குறிச்சி ஊராட்சியில் தொடரும் சிறுநீரகக் கோளாறு மரணங்கள்
5 Jun 2026, 12:57 am

குறிச்சி ஊராட்சியில் தொடரும் சிறுநீரகக் கோளாறு மரணங்கள்

ஈரோடு, ஜூன் 4 - பாதுகாப்பற்ற உப்பு நீரைக் குடிப்பதாலும், போதிய தண்ணீர் குடிக்காததாலும் கடுமையான சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படுவது ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட குறிச்சி ஊராட்சியின் அவலமாக மாறியுள்ளது.

குறிப்பாகச் செல்லங்குட்டை, கருங்கண்ணி காட்டூர் ஆகிய பகுதிகளில் நிலவி வரும் இந்த மோசமான உடல்நலப் பாதிப்பு குறித்துத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அவசரப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் நிலத்தடி உப்புத் தண்ணீரைத் தொடர்ந்து குடித்ததால் சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டுச் சிலர் உயிரிழந்துள்ளனர்; பலர் தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே, இப்பகுதி மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட காவிரி ஆற்று உப்புக் கலப்பற்ற குடிநீரை விநியோகிக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் எனச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.வி. மாரிமுத்து வலியுறுத்தியுள்ளார்.

மகனுக்குச் சிறுநீரகம் தந்த தாய் இப்பாதகமான சூழல் குறித்துச் செல்லங்குட்டைப் பகுதியைச் சேர்ந்த மாதம்மாள் கூறுகையில், “எந்தவொரு தீயப் பழக்கமும் இல்லாத எனது 30 வயது மகன் சோளக்கவுண்டர், கடந்த 10 வருடங்களாகச் சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இங்கே விநியோகிக்கப்பட்ட உப்புக் கழிவுத் தண்ணீரைத் தொடர்ந்து குடித்ததே இதற்குக் காரணம்.

அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கத் தாமதமானது. இறுதியில், மருத்துவர்களிடம் அழுது போராடி 50 வயதான எனது சிறுநீரகத்தை மகனுக்குத் தானமாக வழங்கினேன்.

விவசாய வேலை செய்து வந்த அவருக்கு இந்நிலை ஏற்பட்டதால், அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளும் தவித்து வருகின்றனர். அன்று பயன்பாட்டிலிருந்த ஆழ்துளைக் கிணறு மாற்றப்பட்டு, அதன் அருகிலேயே புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தான் இன்றும் தண்ணீர் விநியோகிக்கிறார்கள்.

ஆற்றுத் தண்ணீர் வருவதே இல்லை; வேறு வழியின்றி இந்த நச்சுத் தண்ணீரையே குடித்து வருகிறோம்” என வேதனை தெரிவித்தார். தொடரும் டயாலிசிஸ் பாதிப்புகள் மறுபுறம், இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மீண்ட சேகர் என்பவர் கூறுகையில், “தண்ணீர் பிரச்சனையால் பலருக்குச் சிறுநீரகம் செயலிழந்து, கற்கள் உருவாகி டயாலிசிஸ் செய்து வருகின்றனர்.

நானே இதனால் பாதிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களாக டயாலிசிஸ் செய்தேன். பின்னர் எனது தாயிடமிருந்து சிறுநீரகம் பெற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.

இப்போது எந்த வேலைக்கும் செல்ல முடிவதில்லை. ஆற்றுத் தண்ணீருக்காகப் பாடுபட்ட சண்முகம் என்பவர், சிறுநீரகப் பாதிப்பால் 6 மாதம் படுக்கையிலிருந்து அண்மையில் இறந்துபோனார்.

அவரைப் போலவே செல்வம் என்பவரும் உயிரிழந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக நீடிக்கும் இப்பிரச்சனை குறித்துப் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

பொதுவாக உடலில் நீர்ச்சத்து குறையும் போது, சிறுநீர் அடர்த்தியாக மாறிக் கழிவுகள் படிகங்களாக உருவெடுத்துக் கற்களை உருவாக்குகின்றன. இதுவே சிறுநீரகச் செயலிழப்பிற்கும், சிறுநீர் பாதைத் தொற்றுக்கும் வழிவகுக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் முறையான மருத்துவ ஆய்வு மேற்கொண்டால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மை எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு ஆற்று நீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

- சக்திவேல்