இருண்ட காலத்தில் இருந்து ஒளிமயமாக மாறிய கேரளம்! பினராயி விஜயன் அரசின் பத்தாண்டு காலப் பயணம்
5 Mar 2026, 3:59 pm

இருண்ட காலத்தில் இருந்து ஒளிமயமாக மாறிய கேரளம்! பினராயி விஜயன் அரசின் பத்தாண்டு காலப் பயணம்

தீக்கதிர் வாசகர்களுக்கு ஒரு விளக்கம்

நேற்றைய (5.3.2026) தீக்கதிரில் வெளியான முதல் மற்றும் மூன்றாம் முகப்புப் பக்கங்கள் - வழக்கமான செய்தித் தாள் பக்கங்கள் அல்ல. இவை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் சாதனைகளை விளக்கும் அதிகாரப்பூர்வ விளம்பரப் பக்கங்கள் (Government Jacket advertisement Pages). ஆனால், இவை வழக்கமான விளம்பரங்களைப் போலன்றி, ஒரு தனித்துவமான ‘விளம்பர உத்தியை’ பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்கு ஒரு தெளிவான ஒப்பீட்டை வழங்குவதற்காக, ‘அன்று’ மற்றும் ‘இன்று’ என இரு வேறு காலக்கட்டங்களின் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பர உத்தியின் நோக்கம் என்ன? பொதுவாக ஒரு அரசு தனது சாதனைகளைச் சொல்லும்போது புள்ளிவிவரங்களைப் பட்டியலிடும். ஆனால், இந்தப் பக்கங்கள் “பிரச்சினை -> தீர்வு” (Problem -> Solution) என்ற இதழியல் அணுகுமுறையைக் கையாண்டுள்ளன. முதல் முகப்புப் பக்கம் (Jacket 1): 2014 - 2016 காலக்கட்டத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி(UDF) ஆட்சிக் காலத்தின் அவலங்களை அன்றைய நாளிதழ்களின் செய்திகளாகவே மீள்-பதிவு செய்துள்ளது. இரண்டாவது முகப்புப் பக்கம் (Jacket 2): முதல் பக்கத்தில் சொல்லப்பட்ட அதே பிரச்சனைகளை, கடந்த 10 ஆண்டுகளில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு எப்படிச் சரிசெய்தது என்பதை இன்றைய செய்திகளாக முன்வைக்கிறது. இந்த ஒப்பீடு கேரளாவின் ‘உண்மையான வளர்ச்சியை’ வாசகர்களுக்குப் புரிய வைக்கும் நோக்கில், கேரள அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள விளம்பரங்களே ஆகும். கேரளப் பத்திரிகைகள் அனைத்திலும் அரசு சார்பில் இந்த விளம்பரப் பக்கங்கள் வெளியாகியுள்ளன.

பகுதி 1 : கடந்த கால இருள் (2014-2016) - ஸ்தம்பித்த கேரளா

முதல் முகப்புப் பக்கத்தில் உள்ள செய்திகளைப் பார்க்கும்போது, ஒரு மாநிலம் நிர்வாக ரீதியாக எப்படிச் சீர்குலைந்து இருந்தது என்பது புரிகிறது. நிதி நெருக்கடியின் உச்சம்: “சம்பளம் வழங்க எல்.ஐ.சி-யிடம் கடன் வாங்கும் அரசு” என்ற செய்தி அன்றைய நிதி நிலைமையைத் தோலுரிக்கிறது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கக்கூட அன்றைய அரசிடம் நிதி இல்லை. இருளில் தவித்த கேரளா: மின்சாரத் தட்டுப்பாட்டினால் “மீண்டும் மின்வெட்டு” அமலானது. “எடமண்-கொச்சி மின்சாரப் பாதை இழுபறியில்” என்ற செய்தி, கேரளாவின் மின்சாரக் கனவு அன்றைய நிலையில் முடங்கிப் போயிருந்ததை உறுதிப்படுத்துகிறது. போக்குவரத்து முடக்கம்: கேரளாவின் அடையாளமான கே.எஸ்.ஆர்.டி.சி (ஆனவண்டி) பேருந்துகள், பராமரிப்பின்றி “கட்டப்புறத்தில்” (பணிமனையில் முடங்கிக் கிடப்பது) இருந்தன. மாதம் 124 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு, நிறுவனம் மூடப்படும் நிலையில் இருந்தது. சாலைகளின் அவலம்: “தார் வாங்கப் பணம் இல்லை, சாலைப் பணிகள் நின்றன” என்ற செய்தி அன்றைய உட்கட்டமைப்பின் லட்சணத்தைச் சொல்கிறது. கல்வித் துறை புறக்கணிப்பு: 1,200-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் ‘லாபகரமானவை அல்ல’ என்று கூறி மூடப்படும் பட்டியலில் இருந்தன. பாடப்புத்தகங்கள் இன்றி மாணவர்கள் தேர்வு எழுதினர். சுருக்கமாக, அன்று கேரளா என்பது ‘செயல் இழந்த’ ஒரு மாநிலமாக இருந்தது.

பகுதி 2: நிகழ்கால ஒளி (2016-2026) - சாதனைகளின் சகாப்தம்

இரண்டாவது முகப்புப் பக்கத்தில், முந்தைய பக்கத்தின் ஒவ்வொரு தோல்விக்கும் ஒரு மாற்று விடையை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் வழங்கியிருப்பதை அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் புள்ளிவிவரங்களுடன் விளக்குகின்றன. மின்சாரத் துறையின் மறுமலர்ச்சி: அன்று முடங்கிக் கிடப்பதாகச் சொல்லப்பட்ட “எடமண்-கொச்சி 400 கிலோவாட் மின்சாரப் பாதை” இன்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, கேரளா ‘பவர்கட்’ இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. 10,000 மெகாவாட் உற்பத்தியை நோக்கி கேரளா நகர்வதாக மின்சார வாரியம் (KSEB) அறிவித்துள்ளது. பொதுக் கல்வியில் புரட்சி: 1,200 பள்ளிகளை மூட நினைத்த காலம் போய், இன்று 111 புதிய பள்ளிக் கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. “புதுப்பொலிவில் பொதுக் கல்வி” என்ற தலைப்பின் கீழ், 45,000 வகுப்பறைகள் ஹைடெக் ஆக்கப்பட்டுள்ளதாகக் கல்வித் துறை பெருமிதத்துடன் கூறுகிறது. இதுதான் இந்தியாவே வியந்து பார்க்கும் ‘கேரளா மாடல்’. உட்கட்டமைப்பில் சாதனை: தேசிய நெடுஞ்சாலை ஆணையமே கேரளாவை விட்டு வெளியேறிய சூழலில், இன்று அதே நெடுஞ்சாலைப் பணிகளுக்காக 5,580 கோடி ரூபாயைத் தனது சொந்த நிதியிலிருந்து ஒதுக்கி, 6 வழிச்சாலைகளை அமைத்து முடித்துள்ளது பினராயி விஜயன் அரசு. 35,000 கோடி ரூபாய் செலவில் சாலைகள் உலகத் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. மீண்டெழுந்த கே.எஸ்.ஆர்.டி.சி: அன்று முடங்கிக் கிடந்த பேருந்துகள், இன்று லாபத்தை நோக்கி நகர்வதாகப் போக்குவரத்துத் துறை விளக்குகிறது. டிசம்பர் மாதத்தில் மட்டும் 9.72 கோடி ரூபாய் லாபம் ஈட்டி, கே.எஸ்.ஆர்.டி.சி புதிய சாதனை படைத்துள்ளது.

வாசகர்கள் கவனத்திற்கு!

இந்த இரண்டு பக்கங்களையும் தமிழக வாசகர்கள் ஒரு ‘இதழியல் ஆய்வாகப்’ பார்க்கலாம். ஒரு பக்கம் - திட்டமிட்ட சீரழிவு; மறுபக்கம் - திட்டமிட்ட வளர்ச்சி. கேரள அரசு இந்த விளம்பரத்தின் மூலம் சொல்ல வருவது இதுதான்: “நிதிக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஒன்றிய அரசின் முட்டுக்கட்டைகள் இருந்தாலும், ஒரு மக்கள் நல அரசு நினைத்தால் மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மின்சாரம், சாலை மற்றும் சமூகப் பாதுகாப்பை மாற்றுத் திட்டங்களுடன் உறுதி செய்யமுடியும்.” “அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கக் கடன் வாங்கிய” அன்றைய கேரளா எங்கே? “அரசு கல்லூரிகளில் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியை” அறிவிக்கும் இன்றைய கேரளம் எங்கே? இந்த மாற்றமே இடதுசாரி அரசியலின் வெற்றி. வாசகர்கள், இந்தப் பக்கங்களில் உள்ள செய்திகள் ஒவ்வொன்றையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு மாநிலம் தன் இருண்ட காலத்தைத் தாண்டி, எப்படி ஒளிமயமான பாதையில் பயணிக்கிறது என்பதை இந்த செய்திகள் நமக்கு தெளிவாகப் புரிய வைக்கின்றன. - ஆசிரியர்