தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நுண்கலையில் மீன் வாசனை

17 Jun 2026, 12:15 am
நுண்கலையில் மீன் வாசனை

நுண்கலையில் மீன் வாசனை

சென்னை எழும்பூரில் உள்ள லலித் கலா அகாடமியில் சுமார் ஒரு வார காலம் மீன் மணம் கமழ்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த மணம் சமைத்ததால் வந்ததல்ல; கடலையே நம்பியுள்ள மீனவ மக்களின் வாழ்வி யல் பாடுகள் ஒளிப்படங்களாய், ஓவி யங்களாய், சிற்பங்களாய் விரிந்து பரிணமித்ததால் வந்த மணமே அது! ஓவியர் அந்தோணி குரூஸ், புகைப் படக் கலைஞர் பழனிக்குமார், பேராசிரி யர் நிரஞ்சனா.ர, பேராசிரியர் அ.பகத் சிங் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் ஜூன் 9 முதல் 15 வரை நடைபெற்ற ‘கொண்டல் நெய்தல் திணைக் கலைகள்’ ஓவியம் மற்றும் ஒளிப்படக் காட்சி மிக முக்கியமானதொரு நிகழ் வாகும். இதன் பெயரே தனிச் சிறப்புக் குரியது.

தென்றல், வாடை என்றால் நமக்கு உடனே புரிந்துவிடும்; ‘கொண்டல்’ என்பதும் ஒருவகைக் காற்றுதான். கிழக்கே இருந்து, அதா வது வங்கக்கடலில் இருந்து சென்னை க்குள் வீசும் காற்றுக்குக் ‘கொண்டல்’ என்று பெயர். இந்தப் பொருத்தமான பெயருக்காகவே ஒருங்கிணைப் பாளர்களை நாம் முதலில் பாராட்ட வேண்டும். இந்த ஓவியம் மற்றும் ஒளிப்படக் காட்சிக்கு ஒவ்வொரு நாளும் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. இதற்குக் காரணம், அங்குத் திட்டமிடப்பட்டிருந்த அன்றாட நிகழ்வுகள் பற்றிய அறிவிப் புகள் தான்.

டிடபிள்யூ தமிழ் தயாரிப்பில் மதன் குமார் இயக்கிய “Daughters of the sea” (கடலின் புதல்விகள்) ஆவணப் படம் திரையிடல், திரைப்பட இயக்கு நர் ராஜு முருகன், முனைவர் கல்பனா கருணாகரன், ஊடகவியலாளர் அருள் எழிலன் ஆகியோருடனான உரையாடல், சிறார்களுக்குக் கடலை அறிமுகம் செய்ய புதுச்சேரி யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனம் அரங்கேற்றிய ‘’மீன் வாங்கலையோ மீனு’’ நாடகம் என நிகழ்வுகள் தொடர்ந்தன.

மேலும், ‘கவுச்சி’ என நாம் சாதார ணமாகப் பயன்படுத்தும் சொல்லின் பின்னாலிருக்கும் வாழ்வியல் பொருள், வாசனை, உழைப்பு குறித்து அதே ‘கவுச்சி’ என்ற தலைப்பிலேயே எண்ணூர், ஊரூர்குப்பம், புதுச் சேரி மீனவப் பெண்களுடன் கலந்துரை யாடல் நடைபெற்றது.

சமூகச் செயற்பா ட்டாளர் வ. கீதா, எழுத்தாளர் கவின் மலர், அறிவொளி செயற்பாட்டாளர் க. மலர்விழி, சிற்பக் கலைஞர் பிரபு காசி ராஜன், எழுத்தாளர் கரன் கார்க்கி என வரிசைகட்டி நின்ற ஆளுமை களின் பங்கேற்பும், சிறார்களின் நாடகத்தைத் தொடர்ந்து நாடகவி யலாளர் பிரளயனுடன் நடைபெற்ற கலந்துரையாடலும் என அடுக்கடுக் கான நிகழ்வுகளில் மீன் மணத்தோடு சிந்தனை மணமும் சேர்ந்தே கமழ்ந்தது.

‘கொண்டல் நெய்தல் திணைக் கலைகள்’ காட்சியை ஒரு நாளாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு, அதன் நிறைவு நாளன்று லலித் கலா அகாடமிக்குச் சென்றேன். விண்ணிலிருந்து மீன்கள் கீழே இறங்கி வருகின்றனவா அல்லது விண்ணை நோக்கி மேலே செல்கின்றனவா என நம்மைத் திகைத்து நின்று வியக்கவைக்கும் ‘நிர்மாணக் கலை’ (Installation Art) பார்வையாளர்களை முதலில் வரவேற் றது.

உள்ளே பார்வையை ஓட்டினால் திரும்பும் திசையெங்கும் வண்ண வண்ண ஒளிப்படங்கள் காட்சி அளித்தன. புகைப்படக் கலைஞர் பழனிக்குமாரின் வழிகாட்டுதலில், கடலோரப் பின்னணி கொண்ட மாண வர்களே இவற்றைத் தேடித்தேடித் தங்களது கேமரா வலையில் பிடித்துள்ளதாகப் பேராசிரியர் பகத்சிங் கூறினார்.

அந்தப் படங்கள் ஒவ்வொன்றும் உயிர்ப்போடு நம்முடன் பேசுவது போல் இருந்தன. மீனவப் பெண்களின் வெள்ளந்தியான சிரிப்பும், வகைவகையான மீன்க ளும், இறால்களும், அவர்களின் சமை யலறைக் காட்சிகளும் கலைக் கூடத்திற்குள் முடங்கிவிடாமல், நம்மை நேரடியாக அவர்களின் வீதிகளுக்கே அழைத்துச் சென்ற உணர்வை ஏற்படுத்தின.

“வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு... தொடர்ந்தால் தொடரும் முடிந்தால் முடியும் அதுதான் எங்கள் வாழ்க்கை...” என்பது அவர்களின் எதார்த்தமான வரிகள். நமக்கு மீன் உணவைத் தேடித்தருபவர்களின் வாழ்க்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நமது கடமையாகும்.

அதைப் பரவலாக்கும் முயற்சியின் முக்கியத் தொடக்கப் புள்ளியாகவே இந்தக் ‘கொண்டல்’ காட்சியை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு படமாகப் பார்த்துக் கொண்டே செல்லும்போது, மீன்கள் தரையில் கோலமிட்டுக் காட்டுவது போன்றதொரு கண்கொள்ளாக் காட்சி நம்மை ஈர்க்கிறது.

அள்ளி எடுத்துக் கொள்ளலாம் போல் அவ்வளவு பேரழகு! அதனைக் காட்சியாக்கி வடி வமைத்தவரை எவ்வளவு பாராட்டி னாலும் தகும். இந்த நிர்மாணக் கலையின் மைய மாக ஒரு மீனவப் பெண்ணின் சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது. அடடா... அதனைச் சிற்பம் என்று நம்புவதற்கே எனக்குச் சிறிது நேரம் பிடித்தது. மூடிய கண்கள், வாடிய முகம், முக்கா டிட்ட வலை, கொண்டை முடிச்சில் ஒரு படகு...

இவை யாவற்றோடும் சேர்த்து, கடல் நமக்கு மீன்களைத் தாண்டி இன்னொன்றையும் தருகிறது என்பதை நினைவூட்டுவது போல், அப் பெண்ணின் கன்னத்தில் ஒட்டியிருந்த உப்புக் கற்கள் நம்மைப் பிரமிக்க வைத்தன. ‘சித்திரம் பேசுதடி’ என்பதற்கு ஏற்பச் சட்டகங்களுக்குள் இருந்த ஓவியங்கள் நம்மிடம் பேசின.

ஓவியர் அந்தோணி குரூஸின் வழிகாட்டு தலில் புதுச்சேரி பாரதி பல்கலைக் கூட மாணவர்கள் தீட்டிய ஓவியங் கள் அவை. அவையும் ஏதோ ஓர் அறைக்குள் உட்கார்ந்து கற்பனை யாக வரையப்பட்டவை அல்ல; ஆலம்பரைக் குப்பம், வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்குள்ள நெய்தல் நில வாழ்வி யலைத் தங்கள் மனதில் உள்வாங்கித் தூரிகைகளால் உயிரூட்டியவை. பண்டைக்காலக் கடற்கரைத் தோற்ற ங்களும் இதில் இடம்பெற்றிருந்தது கூடுதல் அழகு.

மொத்தத்தில் ஓவியங்கள், ஒளிப் படங்கள், சிற்பங்கள் எனப் பல்வேறு நுண்கலை வடிவங்களின் வழியே மீனவ மக்களின் வாழ்வியலைக் காட்சி ப்படுத்திய விதமும், மாணவர்களை யும் பல்துறை ஆளுமைகளையும் ஒருங்கிணைத்த கோணமும், ஆயிரத் திற்கும் மேற்பட்ட பார்வையாளர் களின் பங்கேற்பும், சமூகத்தில் நேர் மறையான தாக்கங்களை ஏற்படுத்த அடுத்த தலைமுறை தயாராக இருக் கிறது என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.