கவின் சாதி ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தாயார் கைது!
29 May 2026, 9:52 pm
<p><strong>கவின் சாதி ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தாயார் கைது!</strong> </p><p>தூத்துக்குடி, மே 29 - கவின் சாதி ஆணவக் கொலை வழக்கில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொலையாளியின் தாயாரான பெண் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்ததற்காக, கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று திருநெல்வேலி கேடிசி நகரில் சாதி ஆணவப் படுகொலை படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங் கோட்டை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறை யில் அடைத்தனர். சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் சரவணன், உறவினர் ஜெயபால் மற்றும் வழக்கில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கவின் சாதி ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தாயாரான சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி மே 29 அன்று கைது செய்யப் பட்டுள்ளார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலை யிலும், குற்றப்பத்திரிகையில் சுர்ஜித்தின் தாயான கிருஷ்ண குமாரி பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலும், சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
