ஒரு போர் வெறியனின் மர்ம மரணம்! - அன்வர் உசேன்
yesterday

ஒரு போர் வெறியனின் மர்ம மரணம்! - அன்வர் உசேன்

“இறந்தவர்களைப் பற்றி நல்லது மட்டுமே பேச வேண்டும்” என்பது பொதுவான நாகரிகம் என்றாலும், மனிதத்தன்மையுள்ள எவரும் விதிவிலக்கு கோரும் ஒரு பெயர் உண்டு என்றால், அது லிண்ட்சே கிரஹாம். அமெரிக்க செனட் சபை உறுப்பினரான இவர், 12.07.2026 அன்று அதிகாலை இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் உலகெங்கும் இருவித எதிர்வினைகளை விளைவித்துள்ளது. நேதன்யாகு, டொனால்டு டிரம்ப், ஜெலன்ஸ்கி மற்றும் நேட்டோ தலைவர்கள் இவரைப் பாராட்ட, மறுபுறம் போர் வெறியின் மூர்க்கத்தனமான குரல் ஒன்று ஓய்ந்தது என உலக மக்கள் கருதுகின்றனர்.

டொனால்டு டிரம்ப்பின் தீவிர விமர்சக ராக இருந்து, பின்னர் அவருக்கு ஜாடிக்கு ஏற்ற மூடியாக மாறிய லிண்ட்சே, 4 முறை (24 ஆண்டுகள்) செனட் சபை உறுப்பினராக இருந்தவர். 5-வது முறை குடியரசு வேட்பாளராக வரும் நவம்பர் தேர்தலுக்குத் தயாராக இருந்தபோதுதான் இவருக்குத் “திடீர் மரணம்” ஏற்பட்டுள்ளது.

காசா இனப்படுகொலைக்கு ஆதரவு

லிண்ட்சே காசா இனப்படுகொலையைத் தீவிரமாக ஆதரித்தார். இஸ்ரேல் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வது குறித்துக் கேட்டபோது, அதை இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஜப்பானுடனும் ஜெர்மனியுடனும் போரிட்டதுடன் ஒப்பிட்டு நியாயப்படுத்தினார். காசாவை அழிக்க இஸ்ரேல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும் தவறில்லை என வாதிட்டவர். ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுகளைப் போட்டதை நியாயப்படுத்தி, அதேபோல பாலஸ்தீனத்தை இஸ்ரேல் முற்றிலுமாக அழிக்க வேண்டும் என நாகூசாமல் கூறினார். தனது இறுதி நாள்வரை குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து ஒரு வருத்தம் கூட அவர் வெளியிடவில்லை. இவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய இனப்படுகொலையாளி நேதன்யாகு, “இஸ்ரேல் ஒரு சிறந்த நண்பனை இழந்து விட்டது” எனக் கூறியுள்ளார். இது ரத்தவெறி பிடித்த ஓநாய் இன்னொரு ஓநாய்க்கு அஞ்சலி செலுத்துவதற்குச் சமம் என்று சொல்லலாம்

ஈரான், கியூபா, வெனிசுலாவை அழிக்கத் துடித்த ரத்தவெறி

2010 முதலே ஈரானைத் தாக்கி சிதைக்க வேண்டும் என கூச்சல் போட்டுவந்தவர் லிண்ட்சே. 2015-ஆம் ஆண்டு அன்றைய ஒபாமா நிர்வாகம் ஈரானுடன் செய்த அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை வன்மையாக எதிர்த்தார். 2026-இல் போர் தொடங்கியபோது, ஈரானின் அனைத்து எண்ணெய் வயல்களையும் அழிக்க வேண்டும் என டிரம்ப்புக்கு ஆலோசனை வழங்கினார். ஈரானுக்கு முன்பே அமெரிக்காவின் இராக் படையெடுப்பையும், சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதையும், லிபியாவில் கடாபி கொல்லப்பட்டதையும் ஆதரித்தார். சமீபத்தில் வெனிசுலாவிற்குள் புகுந்து ஜனாதிபதி மதுரோவைக் கைது செய்ததைப் பாராட்டியதோடு, கியூபாவையும் அழிக்க வேண்டும் எனத் தொடர்ந்து போர் வெறியைக் கக்கினார். ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போரையும் இவர் முழுமையாக ஆதரித்தார்

ரஷ்யா பிறப்பித்த கைது வாரண்ட்!

அமெரிக்கப் போர் வெறியின் குரலாக இருந்த லிண்ட்சே, ரஷ்யாவைச் சிதைக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுக்க வேண்டும் என்றார். பைடன் ஜனாதிபதியாக இருந்தபோது உக்ரைனுக்குச் செய்யும் உதவிகள் போதாது என வாதிட்ட இவர், புடினுடன் டொனால்டு டிரம்ப் 2025-இல் பேச்சுவார்த்தை நடத்தியதையும் எதிர்த்தார். உக்ரைன் ராணுவத்தால் ரஷ்ய வீரர்கள் கொல்லப்படுவது தான் “அமெரிக்காவின் சிறந்த முதலீடு” என்று சிரித்துக்கொண்டே குரூரமாகப் பேசினார். இது ரஷ்ய மக்களிடம் கடும் கோபத்தை விளைவித்ததால், ரஷ்ய அரசாங்கம் லிண்ட்சேவைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. மேலும், ரஷ்யாவில் ஒரு ‘புரூட்டஸ்’ உருவாகி, ஜனாதிபதி புடினை யாராவது ஒரு ரஷ்யரே பகிரங்கமாகக் கொல்ல வேண்டும் என்றும் வன்முறையைத் தூண்டினார்.

எப்படி நிகழ்ந்தது மரணம்?

இதயக்கோளாறு காரணமாகவே லிண்ட்சே மரணமடைந்தார் என அமெரிக்கா அறிவித்தாலும், ஒரு மர்மத் தகவல் உலா வருகிறது. அண்மைக்காலமாக உக்ரைன் ரஷ்யா மீது வலுவான ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மரணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, உக்ரைனில் உள்ள அத்தகைய ஒரு ரகசிய ட்ரோன் தொழிற்சாலைக்கு லிண்ட்சே சென்றபோது ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் நடந்துள்ளது. அதில் படுகாயமடைந்த அவர் தங்கியிருந்த விடுதியும் தாக்கப்பட்டது. பின்னர் அவர் போலந்து வழியாக அமெரிக்கா கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டா லும், பயண நேரக் கணக்கீடுகள் அமெரிக்கா வெளியிட்ட மரண நேரத்தோடு ஒத்துப் போகவில்லை. ரஷ்யத் தாக்குதலில் அவர் இறந்தாரா அல்லது படுகாயமடைந்து வந்து இறந்தாரா என்ற உண்மை வெளி உலகுக்குத் தெரியாமலே போகலாம்.

போர் வெறியின் ஒரு குரல் குறைந்துவிட்டது. ஆனால், ஏகாதிபத்தியம் முழுமை யாக மறைந்தால்தான் போர் வெறியும் உலகிலிருந்து முற்றிலும் மறையும்! - அன்வர் உசேன்