அடுத்த தவணை எல்.ஐ.சி பங்கு விற்பனைகூடாரத்தில் நுழைந்த மூக்கும் கழுத்தும் - க.சுவாமிநாதன்
yesterday

அடுத்த தவணை எல்.ஐ.சி பங்கு விற்பனைகூடாரத்தில் நுழைந்த மூக்கும் கழுத்தும் - க.சுவாமிநாதன்

எல்.ஐ.சியின் முதல் தவணை பங்குவிற்பனை மே 2022 இல் நடந்தேறியது. 1956 இல் துவங்கியதில் இருந்து 66 ஆண்டுகளாக முழுமையான அரசு நிறுவனமாக இருந்த எல்.ஐ.சி.யின் கூடாரத்துக்குள் தனியார்மய ஒட்டகம் தனது மூக்கை முதலில் நுழைத்த தருணம் அது. 3.5 சதவீதபங்குகள்தான் அப்போது விற்கப்பட்டது. ஆகவே அரசு நிறுவனம் என்ற அந்தஸ்துக்கெல்லாம் ஆபத்து இல்லை,எதற்கு குய்யோ முறையோ என்று கதறுகிறீர்கள் என்று அப்பாவித்தனமாகவோ அல்லது அப்பாவி போன்று நைச்சியமாகவோ கேட்டவர்கள் உண்டு.ஆனால் பங்கு விற்பனை என்பது தனியார்மயத்திற்கான முதல் அடி என்று இடதுசாரிக் கட்சிகள் தெளிவாகக்கூறின.

“செபி” போடும் சாலை

இப்போது அடுத்த தவணை பங்கு விற்பனைக்கான அறிவிப்பு வந்துள்ளது. 6.5 சதவீத பங்குகள் சந்தைக்குக்கொண்டு வரப்படுகின்றன (அதில் 4.5 சதவீதம் கிரீன் ஷூ தெரிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது). ஒட்டகத்தின்மூக்கு அப்போது... இப்போது கழுத்து வரை உள்ளே தெரிகிறது.பங்குச் சந்தைக்குள் ஒரு நிறுவனம் வந்த பிறகு செபி விதிமுறைகளுக்கு உட்பட்டு அது பொது விற்பனைவிகிதத்தை உறுதி செய்ய வேண்டுமென்பது ஒரு டெக்னிக்கல் காரணமாக வணிக இதழ்களால் பேசப்படுகிறது. ஆனால்உண்மையில் இது டெக்னிக்கல் நகர்வு அல்ல.இன்னும் சொல்லப்போனால் செபி விதிமுறைகளால் பங்கு விற்பனை அடுத்த கட்டத்திற்கு நகர்வதில்லை. அடுத்த கட்டத்திற்கு பங்கு விற்பனை நகரவேண்டுமென்பதற்காகவே செபியின் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. செபி விதிகள் அரசின் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. அரசின் கொள்கைகளுக்கான சாலை வரைபடத்தை வரைவதே அதன் வேலை.உண்மையில் பொதுத்துறை தன்மை மீதான தாக்குதலே இந்த முடிவுக்குள் இருக்கும் நோக்கம். அரசு வங்கிகளில்பங்கு விற்பனை ஆரம்பித்த போதும் இப்படித்தான் துவங்கியது. 51 % வரை கூட அரசின் பங்குகள் ஆந்திரா வங்கிஉள்ளிட்டவற்றில் குறைக்கப்பட்டன. பின்னர் வாஜ்பாய் காலத்தில் 33 % வரை கூட அரசு பங்குகள்குறைக்கப்படலாமென்ற சட்ட வரைவு கொண்டு வரப்பட்டது. இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்களின்எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை. எல்.ஐ.சி மற்றும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 50 % அரசுப்பங்குகளை விற்று விட வேண்டுமென்றுதான் 1994 இல் மல்ஹோத்ரா குழு அறிக்கை கூறியது. ஆகவே அரசின்பங்குவிற்பனை நகர்வுகளை, வெறும் சதவீதக் கணக்காக மட்டும் பார்ப்பது தொலைநோக்கு அணுகுமுறை அல்ல. ஒருதிரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. கார் முட்டுகிறதா என்று பார்க்கச் சொன்னதற்குகார் சுவரில் முட்டுகிற வரை இல்லை... இல்லை... என்று சொல்லிவிட்டு கடைசியில் முட்டிடுச்சு என்று சொல்வார்.

வருமானத் திரட்டலின் பாரபட்சம்

அரசின் பொருளாதாரப் பாதையின் தோல்வியே, அரசுப் பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் நிதி திரட்டுவதற்கும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க முனைவதற்கும் முக்கியக் காரணம். ஒருபுறம் பெரும் கார்ப்பரேட்டுகள் 30 சதவீத லாபத்தைஎட்டியிருந்தாலும் முதலீடுகளுக்கான விருப்பத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. இது இந்தியாவின் டாப் 500 நிறுவனங்கள் பற்றிய பொருளாதார தலைமை ஆலோசகர் அனந்த்நாகேஸ்வரனின் கருத்து. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும்இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பாகப்புலம்பியிருந்தார்.கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைத்த பிறகும், வங்கிக் கடன்களில் ஹேர்கட் போன்ற சலுகைகளை வழங்கிய பிறகும், ஆதாரத் தொழில்வளர்ச்சிக்கு அரசு நிதியாதாரங்களைத் தந்த பின்னரும் கூட இப்படிமுதலீடுகளில் தனியார்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை.வருமான திரட்டலில் சூப்பர் ரிச் வரி போடலாம், கார்ப்பரேட் வரிகளை உயர்த்தலாம், வாரிசுரிமை வரியைஅறிமுகம் செய்யலாம் என்பது போன்ற மாற்று ஆலோசனைகளை எல்லாம் ஒன்றிய அரசு காதில் வாங்கவேஇல்லை. மாறாக பொதுத்துறை பங்கு விற்பனை, அரசு சொத்துக்களைப் பணமாக்கல் போன்ற வழிமுறைகள்நோக்கியே நகர்கிறது. இந்த நிதியாண்டில் ஏற்கெனவே கோல் இந்தியா உள்ளிட்ட 7 பொதுத்துறை நிறுவனங்களில்ரூ. 21,000 கோடி பங்கு விற்பனை நடந்துள்ளது. இப்போது எல்.ஐ.சி அடுத்த தவணை பங்கு விற்பனை மூலம் ரூ. 31,400கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 80,000 கோடியாக உள்ள அரசின் பங்கு விற்பனை பட்ஜெட்மதிப்பீட்டை எட்டுவதற்கு எல்.ஐ.சி பங்கு விற்பனைபெருமளவு உதவுமென்பதே அரசாங்கத்தின் கணக்கு.

அடித்தளத்தை நொறுக்கலாமா?

எல்.ஐ.சியின் பொதுத்துறை தன்மையை படிப்படியாக நீர்த்துப்போகச் செய்வது, நாட்டின் ஆதாரத் தொழில்வளர்ச்சிக்கான அடித்தளத்தின் கற்களை உருவுவதற்குச் சமானம். கடந்த ஜூலை 29, 2026 அன்றுதான் அரசுபங்குகளுக்கான 2025-26 க்கான டிவிடெண்ட் ரூ. 12,207 கோடியை நிதியமைச்சரிடம் எல்.ஐ.சி தலைவர் வழங்கிய செய்திகள் வந்தன. எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு ரூ. 59.03 லட்சம் கோடிகளைக் கடந்துள்ளது. டிவிடெண்ட் வாயிலாகவே பெரும் தொகையை அரசுக்கு எல்.ஐ.சி வழங்கி வரும் நிலையில், பங்கு விற்பனை என்பது குடை வாங்க காசு இல்லாவிட்டால் வீட்டின்ஓட்டைப் பிரித்து விற்பது போன்றது ஆகும். மாற்று வழிகள் இருந்தும் அவற்றைக் கையாளும் அரசியல் உறுதி ஆட்சியாளர்களிடம் இல்லை.பொதுத்துறை பங்கு விற்பனைக்கு எதிராக எழும் குரல்கள் உண்மையில் அரசின் தோல்வியடைந்த பொருளாதாரப் பாதையை, வருமான திரட்டலில் உள்ள பாரபட்சத்தை, அரசின் தலையீட்டைபொருளாதாரத்தில் குறைத்து தனியார் - பன்னாட்டு மூலதனத்தின் லாப வேட்டைக்குவழிவகுப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து மக்களைத் திரட்டுவதாக அமைய வேண்டும்.