அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அம்பலப்படுத்தி, சோசலிச கியூபாவை பாதுகாப்போம்!
15 Jun 2026, 9:58 pm

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அம்பலப்படுத்தி, சோசலிச கியூபாவை பாதுகாப்போம்!

மதுரை, கோவையில் இடதுசாரி தலைவர்கள் பிரகடனம்!

மதுரை/கோயம்புத்தூர், ஜூன் 15- உலக அளவில் உழைப்பாளி வர்க்கத்தைச் சுரண்டும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் உச்சகட்ட வடிவமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதித்திட்டங்களை வீழ்த்தி, சோசலிசக் கியூபாவை அரணாக நின்று பாதுகாப்போம் என்று இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள் முழக்கமிட்டனர்.

உலக ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமான புரட்சியாளர் சேகுவேராவின் பிறந்த நாள் மற்றும் கியூபப் புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவலின்படி ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 14) தமிழகம் முழுவதும் கியூப ஆதரவு இயக்கங்கள் எழுச்சியுடன் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மற்றும் கோவையில் நடைபெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு மற்றும் கருத்தரங்குகளில் இடதுசாரித் தலைவர்கள் பேசினர்.

மதுரையில் எழுச்சிமிக்கக் கருத்தரங்கம்

மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை அரங்கில் சிபிஎம் மாநகர் மாவட்டக் குழு சார்பில் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா மற்றும் மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி.நாகராஜன் ஆகியோர் பேசினர். இக்கருத்தரங்கில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் பேசுகையில், “உலகில் அதிகமுறை அச்சிடப்பட்ட சேகுவேராவின் முகம், நமக்குள் இருக்கும் நீதியின் குரலையும் அதிகாரத்திற்கு எதிரான சமரசமற்ற உணர்வையும் எழுப்பக்கூடியது. எல்லையைத் தாண்டி உலக மக்களின் விடுதலைக்காகப் போராடிய தனித்துவம் மிக்கவர் அவர். இன்று கியூபா கடுமையான பொருளாதாரத் தடைகளையும், மின்தடைகளையும் எதிர்கொண்டாலும் கொள்கையிலிருந்து பின்வாங்காமல் நிற்கிறது. மார்க்ஸ் கூறியபடி முதலாளித்துவம் வளர வளரச் செல்வக்குவிப்பு அதிகரிக்கிறது. இன்று எலான் மஸ்க் 1.1 டிரில்லியன் டாலர் சொத்துகளுடன் உலகின் முதல் டிரில்லியனராக உயர்ந்துள்ளார். இந்தியாவில் 1 சதவீத மக்களின் கைகளில் 52 சதவீத செல்வம் குவிந்துள்ளது. உலக அரசியலைப் பெரும் முதலாளிகள் தீர்மானிக்கக் கூடாது, சாதாரண மக்களே தீர்மானிக்க வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த உலகை உருவாக்கப் புதிய தலைமுறையிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலைக் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார். தொடர்ந்து, மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், “அமெரிக்காவின் மூக்கின் நுனியில் அமைந்துள்ள சிறிய நாடான கியூபாவில் சோசலிசம் நிலைநிறுத்தப்பட்டிருப்பதை அமெரிக்காவால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

1992 முதல் ஐ.நா. பொதுச்சபையில் கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்கக் கோரி பெரும்பாலான நாடுகள் வாக்களித்தாலும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து வருகிறது. எத்தனையோ இன்னல்கள் வந்தாலும், ‘சோசலிசம் அல்லது வீரமரணம்’ என்ற முழக்கத்தின் பின்னால் கியூபா மக்கள் உறுதியாக நிற்கிறார்கள். பாலஸ்தீனம், இராக் போன்ற பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவ உதவிகளையும், குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளையும் வழங்கி கியூபா சாதனை படைத்துள்ளது. கியூப மக்களின் சாதனைகளையும், ஏகாதிபத்தியத்தின் அராஜகங்களையும் உலக மக்களிடம் கொண்டு சென்று நாம் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார். மதுரை தெற்குப் பகுதி குழுச் செயலாளர் ஜெ.லெனின் நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் மாநிலக் குழு உறுப்பினர் த.செல்லக்கண்ணு, மாநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், வை.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோவையில் இடதுசாரிகள் பிரகடனம்

கோவையில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற கியூபா ஆதரவு சிறப்பு கருத்தரங்கிற்குச் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். சிபிஐ (எம்-எல்) மாவட்டக் குழு உறுப்பினர் நவாஸ் வரவேற்றார். சிபிஐ மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி கருத்தரங்கத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார். சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். இக்கருத்தரங்கில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசுகையில், “இலவச கல்வி, இலவச மருத்துவம், மக்களின் சொத்து மக்களுக்கே என்ற உன்னதக் கொள்கையைக் கொண்ட கியூபாவை அடியோடு கபளீகரம் செய்ய அமெரிக்கா தீவிரமாக முயல்கிறது.

கியூபாவைக் கைப்பற்றப் போவதாக டொனால்டு டிரம்ப் பேசி வரும் சூழலில், கரீபியன் கடலில் அமெரிக்காவின் ‘மினிட்ஸ்’ போர்க்கப்பல் வலம் வருவதுடன், நூற்றுக்கணக்கான உளவு டிரோன்களும் பறந்து கொண்டிருக்கின்றன. இந்த ஏகாதிபத்திய ஆபத்திலிருந்து கியூபாவை மீட்டெடுக்க, கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடத் தயாராக உள்ள கியூப மக்களுக்கு ஆதரவாக இந்தியர்களாகிய நாமும் உலக மக்களுடன் இணைந்து குரல் எழுப்ப வேண்டும்” என்று பேசினார். இந்த எழுச்சிமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களில் மாவட்ட, வட்டாரத் தலைவர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் திரளாகப் பங்கேற்று தங்களின் சர்வதேச ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.