ரிப்போர்ட்டர் டிவி அலுவலகத்தில் சோதனை - கேரள காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்!
yesterday

ரிப்போர்ட்டர் டிவி தலைமையகத்தில் கேரள காவல்துறை நடத்திய சோதனைக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம், கேரள உழைக்கும் பத்திரிகையாளர் யூனியன், எர்ணாகுளம் பத்திரிகையாளர் சங்கம் ஆகிய பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

லியோனல் மெஸ்ஸி உட்பட அர்ஜென்டினா கால்பந்து அணியை கேரளாவுக்கு அழைத்து வருவதற்கான திட்டத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக மலையாள செய்தித் தொலைக்காட்சியான ரிப்போர்ட்டர் டிவியின் கொச்சி தலைமையகம், கலமசேரி அலுவலகம் மற்றும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அன்டோ ஆகஸ்டினுக்கு தொடர்புடைய கொச்சி மற்றும் வயநாடு இடங்களில் கேரள காவல்துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனையின்போது, ரிப்போர்ட்டர் டிவி அலுவலகத்தின் நிர்வாகப் பகுதிகளில் மட்டுமல்லாமல், நியூஸ் டெஸ்க்கிற்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் நேரடி செய்தி ஒளிபரப்பு மற்றும் செய்தியறை பணிகள் பாதிக்கப்பட்டதாக அலுவலகத்தில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட செல்போன்களை காவல்துறை பறிமுதல் செய்ததும், பத்திரிகைத்துறை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதும், பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதும் இந்திய அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள சுதந்திரமான பத்திரிகையின் விழுமியங்களுக்கு எதிரானது என்றும் இந்திய பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கேரள உழைக்கும் பத்திரிகையாளர் யூனியனின் திருவனந்தபுரம் மாவட்ட குழு கூறுகையில், "ஊடக நிறுவனங்களின் செயல்பாட்டுச் சுதந்திரத்தையும் பத்திரிகையாளர்களின் உரிமைகளையும் கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய நடவடிக்கைகளை ஒரு ஜனநாயகச் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறை ஊடக நிறுவனங்களுக்குள் நுழையும் சூழலை மிகவும் தீவிரமான விஷயமாகக் கருத வேண்டும்; பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்றுவதற்கான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும்; ஊடக நிறுவனங்களின் செயல்பாடுகளில் தேவையற்ற தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், கேரள உழைக்கும் பத்திரிகையாளர் யூனியனின் எர்ணாகுளம் பிரஸ் கிளப், காவல்துறையின் இந்தச் சோதனை நடவடிக்கை ஊடகச் சுதந்திரத்தின் மீதான அத்துமீறல் என்று தெரிவித்துள்ளது. மேலும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஊடக நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் காவல்துறையினர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.