நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
1 hour before
<p><strong>நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை</strong></p><p> கிருஷ்ணகிரி, ஜூலை 10- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாரூர் பெரிய ஏரி, 1887-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நீராதாரமாகும். மொத்தம் 2,397.17 ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கும் இந்த ஏரி, கடந்த 135 ஆண்டுகளாக இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கே.ஆர்.பி. அணையின் உபரி நீர், இணைப்பு கால்வாய் மூலம் பாரூர் ஏரிக்குக் கொண்டு வரப்படுகிறது. தற்போது பெய்த மழையினால் பாரூர் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளிக்கிறது. இது பாரூர், அரசம்பட்டி, கீழ்குப்பம் உள்ளிட்ட ஏழு ஊராட்சி களில் நிலத்தடி நீர்மட்டத்தை கணிசமாக உயர்த்தி யுள்ளது. ஏரியின் மூலம் மீன்பிடித் தொழிலும் செழித்து, நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. கடந்த ஒரு மாதமாக இப்பகுதி விவசாயிகள் உழவுப் பணிகள் மற்றும் நெல் முதல் போக சாகுபடிக்கான நாற்றங்கால் பணிகளை முடித்துவிட்டு, பாசன நீருக்காகக் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும் நிலை யில், இந்த ஆண்டு நீர் திறப்பு தாமதமாகி வருகிறது. சரியான பருவத்தில் தண்ணீர் திறந்தால் மட்டுமே நெற்பயிர் தரமாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும். எனவே, இனியும் தாமதிக்காமல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக பாரூர் ஏரியிலிருந்து முதல் போகப் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
