கட்டப்பாவும் சிட்டம்மாவும் - நாகை ஆசைத்தம்பி கோவை
31 Jan 2026, 5:27 pm
<p><strong>கட்டப்பாவும் சிட்டம்மாவும்</strong></p>
<p>“குட் மார்னிங்க கட்டப்பா” என்ற சிட்டம்மாவை வியப்புடன் நோக்கிய கட்டப்பாவை “என்ன கட்டப்பா அப்படி பாக்குறே” என்றாள் சிட்டம்மா. கட்டப்பாவுக்கும், சிட்டம்மாவுக்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு, இந்த பாகுபலி படம் பார்த்த நாள் முதல் அப்பாவை பெண் கட்டப்பா என்றும் ஒரு எதுகை மோனையா இருக்கட்டுமேயென்று இவரும் மகளை சிட்டம்மா எனவும் அழைக்கலானார். “இல்ல சிட்டம்மா, நீயா இது. புதுசா குட் மார்னிங் எல்லாம் சொல்றேன்னு பார்த்தேன்” “ஏன் புதுசா எதுவும் கத்துக்கக்கூடாதா,,, ? எங்க மிஸ்தான் நேத்து சொல்லிக்கொடுத்தாங்க. பெரிய வங்கள பாத்தா வணக்கம் சொல்லணுமுன்னு. அதான் சொன்னேன்.” “வெரிகுட் வெரிகுட் நல்ல பழக்கம்தான்... நீ காபி குடிச்சிட்டு வீட்டுப்பாடம் எழுது. நான் தோட்டத்துல போயி ரெண்டு வாழக்கண்ணு வைக்கணும் குழிதோண்டி வச்சிட்டு வரேன்” “கட்டப்பா இன்னைக்கு சண்டே தானே. நானும் தோட்டத்துக்கு உன்கூட வரேன், ஈவெனிங் ஹோம் ஒர்க் பன்றேன் சரியா...” “சரி...சரி...வா சிட்டம்மா சொன்னா கேட்கவா போறே...” கட்டப்பாவும், சிட்டம்மாவும் தோட்டத்தை நோக்கிச் சென்றார்கள்.அங்குள்ள நல்ல இடமாக தேர்வு செய்து குழித்தோண்ட ஆரம்பித்தார். ஒரு இரண்டு அடி தோண்டியதும் டங்டங்குண்ணு சத்தம் கேட்டது. என்ன சத்தம் என்ற யோசனையோடு தோண்டினார்.அவசர அவசரமாக மண்ணை வாரி போட்டுவிட்டு பார்த்தால் ஒரு பச்சயம் பூத்த பாழடைந்த. செம்புச் சொம்பு இருந்தது. கட்டப்பாவுக்கு கைகால் ஓடவில்லை.சுதாரித்துக் கொண்டு திறந்து பார்த்தால் தங்க நாணயங்கள் இருந்தன. “என்ன இது கட்டப்பா என்றாள் சிட்டம்மா. “இது புதையல் சிட்டம்மா” “அப்படின்னா என்ன கட்டப்பா” “இது அந்தக்காலத்தில் யாராவது புதைத்து வைத்தி ருப்பார்கள். பிறகு எடுக்க மறந்து இருக்கலாம் அல்லது இறந்துப் போய் இருக்கலாம். இப்போ நம்ம கையில் சிக்கியிருக்கு. ஆண்டவனா பாத்து நமக்கு கொடுத்து இருக்காரு. இதை யாருக்கிட்டேயும் சொல்லிடாதே” என்றார். “அப்படின்னா அடுத்தவங்க நாணயமா...? இது அவங்களுக்குதானே சொந்தம். நமக்கு எப்படி சொந்த மாகும். இதை அவங்கக்கிட்ட கொடுத்திடு கட்டப்பா” என்றால் சிட்டம்மா. “உனக்கு ஒன்னும் தெரியாது சிட்டம்மா இது நமக்கு சேர வேண்டியதுதான் ஆண்டவன் நமக்கு கொடுத்தி ருக்கார்.இது நம்ம நிலம்தானே. அதுல கிடைப்பது நமக்குதானே சொந்தம். இதை யாரிடமும் சொல்லாதே” “அப்படி இல்ல கட்டப்பா. இரண்டு நாளைக்கு முன்னாடி டிவில நியூஸ் பார்த்தியா. அதுல சென்னை யில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மா என்ற பெண் தூய்மைப் பணியாளர், குப்பையில் கண்டெடுத்த சுமார் 45 சவரன் தங்க நகைகளை சுமார் ரூ. 45 லட்சம் மதிப்புள்ள பொருளை போலீசில் ஒப்படைத்து நேர்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தாங்க இல்லியா. அவரை பாராட்டி, தமிழக முதல்வர் ஒரு லட்சம் காசோலை வழங்கிப் பாராட்டினாரே. அதுபோல நீயும் போலிசில் இதை ஒப்படைத்தால் முதல்வர் பணம் தருவாரு. நீ இதை உடனே போலிசில் கொடு கட்டப்பா. இல்லன்னா நான் எங்க மிஸ்கிட்ட சொல்லி போலிஸ்ல சொல்லச் சொல்லிடுவேன்” “அய்யோ இதென்னடா வம்பா போச்சு. இவ சொன்னாலும் சொல்லிடுவா. இந்த பூமியில கிடைக்கி றது எல்லாம் அரசுக்குதானே சொந்தம். மரியாதையா போலிஸில ஒப்படைத்து விடலாம்” என புறப்பட்டார். மறுநாள் காலையில் டிவியில் செய்தி ஓடியது. பலகோடி மதிப்புள்ள பழங்கால தங்க நாணயங்களை காவல்துறையிடம் ஒப்படைத்த விவசாயிக்கு அரசு பத்து லட்சத்துக்கான காசோலை வழங்கி பாராட்டியது. டிவில எங்க அப்பா கட்டப்பா நியூஸ். முதல்வர் பாராட்டி னாரென சிட்டம்மா துள்ளிக்குதித்தாள். நல்லதை யாரு சொன்னாலும் எடுத்துக்க வேண்டும்தானே.</p>
<p> </p>
