மோடி அரசின் நாசகர தொழிலாளர் சட்டங்களை முறியடிப்போம்!
2 Feb 2026, 3:32 pm
<p><strong>மோடி அரசின் நாசகர தொழிலாளர் சட்டங்களை முறியடிப்போம்!</strong></p>
<p>சென்னை, பிப். 2 - “பிப்ரவரி 12 அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்வதன் மூலம், மோடி அரசின் நாசகர தொழிலாளர் சட்டங்களை முறியடிப்போம்!” என்று சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. சிஐடியு மாநில நிர்வாகக்குழு கூட்டம், சென்னையில் மாநில தலைவர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணைத்தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், பொரு ளாளர் எஸ். ராஜேந்திரன், உதவிப் பொதுச் செயலாளர்கள் வி. குமார், கே. திருச்செல்வன், கே. ஆறுமுக நயினார், இ. முத்துகுமார் உட்பட மாநில நிர்வாகிகளும், நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். இக்கூட் டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கத் தடையாக உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை, ‘சீர்திருத்தம்’ என்ற பெயரால், அவற்றை சீர்குலைத்து, 4 சட்டத் தொகுப்புகளாக ஒன்றிய பாஜக அரசு அமலாக்கியுள்ளது. இந்த தொகுப்பு சட்டங்கள் மூலம் நிறுவனப்படுத்தப்பட்ட துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் 70 சதவிகிதமானவர்கள், அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் 90 சதவிகிதமானவர்கள் சட்ட பாதுகாப்பற்றவர்களாக மாற்றப்படும் ஆபத்தை உண்டாக்கியுள்ளது. மேலும் சங்கம் வைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமை, வேலைநிறுத்த உரிமை போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமையையும் பறிப்பனவாகவும் இந்த சட்டத் தொகுப்புகள் உள்ளன. இவை நவம்பர் 21 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் மோடி அரசு அறிவிக்கையை வெளியிட்டது. இதற்கு எதிராக சிஐடியு உள்ளிட்ட மத்தியத் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு இயக்கங் களை நடத்தி வரும் நிலையில், கிராமப்புற மக்களின் ஜீவாதார திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்க்குலைக்கும் வகையில், அந்த சட்டத்தையும் மோடி அரசு திருத்தியுள்ளது. மின்சார திருத்த சட்டம் என்ற பெயரில் மின்சார துறையில் தனி யாரை அனுமதித்துள்ளது. மேலும் விவசாயி களை பாதிக்கக்கூடிய விதை சட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மிக ஆபத்தான அணுசக்தி உற்பத்தியில் பன்னாட்டு நிறு வனங்களை அனுமதிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. மக்களின் காப்பீட்டுத் தொகையை கபளீகரம் செய்ய பன்னாட்டு முதலீட்டை முழுமையாக அனுமதித்துள்ளது. இத்தகைய நாசகர சட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்களும், தொழில்வாரி சம்மேளனங்களும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் இணைந்து, பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. தொழிலாளர் வர்க்கத்தின் இந்த மாபெரும் போராட்டத்திற்கு மாதர், வாலிபர், மாணவர், மாற்றுத் திறனாளி அமைப்புகள் துவங்கி, வங்கி, காப்பீடு, தொலைத்தொடர்பு, அஞ்சல் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசு ஊழியர் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, அன்றைய தினம் நடைபெறும் வேலைநிறுத்தம் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக தொழிலாளி வர்க்கம் பெரும் எண்ணிக்கையில் பங்கெடுக்க வேண்டுமாய் சிஐடியு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.</p>
