நவபாசிசத்தை வேரறுக்க வெண்மணி வரலாற்றை நெஞ்சில் ஏந்துவோம்! பி.எல்.சுகதேவ்
24 Dec 2025, 3:39 pm

நவபாசிசத்தை வேரறுக்க வெண்மணி வரலாற்றை நெஞ்சில் ஏந்துவோம்!

1968 டிசம்பர் 25. உலகம் முழுவதும் கிறிஸ்து பிறப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த நள்ளிரவில், தமிழக வரலாற்றில் அழியாத வடுவாக ஒரு பெருந்துயரம் நிகழ்ந்தது. கீழத்தஞ்சையின் வெண்மணி கிராமத்தில் 44 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 57 ஆண்டுகள் கடந்தும், அந்தத் தீயின் வெப்பம் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டக் குரல்களில் இன்றும் தகித்துக்கொண்டிருக்கிறது. இருண்ட வாழ்க்கையும் பண்ணையடிமை முறையும் நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை இருண்டதாகவே இருந்தது. நிலங்கள் அனைத்தும் மடாலயங்களின் கையிலும், குன்னியூர், வலிவலம், வடபாதிமங்கலம் போன்ற பண்ணையார்கள் கையிலுமே இருந்தன. நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் சக மனிதர்களாகக் கூட நடத்தப்படவில்லை.

பண்ணையார் களின் தெருவில் செருப்பணிந்து செல்லக்கூடாது, பெண்களுக்குச் சரியான உடை உரிமை கிடையாது எனச் சாதியப் படிநிலையும் ஆணாதிக்கமும் உழைப்பை உறிஞ்சின. குழந்தைகளின் கல்வி மறுக்கப்பட்டு, அவர்கள் பண்ணைகளில் மாடு மேய்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தப்பித்தவறி பள்ளிக்குச் சென்றால் சவுக்கடியும், எதிர்த்துக் கேட்டால் சாணிப்பாலும் தான் பரிசாகக் கிடைத்தன. உழைப்புச் சுரண்டலின் உச்சம் பெண் தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. பிரசவித்த மறுநாளே வேலைக்கு வராவிட்டால் சவுக்கடி உண்டு. வேலை நேரத்தில் பாலுக்கு அழும் குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூட அனுமதி இல்லை. மார்பில் பால் கட்டிவிடக் கூடாது என்பதற்காக, அந்தத் தாய்மார்கள் வயல்வெளிகளில் பாலைப் பீச்சியடித்தனர். கீழத்தஞ்சையின் பொன்வயல்கள் காவிரி நீரால் மட்டுமல்ல, உழைக்கும் பெண்களின் தாய்ப்பாலோடும் ரத்தத்தோடும் கலந்தே விளைந்தன.

செந்நட்சத்திரம் உதித்த காலம் இந்தச் சூழலில் தான், உழைக்கும் மக்களின் விடிவெள்ளியாகப் பி.சீனிவாசராவ் எனும் செந்நட்சத்திரம் கீழத்தஞ்சைக்கு வந்தார். உயர்வகுப்பு எனப்பட்ட சமூகத்தில் பிறந்தாலும், தொழிலாளர்களின் குடிசைகளுக்கே சென்று அவர்களுடன் தங்கி, உண்டு, உறங்கி வர்க்க உணர்வை ஊட்டினார். “கூலியை உயர்த்தி கேள்”, “அடித்தால் திருப்பி அடி”, “இடுப்புத் துண்டை தோளில் ஏற்று” என அவர் முழங்கிய இடங்களில் எல்லாம் சிவப்புக் கொடி பண்ணையார்களை அதிரச் செய்தது. செங்கொடி உழைக்கும் மக்களின் விடியலுக்கான அடையாளமாக மாறியது. மணலூர் மணியம்மை, வெங்கடேச சோழகர், மணலி கந்தசாமி, பி.எஸ். தனுஷ்கோடி போன்ற படைத்தளபதிகள் இப்போராட்டத்தை முன்னின்று நடத்தினர்.

வெண்மணி - கொடூரத்தின் உச்சம் 1968 டிசம்பர் 25 அன்று, கூலி உயர்வு கேட்டுப் போராடிய வெண்மணி மக்களின் ஒற்றுமையைச் சகித்துக்கொள்ள முடியாத பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாட்கள் துப்பாக்கிகளுடன் புகுந்தனர். தப்பிக்க முயன்ற 44 பேர் (முதியவர்கள், பெண்கள், குழந்தைகள்) ராமையன் என்பவரின் சிறிய குடிசைக்குள் தஞ்சம் புகுந்தனர். அந்தத் தார்மீகமற்ற மனித மிருகங்கள் குடிசைக்குத் தீயிட்டன. தீயிலிருந்து தப்பிக்க ஒரு தாய் தன் குழந்தையை வெளியே வீச, அந்தக் குழந்தையையும் வெட்டி மீண்டும் தீயிற்குள்ளேயே வீசியது பண்ணையாரின் கும்பல். 44 உயிர்களும் கருகிச் சாம்பலாயின.

நீதிமன்றமும் மக்கள் நீதியும் இந்தக் கொடூரத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றபோது, “ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் ஒரு பண்ணையார் இத்தகைய செயலைச் செய்திருப்பார் என்று நாங்கள் நம்பவில்லை” எனக் கூறி, உயர்நீதிமன்ற நீதிபதி மகாராஜன், கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுவித்தார். நீதி மன்றம் தவறான தீர்ப்பை மட்டுமே வழங்கியது, ஆனால் நீதியை மக்கள் வழங்கினர். வர்க்கப் போராட்டத்தின் ஈட்டி முனை இது வெறும் அரைப்படி நெல் கூலி உயர்வுக்கான போராட்டம் மட்டுமல்ல.

“செங்கொடியை இறக்கிவிட்டு மஞ்சள் கொடியை ஏற்றுங்கள், கூலியை உயர்த்தித் தருகிறோம்” எனப் பண்ணையார்கள் பேரம் பேசியபோது, “எங்கள் உயிர் போனாலும் செங்கொடியை இறக்க மாட்டோம்” என உறுதி காட்டிய வீர வரலாறு இது. இன்று நிலப்பிரபுத்துவக் கூறுகளோடு பெருமுதலாளித்துவ மும் மதவெறியும் இணைந்து நவபாசிசப் போக்கில் செல்கிற ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, வெண்மணி தியாகிகளின் வரலாறு ஒரு பெரும் ஆயுதம். வர்க்கப் போராட்டத்தின் வீரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது நம் கடமை. வெண்மணி தியாகிகளின் நினைவைப் போற்றி, பாசிசத்தை வேரறுத்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்.