சென்னை விரைவு செய்திகள்
3 Dec 2025, 2:59 pm

திருவண்ணாமலை தீப விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை, டிச. 3- திருவண்ணாமலை புதனன்று (டிச.3) கார்த்திகை தீப விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தீப விழாவின்போது பொதுமக்களின் நலனுக்காக இந்து சமய அறநிலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும், உள்ளூர் பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளுக்குச் செல்ல போதுமான வழி வசதி இல்லாமல் அல்லல் பட்டனர். திருவண்ணாமலைக்கு வந்த வெளியூர் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கழிவறைகளில் பல இடங்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்தி இருந்தாலும், அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் வெளியில் செல்வதற்கு போதிய வழியில்லாத நிலை ஏற்பட்டது. வெளியூர்களிலிருந்து பாதுகாப்பு பணிகளுக்காக வந்திருந்த காவல்துறையினருக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யாததால் காவல்துறையினர் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். இந்நிலையில் மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை மீது தீபம் ஏற்றப்பட்டது. தீபவிழாவிற்கு வருகை தந்த லட்சக்கணக்கான மக்கள் மலையைச் சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.

தொடர் மழையால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

சென்னை, டிச. 3- டிட்வா புயல் காரணமாக கடந்த 1ஆம் தேதி முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. இடைவிடாது மழை பெய்வதால் சில இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட குறைந்து காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகர் முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கருமேகங்கள் சூழ்ந்து ஊட்டியில் இருப்பது போல் காட்சி அளிக்கிறது. பெரும்பாலன மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், பழக்கடைகள் உள்ளிட்ட சாலையோரம் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடந்த 8 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

காலமானார்

புதுச்சேரி, டிச.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுச்சேரி மாநில குழு உறுப்பினர் அ.இளவரசியின் தாயார் அஞ்சலை அம்மாள் காலமானார். அவருக்கு வயது 80. புதுச்சேரி மாநிலம், வாதானூரில் வசித்து வந்தவர், உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை (டிச.3) காலமானார்.வாதானூரில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு சிபிஎம் புதுச்சேரி மாநிலக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா, ராஜாங்கம்,தமிம்செல்வன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சங்கர், அன்புமணி, சரவணன் உள்ளிட்ட பலர் நேரில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.அன்னாரது இறுதி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது‌.