் பின் கண்ணீருடன் பேசிய அவர், அர்ஜெண்டினா ஜெர்சியை அணிவதே தன் வாழ்வின் மிக அழகான விஷயம் என்றும், அடுத்த தலைமுறைக்கு வழிவிடவே இந்த முடிவு என்றும் கூறினார்.

பந்து இன்னும் உருளும்

தற்போது 39 வயதாகும் மெஸ்ஸி கால்பந்தை விட்டு விலகவில்லை. இன்டர் மியாமி அணியுடன் 2028 வரை ஒப்பந்தம் உள்ளது. சர்வதேசக் களம் அவரை இனிக் காணாது, ஆனால் அந்த மாயக்கால்களை ரசிகர்கள் இன்னும் சில ஆண்டுகள் தொழில்முறை அரங்கில் காணலாம்.

ஒரு வாழ்க்கை சொல்லும் பாடம்

உடல் குறைபாடு, வறுமை, கடும் விமர்சனம், தொடர் தோல்வி என வாழ்க்கை ஒன்றன்பின் ஒன்றாகச் சுவர்களை எழுப்பியது. அவர் ஒவ்வொன்றையும் விடாமுயற்சியால் தாண்டினார். மைதானத்தில் அவர் காட்டிய கண்ணியம், எதிரணியை மதிக்கும் பண்பு, அகங்காரமற்ற எளிமை ஆகியவை வளரும் தலைமுறை பின்பற்ற வேண்டிய நற்பண்புகள். அவர் மைதானத்தில் வரைந்த மாயஜால ஓவியங்கள், கால்பந்து இருக்கும் வரை ரசிகர்களின் நெஞ்சில் அழியாமல் வாழும்.

நன்றி, லியோ! - சி.ஸ்ரீராமுலு