பாலின சமத்துவம் : எல்.ஐ.சி மகளிர் துணைக் குழுக்களின் 39 ஆண்டுகள் - ஆர். எஸ்.செண்பகம்
1 hour before

பாலின சமத்துவம் : எல்.ஐ.சி மகளிர் துணைக் குழுக்களின் 39 ஆண்டுகள் - ஆர். எஸ்.செண்பகம்

“இந்த சமூகத் தின் எல்லா நிறுவனங்களுமே ஆணாதிக்க கோட்டைகளாக உள் ளன; தொழிற்சங் கங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. பெண் தொழிலா ளர்களைச் சங்க நட வடிக்கைகளில் ஈடுபடுத்துவதும், அவர்களின் பிரத்தியேகப் பிரச்சனைகளை முன்னெடுப்பதும் தொழிற் சங்க இயக்கத்தின் கடமை.” — பி.டி. ரணதிவே (முன்னோடித் தலைவர், இந்திய தொழிற்சங்க இயக்கம்) தொழிற்சங்கம் என்பது பாலின பேதமின்றி, சமுதாயத்தில் நிலவும் அதிகார உறவுகளைத் தெளிவோடு எதிர்கொண்டு பயணிக்க வேண்டிய அமைப்பாகும்.

ஜெய்ப்பூர் தந்த திருப்பம்

1988 ஜெய்ப்பூர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாட்டில் தான் மகளிர் துணைக் குழுக்களை அமைப்பது, மகளிர் மாநாடுகளை நடத்துவது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதுவரை ஆண்களின் சங்கமமாக இருந்த மாநாடுகளில் பெண்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடியதாகவே இருந்தது. இம்முடிவுக்குப் பின், உழைக்கும் மகளிர் மாநாடுகளை நடத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. இந்தியாவில் உள்ள எல்.ஐ.சி கோட்டங்களிலேயே, கடந்த 39 ஆண்டுகளாக ஓராண்டு கூட தவறாமல் (கோவிட் காலம் உட்பட) மகளிர் மாநாடு களை நடத்திய பெருமை மதுரை மற்றும் கோயம்புத்தூர் கோட்டங்களைச் சாரும். ஆண்டு மாநாடுகளைக் கடந்து, 33% இட ஒதுக்கீடு மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான போராட்டக் களங்களாக இவை பரிணமித்துள்ளன.

கற்றுக் கொடுத்த களம்

இன்சூரன்ஸ் தனியார்மய எதிர்ப்பு இயக்கம் மகளிர் துணைக் குழுக்களைப் புதிய தளத்திற்கு அழைத்துச் சென்றது. பெண் தோழர்கள் தெருமுனைக் கூட்டங்களின் உரை வீச்சாளர்களா கவும், முழக்கமிடுபவர்க ளாகவும் மாறினர். மதுரை ராஜா முத்தையா மன்ற வாசலில் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் நின்று பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய வீரியமிக்க காட்சி, அங்கு வந்த ஆளுமைகளையே வியக்க வைத்தது. பெண்களின் இத்தகைய பங்கேற்பு அவர்களின் குடும்பங்களையும் தொழிற்சங்கத்தின் பால் ஈர்த்தது. பிள்ளைகள் அக்கம்பக்கத்து வீடுகளில் சென்று காப்பீட்டுத் துறைக்காகக் கையெழுத்து வாங்கி வந்தனர். கோவில் வாசல்களில் கூட இன்சூரன்ஸ் பாதுகாப்பு குறித்துப் பெண்கள் உரையாடினர். பெண்களின் பங்கேற்பு இயக்கத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தையுமே ஜனநாயகப்படுத்தியது.

பொம்மலாட்டம் அல்ல!

ஆரம்பக் காலத்தில் மகளிர் மாநாடுகளின் பின்புலப் பணிகளை ஆண்களே செய்து வழிநடத்தினர். ஆனால், பிற்காலத்தில் பொது மாநாடுகளையே விஞ்சும் அளவிற்குப் பெண்களே பேனர்கள் கட்டுவது, நாற்காலி களை ஒழுங்கு செய்வது என அனைத்தையும் முன்நின்று செய்தனர். முன்பு பொது மாநாடுகளில் பெண்களுக்கு ‘கோலம் போடுவது’ போன்ற வேலைப் பிரிவி னைகளே வழங்கப்பட்டன. “வீட்டு வேலையே இங்கேயுமா?” என்று கேள்வி எழுப்பிய பெண் தோழர்கள், களத்தில் செயல்வீரர்களாக மாறி னர். பரமக்குடி மாநாட்டிற்கு அதிகாலை 4 மணிக்கு வந்த அகில இந்திய இணைச் செய லாளர் தோழர் ஆர். கோவிந்தராஜனை வரவேற்கப் பெண் தோழர்கள் திரண்டிருந்தது முதல், ஓசூர் மாநாட்டில் ஏணியில் ஏறித் தோர ணம் கட்டுவது முதல் சமையல் பொருட்கள் வாங்குவது வரை பெண்களே முன்னின்று நடத்தியது வரை பல மாற்றங்கள் நிகழ்ந்தன. மனமகிழ் மன்றங்களில் நிலவிய புகை மண்டல கலாச்சாரத்தை எதிர்த்த பெண் தோழர்கள், “நாங்கள் விருப்பப்பட்டால் சிகரெட் பிடிப்பது வேறு; ஆனால் உங்களைப் போல மற்றவர்களைப் பாதிக்க மாட்டோம்” என்று ஆணாதிக்கப் பார்வைகளுக்குத் தெளிவான பதிலடி கொடுத்தனர். தற்போது கிளைகள் முதல் அகில இந்திய அமைப்பு வரை பெண்கள் பொறுப்பு வகிக்கின்றனர். சென்னை கோட்டம் 1 இன் பல கிளைகளைப் பெண் பொறுப்பாளர்களே முழுமையாக வழிநடத்துகின்றனர். பிரத்தியேக கோரிக்கைகளில் பெற்ற வெற்றிகள் பெண்கள் தங்களின் பிரத்தியேகப் பிரச்சனைகளை மாநாடுகளில் முன்வைத்து, அவற்றை ஒட்டுமொத்த சங்கத்தின் கோரிக்கைகளாக மாற்றிப் பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர்: மகளிர் ஓய்வறை: மாதவிடாய் காலப் பிரச்சனைகளை எடுத்துரைத்து, அனைத்து எல்.ஐ.சி அலுவலகங்களிலும் 100 சதுர அடி கொண்ட மகளிர் ஓய்வறை உறுதி செய்யப்பட்டது. தனிக் கழிப்பறைகள்: 30 ஆண்டு களுக்கு முன்பே பெண்களுக்கான தனிக் கழிப்பறை உரிமை போராடிப் பெறப்பட்டது. கருணை அடிப்படையிலான பணி நியமனம்: நான்காம் பிரிவு மற்றும் கருணை அடிப்படையிலான நியமனங்களில் பெண்களுக்கு நிலவிய தடைகளும் வரம்புகளும் தகர்க்கப்பட்டன. மகப்பேறு விடுப்பு: பெண்களின் மகப்பேறு விடுப்புக் காலம் 6 மாதங்களாக உயர்த்தப்பட்டது. பணி நியமன பிரதிநிதித்துவம்: நேர்கா ணல்களில் பெண்கள் புறக்கணிக்கப்படுவது எதிர்க்கப்பட்டதால், ஊழியர் எண்ணிக்கையில் பெண்களின் விகிதம் உயர்ந்தது. 1993 நியமனத்தில் சென்னை கோட்டம் 1 இல் 65% வரை பெண்கள் வேலை வாய்ப்புப் பெற்றனர். விரிந்த களம் மற்றும் பன்முகச் செயல்பாடுகள் சர்வதேச மகளிர் தினத்தில் விளிம்புநிலை மக்களுக்கு உதவுவது, சிஐடியு போன்ற பிற துறை உழைக்கும் மகளிர் அமைப்புகளைத் திரட்டுவது என இவர்களின் களம் விரி வடைந்தது. பாலியல் வன்முறைகளுக்கு எதிராக மதுரைக் கோட்டத்தின் “ஜீவிகா” (Gender Justice We Care) போன்ற முன்முயற்சி கள் மூலம் பொதும்பு பள்ளி வன்முறை, இராமேஸ்வரம் வன்முறை, அரியலூர் நந்தினி, புதுச்சேரி வினோதினி போன்ற பல வழக்குகளில் சட்ட மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர்.

சாதி ஆணவக் கொலையால் பாதிக்கப் பட்ட அனுசுயாவைச் சேலம் மகளிர் குழு கவனித்துக் கொண்டதோடு, வேலூர் மற்றும் சென்னைக் கோட்டம் 2 ஆகியவை அவரின் கல்விச் செலவை ஏற்றுக்கொண்டன. மேலும், பாலியல் வன்முறை-போதைக்கு எதிரான ஜன நாயக மாதர் சங்கத்தின் நடைப்பயணத்திலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பயணத்தி லும் பெண் ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர். மகளிர் கலைக்குழுக்கள் மூலமாகச் சேர்ந்திசை, நாடகம், தற்காப்பு கலைகள், வில்லிசை எனப் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தினர். சுனாமி, கஜா புயல், சென்னை வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது திருவொற்றியூர், முடிச்சூர், கடலூர் போன்ற பகுதிகளில் முழங்கால் தண்ணீரில் இறங்கிப் பெண் ஊழியர்கள் ஆற்றிய நிவாரணப் பணிகள் மறக்க முடியாதவை. 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அவநம்பிக்கைகளைத் தகர்த்து, எல்.ஐ.சி மகளிர் துணைக் குழுக்கள் இன்று சாதனை களின் சிகரமாக நிமிர்ந்து நிற்கின்றன.