இடைத்தேர்தலும் இடதுசாரிகளும் - பெ.சண்முகம்
22 Sept 2026, 9:44 pm

இடைத்தேர்தலும் இடதுசாரிகளும் - பெ.சண்முகம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் இயல்பாகவோ, இயற்கையாகவோ வந்தது அல்ல; அந்தத் தொகுதி மக்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட தேர்தலாகும்.

பொறுப்பற்ற ராஜினாமாவும் மக்களின் கேள்வியும்

சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் திடீரென்று 20 நாட்களில் ராஜினாமா செய்கிறார்கள். அன்றைய தினமே தவெக கட்சியில் சேர்கிறார்கள். இப்போது அதே நபர்கள், ‘மீண்டும் எங்களை சட்டமன்ற உறுப்பினர் ஆக்குங்கள்’ என்று போட்டியிடுகிறார்கள். ‘ஏன் ராஜினாமா செய்தார்கள்’ என்பதற்கான காரணம் எதையும் அப்போது அவர்கள் தெரிவிக்கவில்லை. இதனால், ‘அவர்கள் அடைந்த ஆதாயம் என்ன’ என்ற கேள்வி இயல்பாகவே மக்களிடம் எழுந்துள்ளது. இதற்கான விடையை அவர்கள்தான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் பூனைக்குட்டி தானாக வெளிவரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். அதேநேரத்தில் அவர்களுக்குப் பாடம் புகட்ட மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தேர்தலில் அவர்களைத் தோற்கடிப்பது இவர்களுக்கு மட்டுமல்ல, இதுபோன்று பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். எனவே, இரண்டு தொகுதி வாக்காளர்களும் இந்த வாய்ப்பை தவறவிட்டுவிடக் கூடாது. இதுபோன்ற நபர்களுக்கு, தான்தோன்றித்தனமாக, நெறி தவறி நடந்துகொண்டால் மக்கள் தண்டிப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட வேண்டும்.

இடதுசாரிகளின் தனித்துவமான நிலைப்பாடு

தேர்தல் களத்தில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. தவெக தலைமையில் ஒரு அணி, அதிமுக - பாஜக அணி, திமுக அணி. இந்த அணிகள் எதனோடும் இடதுசாரிகள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதேநேரத்தில் பாமக போல் தேர்தல் புறக்கணிப்பும் பொருத்தமாக இருக்காது என்று முடிவு செய்தோம்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எழுந்த பிரத்யேக அரசியல் சூழலில் தவெக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பது என்று இடதுசாரிகள் முடிவு செய்தோம். அது மிகச்சரியான முடிவு என்பதுதான் கடந்த நான்கு மாத கால அனுபவம். இந்த ஆட்சியின் நிதிநிலை அறிக்கை, நிறைவேற்றப்பட்ட பல சட்டங்கள், முதலமைச்சரின் பல அறிவிப்புகள் ஆகியவற்றிற்கு மாறுபட்ட கருத்துக்களையும், கண்டனங்களையும், போராட்டங்களையும் நடத்தி இருக்கிறோம். அமைச்சரவையில் சேர்ந்திருந்தால் எங்களின் மாறுபட்ட நிலையைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாமல் தவறுகளுக்குத் துணைபோகும் அவல நிலைக்கு உள்ளாகி இருப்போம். பாராட்டி, வரவேற்க வேண்டிய விஷயங்களில் தயக்கமில்லாமல் செயல்பட்டுள்ளோம்.

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்”

என்பது குறள். இந்த அணுகுமுறையைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். நாங்கள் எதிர்த்துக் கருத்தைத் தெரிவிக்கும் போதெல்லாம், “அப்படியென்றால் ஆதரவை வாபஸ் வாங்க வேண்டியதுதானே” என்ற குரல் வருகிறது. எதற்காக ஆதரவு கொடுத்தோமோ அதற்கான காரணங்கள் தொடர்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமைய வேண்டும்; பெரும்பான்மை இல்லை என்பதை பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு, ஜனாதிபதி மூலம் தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் தன் வசப்படுத்திவிடக் கூடாது; திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பது என்ற அப்பட்டமான சந்தர்ப்பவாதத்திற்கும் துணைபோகக் கூடாது என்ற அடிப்படையில்தான் தவெக அரசுக்கு ஆதரவு தருவது என்ற அரசியல் ரீதியான முடிவு மேற்கொள்ளப்பட்டது.

பாஜகவின் பாசிச நடவடிக்கைகளும் எதிர்ப்பும்

ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜக, நாடு முழுவதும் தங்களுடைய கட்சி மட்டுமே ஆட்சியில் இருக்க வேண்டும், ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. அதற்காகச் சாம, பேத, தான, தண்டம் என எல்லா வழிகளிலும் அது முயற்சித்து வருவதை நாம் அறிவோம். கட்சிகளை உடைப்பது, சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசி வாங்குவது, ஆசை காட்டுவது, அள்ளிக் கொடுப்பது, அச்சுறுத்துவது, அமலாக்கத்துறை, மத்தியப் புலனாய்வுத்துறை, வருமான வரித்துறையை ஏவி சோதனை என்ற பெயரில் மிரட்டுவது எனச் சட்டத்திற்குப் புறம்பாகவும், நெறிமுறை தவறியும் அது நடந்துகொள்கிறது.

தமிழ்நாட்டிலும் அத்தகைய நிலைமை வந்துவிடக் கூடாது. ஆளுநர் அப்படிச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார். ஆட்சி மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் தவெக அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு தொடரும் என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளோம். இந்த நிலைபாட்டில் மாற்றம் இல்லை. எடுத்துரைப்பதும், இடித்துரைப்பதும், போராடுவதும் தொடரும். மேற்குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காக இந்த ஆட்சிக்கு ஆதரவு என்பதை எங்களின் தனித்த நிலையைத் தக்கவைத்துக் கொண்டே நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம்.

அரசியல் காரணங்களுக்காக தவெகவுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் திமுக அணியை ஆதரிப்பதும் பொருத்தமானதோ, சாத்தியமானதாகவோ இருக்காது.

அதிமுக - பாஜகவோடு சேர்ந்து தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த பிறகும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மாறாக, இடைத்தேர்தலிலும் அந்தக் கூட்டணி தொடர்கிறது.

தேசம் முழுவதும் பாஜக தனது வகுப்புவாத, கார்ப்பரேட் ஆதரவு, பாசிச நடவடிக்கை கள் மூலம் மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை வளர்த்து வருகிறது. எனவே, அதை எதிர்த்த போராட்டத்தைச் சமரசமின்றித் தொடர வேண்டிய அவசியமுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றம் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதும் முக்கியமானது.

சட்டமன்றத்தில் இடதுசாரிகளின் பலம் அவசியம்

இத்தகைய சூழ்நிலையில்தான் இடதுசாரிகள் இணைந்து இடைத்தேர்தலை எதிர்கொள்வது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்றத்தில் இடதுசாரிகளின் பலம் அதிகரிப்பது அவசியம். நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், பிரதான கட்சிகளின் செயல்பாட்டையும், இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களின் செயல்பாட்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்லும் உறுப்பினர்கள் மக்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலன் களுக்காகவும் ஒவ்வொரு மணித்துளியையும் பயன்படுத்த வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக வெற்றுக் கூச்சல்கள், சச்சரவுகள், நேரத்தை வீணடிப்பது என்ற அணுகுமுறையைத்தான் பார்த்தோம். இடதுசாரிகள் மற்றும் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டனர். எனவே, இடதுசாரிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுச் செல்வது மக்களின் குரலை வலுப்படுத்தும். மாநிலம் முழுவதுமுள்ள உழைப்பாளி மக்களின் குறைகள், கோரிக்கைகள் எதிரொலிக்கும் மன்றமாகச் சட்டமன்றம் மாறும். எனவே,மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் இடதுசாரி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தமிழக மக்கள் இடதுசாரிக் கருத்தியலுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் அந்த நிலை தொடர்கிறது. அதே நேரத்தில் தேர்தல் அரசியலிலும் இடதுசாரிகள் வெற்றிபெற வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி மன்றங்களில்பணியாற்றும் இடதுசாரிகளின் செயல்பாட்டைச் சீர்தூக்கிப்பார்த்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் முடிவெடுங்கள்.

2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு 64 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் நலன் சார்ந்த பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றச் செய்தோம். குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டம், பழங்குடியினர் மற்றும் வனத்தைச் சார்ந்து வாழும் இதர பிரிவினருக்கு வனத்தின் மீதான உரிமைகள் வழங்கும் சட்டம் - 2006, தகவல்அறியும் உரிமைச் சட்டம் என்று பல சாதனைகளைச் சொல்ல முடியும். எனவே,இடதுசாரிகளின் பலம் சட்டமன்றத்தில் அதிகரிப்பது தமிழக உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மக்களுக்குப் பாதகமான நடவடிக்கைகளை எதிர்த்துச் சமர் புரியவும் பயன்படும். எனவே, இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவுக்கு மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் அளிக்கும் பேராதரவு எதிர்கால அரசியல் திசை வழியைத்தீர்மானிக்கத் திறவுகோலாக அமையட்டும்.