பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
12 Apr 2026, 3:36 pm

பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நல குறைவு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரை உலகில் 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகி ஆஷா போஸ்லே, தனது குரல் வளத்திற்காக 2011ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றவர். இவர் நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அதீத சோர்வு மற்றும் நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆஷா போஸ்லேயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஏப்ரல் 13-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மும்பை லோயர் பரேலில் உள்ள அவரது இல்லமான காசா கிராண்டே வளாகத்தில் வைக்கப்படும் என்று அவரது மகன் ஆனந்த் போஸ்லே தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மாலை 4 மணி அளவில் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று மகாராஷ்டிர அமைச்சர் ஆஷிஷ் ஷெலார் அறிவித்துள்ளார்.