தேசிய நெடுஞ்சாலைப் பணியால் பட்டா நிலம் பாதிப்பு விவசாயிகள் சங்கத்தின் காத்திருப்புப் போராட்டம் வெற்றி!
15 May 2026, 1:15 am

தேசிய நெடுஞ்சாலைப் பணியால் பட்டா நிலம் பாதிப்பு விவசாயிகள் சங்கத்தின் காத்திருப்புப் போராட்டம் வெற்றி!

கிருஷ்ணகிரி, மே 14 – தருமபுரி, ராயக்கோட்டை மற்றும் ஓசூர் வழியாகப் பெங்களூரு செல்வதற்காக, புதிய 844 தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இச்சாலையை ஒட்டி உத்தனப்பள்ளியின் பின்புறம், சர்வே எண் 1156/6 இல் மஞ்சுநாத் என்பவருக்குச் சொந்தமான 46 சென்ட் பட்டா நிலம் உள்ளது.

இப்பகுதியில் அரசு புறம்போக்குக் குட்டையின் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்குச் சாலை ஒப்பந்ததாரர்கள் அணுகு சாலை அமைக்கவில்லை.

இதனால், மழைக்காலங்களில் வரும் நீர், 20 அடி பள்ளத்தில் தாழ்வாக இருக்கும் மஞ்சுநாத்தின் நிலத்தைப் பாதிக்கும் சூழல் உருவானது.

இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைப்படி, நிலத்தைப் பாதுகாக்க மண் கொட்டி மேடாக்கிய உரிமையாளர்கள், தங்களது சொந்த நிலத்தில் சுற்றுச்சுவர் அமைத்தனர்.

இங்கு அணுகு சாலை அமைக்கக் கோரியும், கால்வாய் வழி தவறாக அமைக்கப்பட்டதைச் சரிசெய்யக் கோரியும் மாவட்ட ஆட்சியர், சூளகிரி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

ஆனால், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், மாறாகச் சொந்த நிலத்தில் கட்டப்பட்ட சுவரை மே 11 அன்று இடிப்போம் என மிரட்டினர்.

அதன்படி, மே 11 அன்று அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் அங்கு குவிந்தனர்.

தகவலறிந்து திரண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சூளகிரி வட்டக் குழுவினர், சுவரை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து அந்த இடத்திலேயே அமர்ந்து அதிரடிக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இயந்திரத்தையும் மறித்து முற்றுகையிட்டனர்.

இப்போரா ட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேஷ், மாவட்டப் பொரு ளாளர் எம்.எம். ராஜு, நிர்வாகிகள் குண்டப்பா, நாகேந்திரபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

போராட்டம் தீவிரமடைந்ததால் சூளகிரி வட்டாட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

"பட்டா நிலம் பாதிக்காமல் கால்வாய் அமைக்க வேண்டும், அணுகு சாலையை உடனே அமைக்க வேண்டும், சுவரை இடிக்கக் கூடாது" என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

பட்டா இடத்திற்குப் பாதிப்பில்லாமல் கால்வாய் மற்றும் அணுகு சாலை அமைக்கப்படும் என்றும், சுவர் இடிக்கப்பட மாட்டாது என்றும் அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.