கிளிஞ்சல்கள் அற்ற கடற்கரை இயற்கைக்கும் தொழில்துறைக்கும் இடையே நசுங்கும் இருளர் வாழ்வு
18 Jul 2026, 9:56 pm

கிளிஞ்சல்கள் அற்ற கடற்கரை இயற்கைக்கும் தொழில்துறைக்கும் இடையே நசுங்கும் இருளர் வாழ்வு

ரியன் உதிக்கும் முன்பே காட்டுப்பள்ளி கடற்கரை மனித நடமாட்டத்தால் உயிர் பெற்று விடுகிறது. இருளர் சமூக மக்கள் முழங்கால் அளவுக்கு அலைகளில் நின்று, வங்கக் கடலின் அலை உள்வாங்குவதற்காகக் காத்திருக்கின்றனர்.

தாங்கள் பிரத்தியேகமாகத் தயாரித்த வலைகளைக் கொண்டு, உயர் அலைகளில் அடித்து வரப்படும் கிளிஞ்சல்களை மிக வேகமாகச் சேகரிக்கின்றனர். ”உயரமான அலைகள் வரும்போது நாங்கள் கிளிஞ்சல்கள் சேகரிக்க முடியாது. எனவே தாழ்வான அலைகள் வரக் காத்திருப்போம்.

இவற்றுக்கிடையே வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு வருவோம் அல்லது இங்கேயே கடற்கரையில் காத்திருப்போம்,” என்கிறார் அங்கிருக்கும் ரமேஷ்.

அவரைப் போன்ற இருளர் சமூகத்தினருக்கு, கிளிஞ்சல் சேகரிப்பு என்பது வெறும் பிழைப்பு மட்டுமல்ல; அது திருவள்ளூர் மாவட்டக் கடலின் தன்மையோடு தலைமுறை தலைமுறையாகப் பிணைந்த ஒரு வாழ்க்கையாகும்.

மறைந்துபோகும் பாரம்பரிய உழைப்பு பழவேற்காடு மற்றும் காட்டுப்பள்ளி கரையில் வசிக்கும் இருளர் குடும்பங்களுக்குப் பல தலைமுறைகளாக இந்தக் கிளிஞ்சல்கள்தான் சோறிட்டு வருகின்றன. சேகரிக்கப்படும் கிளிஞ்சல்கள் காற்றில் காய வைக்கப்பட்டு, மாட்டு வண்டிகளில் ஏற்றி, சுண்ணாம்புக்கல்லாக அரைப்பதற்காகக் கொண்டு செல்லப்படுகின்றன.

கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் இந்தச் சுண்ணாம்பை உருவாக்கும் இத்தொழிலில், ஒரு வண்டி லோடுக்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே கூலியாகக் கிடைக்கிறது. சராசரியாக ஒருவர் வாரத்திற்கு ஏழு சவாரிகள் வரை வேலை பார்க்க முடியும். ஒரு தொழிலாளர் ஒரு வாளி கிளிஞ்சல்களைச் சேகரித்தால் 25 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.

கரையில் குவிந்து கிடக்கும் கிளிஞ்சல் குவியல்களை முதலில் பார்க்கும்போது, அவை மக்களின் வாழ்க்கையோடு இவ்வளவு ஆழமாகத் தொடர்பு கொண்டவை என்பது பலருக்குப் புரிவதே இல்லை. கிளிஞ்சல் சேகரிப்பவர்கள் கண் முன்னால்தான் உழைக்கின்றனர்; எனினும், அவர்களின் உழைப்பு இந்தச் சமூகத்திற்குத் தெரிவதில்லை.

விழுங்கப்படும் கடலோரமும் காலநிலை மாற்றமும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் காமராஜர் துறைமுகம், எண்ணூர்-பழவேற்காடு கடலோர அரிப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. ஒருகாலத்தில் இந்தப்பகுதி கடலோரத்தில் ஏராளமான ஈர நிலங்களும், சதுப்பு நிலங்களும், மணல் மேடுகளும், மீன்பிடி தளங்களும் செழிப்பாக இருந்தன.

ஆனால், இன்று அவை யாவும் எண்ணூர்-காட்டுப்பள்ளி பகுதியில் நடந்துள்ள துறைமுக விரிவாக்கத்தாலும், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தாலும் மெல்ல விழுங்கப்பட்டு வருகின்றன. மேலும், அனல் மின் நிலையங்கள், பெட்ரோலிய ரசாயனத் தொழில்கள் மற்றும் பெரும் உள்கட்டமைப்புத் திட்டங்களும் இந்தச் சூழலியலைச் சிதைத்து வருகின்றன. அதே சமயம், புயல்கள், வெள்ளம் மற்றும் தீவிரக் காலநிலை மாற்றங்கள் சென்னையில் அதிகரித்து வருகின்றன.

இந்த மாற்றங்கள் கடற்கரையைத் தீவிரமாக அரித்து, கிளிஞ்சல்களின் வரத்தைப் பெருமளவு குறைத்துவிட்டன. முன்பு வருடத்தின் அனைத்து நாட்களிலும் நல்ல அளவில் கிளிஞ்சல்கள் கிடைத்த நிலை மாறி, தற்போது சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரியின் பாதி வரையிலான மழைக்கால மாதங்களில் மட்டுமே, வலிமையான அலைகளால் கிளிஞ்சல்கள் அதிகமாகக் கரையொதுக்கப்படுகின்றன. “சில நேரங்களில், போதுமான அளவு கிளிஞ்சல்கள் கிடைக்கவில்லை எனில், வீட்டுக்கு வெறும் கைகளுடன் திரும்புவோம்,” என்கிறார் ரமேஷ். மூத்த தொழிலாளர்கள், பத்தாண்டுகளுக்கு முன்பு தினசரி 300 ரூபாய் வரை வருமானம் ஈட்டியதை ஆதுரத்துடன் நினைவுகூருகின்றனர்.

ஆனால் இன்று வாரத்திற்கு 1,000 ரூபாய் வருமானம் ஈட்டுவதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. “என் இளமைக் காலத்தில் இருந்த கடல் அல்ல இப்போது இருப்பது; அப்போது நீர் கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும்,” என்கிறார் மூத்த தொழிலாளரான தனம். கல்விக்கான கனவும் முதியோரின் துயரமும் தினக்கூலி வேலைக்கான சாத்தியங்கள் வடசென்னையில் குறைவாகவே இருக்கும் நிலையில், இந்த விளிம்புநிலை மக்களின் பிழைப்பு கடலையே நம்பியுள்ளது.

“பல வருடங்களாக எங்கள் பகுதியில் கிளிஞ்சல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இருளர் சமூகத்தினரிடமிருந்து அவற்றை நாங்கள் வாங்கி, மாதந்தோறும் விற்போம்,” என்கிறார் காட்டுப்பள்ளியைச் சேர்ந்த சுரேஷ்.

“என் மகன் சென்னையில் மருத்துவப் படிப்பு படிக்கிறான். இந்த வேலையைக் கொண்டுதான் அவனுக்கான படிப்பை நான் சாத்தியப்படுத்தி இருக்கிறேன்,” என்று பெருமிதத்தோடு கூறும் சுரேஷுக்கு, தற்போது இத்தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் வாழ்வாதாரத்திற்காகப் பிற வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. கிளிஞ்சல் சேகரிப்பவர்கள் மட்டுமல்லாமல், தொழிற்சாலைக் கழிவுகளால் கடலில் மீன்பிடி வளம் கூடக் குறைந்துவிட்டதாகப் பெருமளவு தலித் சமூகத்தைச் சேர்ந்த வடசென்னை மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அறுபது வயதைக் கடந்த ராஜம்மாள், தன் கைகள் நடுங்க இப்போதும் கடலுக்கு வருகிறார். “என் கணவருக்கு 60 வயதிற்கு மேல் ஆகிவிட்டது; உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.

அவருக்கான மருந்துகள் வாங்கவோ, குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவோ எனக்கு வேறு வழியில்லை.

அதனால் இங்குக் கிளிஞ்சல் பொறுக்க வருகிறேன். இதன் மூலம் 25 ரூபாய் வரை கிடைக்கிறது,” என்கிறார். முதியோர்களுக்கு இன்றும் இதுவே ஒரே வருமான வழி. அடிப்படை வசதிகளற்ற வசிப்பிடங்கள் காட்டுப்பள்ளியில் தலா 10-15 இருளர் குடும்பங்கள் வசிக்கும் சிறிய குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடும்பங்கள் யாவும் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட மாற்று வசிப்பிடங்களுக்குப் புலம்பெயர்ந்திருந்தாலும், அங்கு மின்சாரம், குடிநீர், சாலைகள் மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. பெரும்பாலான வீடுகள் மண் தரையையும், தார்ப்பாய்க் கூரைகளையும் மட்டுமே கொண்டுள்ளன.

தனத்தின் வீட்டில் கதவுகள் கூட இல்லாததால், பூச்சிகளும், பாம்புகளும், கடுமையான வானிலையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ”நாங்கள் வெறும் மண்ணில்தான் பாய் விரித்துப் படுப்போம். இரவில் பாம்புகளும் பூச்சிகளும் எங்களைக் கடிக்கும் ஆபத்து அதிகம் உண்டு. எந்த வசதியுமின்றி நரக வாழ்க்கை வாழ்கிறோம்,” என்கிறார் ரமேஷ்.

அங்குள்ள ஒரு சிறிய இயற்கை நீரூற்றுதான் (ஊற்றுநீர்) மனிதர்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், குளிப்பதற்கும் ஒரே நீராதாரம். அ

தே நீராதாரம் தான் அப்பகுதி விலங்குகளுக்கும் என்பதால், மழைக்காலத்தில் வழிந்தோடி வரும் சாக்கடை நீர் இதனுடன் கலந்து ஒட்டுமொத்தக் குடிநீரையும் மாசடையச் செய்கிறது. பிரதான சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இடத்திற்கு வர, மோட்டார் சைக்கிள்கள் கூடத் திணறும் அளவுக்கு மோசமான மண் பாதைகளே உள்ளன.

பொதுப் போக்குவரத்து இன்னும் இப்பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. தொழிலாளர்கள் அன்றாடம் வேலை செய்ய மூன்று மைல் தூரம் வரை கடலோரப் பாதையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. தொடரும் நிச்சயமற்ற பயணம் கடலோர வேலைகளின் போது கால்களில் ஏற்படும் ஆழமான காயங்களை ரமேஷ் காட்டுகிறார். உப்புநீரில் அந்தக் காயங்களுடன் தினசரி பல மணி நேரம் நிற்பது நரக வேதனை மிகுந்தது. “வலி தாங்க முடியாது. ஆனால் காயத்தைச் சரிசெய்ய இங்கு மருத்துவ வசதிகளும் இல்லை,” என்கிறார்.

எப்போதாவது வரும் அரசு மருத்துவரைப் பார்ப்பதற்குக் கூட, அவர் தன் அன்றாட வேலை நேரத்தையும், வருமானத்தையும் இழக்க வேண்டியுள்ளது. மழைக்காலத்தில் சுரேஷும் ரமேஷும் சுமார் எட்டு மணி நேரம் வரை கடலில் கழிக்கிறார்கள்; ஏனெனில் அந்தச் சமயத்தில்தான் அலைகள் அதிகக் கிளிஞ்சல்களைக் கொண்டு வரும்.

ரவு நேர அலைகள் தாங்கள் சேகரித்தவற்றை மீண்டும் கடலுக்குள் இழுத்துச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, அவற்றைச் சற்று உயரமான தரைப் பகுதியில் குவித்து வைக்கின்றனர். பெண்கள் இந்தக் கிளிஞ்சல்களைத் தலைச்சுமையாகக் கூடைகளில் சுமந்து சென்று வாகனங்களில் ஏற்றுகின்றனர்.

ஒரு மாட்டு வண்டியில் 30 கூடைகள் வரை ஏற்றலாம். காட்டுப்பள்ளி இருளர் சமூகத்தைப் பொறுத்தவரை, அவர்களின் பிழைப்பு முழுமையாக இந்த அழிந்து வரும் கடலோரத்தைச் சார்ந்துதான் இருக்கிறது. அவர்களுக்கு ஒரு காலத்தில் வாழ்வாதாரம் கொடுத்த கடல், கார்ப்பரேட் பேராசையாலும் தொழிற்சாலைகளாலும் மீள முடியாத அளவுக்கு மாறிக்கொண்டிருக்கிறது.

எனினும், கடுமையான கடல் அரிப்புக்கும், வாழ்வின் நிச்சயமற்ற தன்மைக்கும் நடுவே, இன்றும் ஒவ்வொரு நாளும் சூரியோதயத்திற்கு முன்பாக இந்தக் குடும்பங்கள் கடலின் அலைகளுக்குள் காலடி எடுத்து வைக்கின்றன—தங்களின் முந்தைய தலைமுறைகளைப் போலவே! ( பிரபல பத்திரிகையாளர் பி. சாய்நாத் அவர்களின் “ PARI” இணையதளத்தில் வெளியானது)