கொங்கு சோழர் கால கற்சிற்பம் கண்டெடுப்பு
10 Oct 2026, 11:24 pm

கொங்கு சோழர் கால கற்சிற்பம் கண்டெடுப்பு

உடுமலை, அக்.10-திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி நகர் பூச்சி மேடு பகுதியில், கொங்கு சோழர் காலத்தை சேர்ந்ததாக கருதப்படும் தலைப்பகுதி இல்லாத பழமையான கற்சிற்பத்தை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டறிந்து ஆவணப்படுத்தினர்.

இதுகுறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி கூறுகையில், இந்த கற்சிற்பத்தில் இரு கைகளிலும் வங்கி எனப்படும் அணிகலன்கள் காணப்படுகின்றன. வயிற்றுப் பகுதியில் உதிரபந்தம் எனப்படும் அணிகலனும், முழங்காலுக்கு கீழ் வரையிலான ஆடையும், இடுப்பில் பட்டையான அலங்கார அணிகலனும் இடம்பெற்றுள்ளன. சிற்பத்தின் கீழ்ப்பகுதி பீடத்தில் பொருத்தக்கூடிய அமைப்பைக் கொண்டுள்ளது. இதனால், அருகிலுள்ள பெருமாள் கோவிலில் இச்சிற்பம் வழிபாட்டில் இருந்திருக்க வாய்ப்புள்ளது.நான்கு கரங்களுடன் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இது மனித உருவத்தை குறிப்பதாக இருக்க வாய்ப்பில்லை. சிதலமடைந்த பின்புறக் கரங்களில் சங்கு, சக்கரம் ஆகியவை இருந்திருக்கலாம். உடைந்த சிற்பத் துண்டுகள் அருகிலுள்ள பகுதிகளில் கிடைத்தால் இதனை உறுதிப்படுத்த உதவும்.

நின்ற நிலையில் உள்ள சில சிற்ப அமைப்புகள் கார்த்திகேயன் எனப்படும் முருகனுக்கும் காணப்படுகின்றன. எனினும், வீரச்சங்கிலி எனப்படும் சென்னவீரா அணிகலன் இல்லாததால், அந்த அடையாளத்துடன் இச்சிற்பத்தை பொருத்திப் பார்ப்பதில் வேறுபாடுகள் உள்ளன. சிற்பம் அமைந்துள்ள பகுதியைச்சுற்றியுள்ள கோயில்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் கூடுதல் தகவல்களை பெற முடியும், என்றார்.

இச்சிற்பம் கண்டறியப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள கோபாலபுரம் கோபால்சாமி கோயிலில், கொங்கு

சோழர்கள் ஆட்சிக்காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் மற்றும் கற்தூண்கள் இருந்ததை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஏற்கெனவே ஆவணப்படுத்தியுள்ளனர். மேலும், கொங்கு சோழர் காலத்தை சேர்ந்த வீரநாராயணன் ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையிலான துண்டு கல்வெட்டுகளும் கல்லாபுரம் பகுதியில் அதிகளவில் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், கற்தூண்கள் மற்றும் தற்போது ஆவணப்படுத்தப்பட்டுள்ள சிற்பத்தின் அமைப்பு ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்ததன் அடிப்படையில், இச்சிற்பம் கொங்கு சோழர் காலத்தை சேர்ந்ததாகவும், அக்கால வைணவ வழிபாட்டை வெளிப்படுத்துவதாகவும் இருக்கலாம், என்றார்.