கிருஷ்ணகிரியில் விரைவில் மாங்கூழ் தொழிற்சாலை: மாங்கனி கண்காட்சி துவக்கவிழாவில் ஆட்சியர் தகவல்
11 Jul 2026, 10:36 pm
<p><strong>கிருஷ்ணகிரியில் விரைவில் மாங்கூழ் தொழிற்சாலை: மாங்கனி கண்காட்சி துவக்கவிழாவில் ஆட்சியர் தகவல் </strong></p><p>கிருஷ்ணகிரி, ஜூலை 11- கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில், 32-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமை தாங்கி கண்காட்சியைத் திறந்து வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் முகுந்தன், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மாங்கூழ் தொழிற்சாலை விழாவில் ஆட்சியர் தினேஷ்குமார் பேசுகை யில், “மா விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், அரசு சார்பில் மாங்கூழ் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும். மா சாகுபடியில் விவசாயிகளின் நஷ்டத்தைத் தவிர்க்கவும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் தமிழக அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான மானியம் மற்றும் தொழிற்சாலை குறித்த அறிவிப்பை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிடுவார். வளைகுடா நாடுகளில் தேக்கம் அடைந்துள்ள மாங்கூழ்களை இந்தோனேசியா, வியட்நாம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார். மேலும், விவசாயிகள் மாம்பழங்களை உலகம் முழுவதும் சந்தைப்படுத்துவதற்கான ‘அப்பிட்டா’ பயிற்சி முறைகளைக் கற்றுக்கொண்டு, விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியர் வலியுறுத்தினார். விழாவின் ஒரு பகுதியாக, கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசுத் துறை களின் அரங்குகளை ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து, 24 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முன்னதாக, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சர் ஆகியோர் விழாவைத் தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் விழாவில் கலந்துகொள்ளவில்லை. விழா முடிவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.</p>
