சீனத் தூதரகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்துகொண்ட சிபிஎம் உட்பட இடதுசாரி கட்சி தலைவர்கள்!
10 Jul 2026, 4:10 pm

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவப்பட்டு 105 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.அருண்குமார் மற்றும் பிற இடதுசாரி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் உரையாற்றிய எம்.ஏ.பேபி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதன் தலைமைக்கும், சீன மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் பேசிய அவர், கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து முழுமையான வறுமையை ஒழித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி சீனாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்குத் தலைமை தாங்கி வரலாற்றுச் சாதனைகளை பாடைத்துள்ளதாக பாராட்டினார்.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நாகரிகத் தொடர்புகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒற்றுமையின் பகிரப்பட்ட மரபு மற்றும் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் தொடர்ச்சியான முக்கியத்துவம் ஆகியவற்றை அவர் நினைவு கூர்ந்தார். இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி என்பது ஒன்றின் இழப்பில் மற்றொன்று ஆதாயமடையும் (zero-sum game) போட்டி அல்ல என்பதை வலியுறுத்திய அவர், இருதரப்பு வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர புரிதலின் மூலம் தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வில், இந்தியாவுக்கான சீனத் தூதர் சு ஃபெய்ஹோங் (Xu Feihong) சிறப்புரையாற்றினார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் (AIFB) பொதுச் செயலாளர் ஜி.தேவராஜன், சிபிஐ(எம்.எல்.) லிபரேஷன் மத்தியக் குழு உறுப்பினர் ராஜீவ் திம்ரி உள்ளிட்டோரும் உரையாற்றினர்.