திருச்சி விரைவு செய்திகள்
17 Aug 2026, 10:31 pm

அடிப்படை வசதிகள் நிறைவேற்றிக் கொடுக்க விதொச ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

கரூர், ஆக. 17- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் 9 ஆவது ஒன்றிய மாநாடு தோகைமலையில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு சங்கத்தின் முன்னாள் ஒன்றியத் தலைவர் ஆர். செல்வராஜ் தலைமை வகித்தார். மாநாட்டில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி. ராஜு மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். ஒன்றியச் செயலாளர் ஆர். சங்கப்பிள்ளை வேலை அறிக்கையை முன் வைத்துப் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆ. சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில், 11 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியத் தலைவராக அந்தோணி, ஒன்றியச் செயலாளராக ஏ. வடிவேல், பொருளாளராக டி. தங்கவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டப் பொருளாளர் பி. வேல்முருகன் நிறைவுரையாற்றினார்.

அனைவருக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், சட்டப்படியான கூலி ரூ.700 வழங்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வெள்ளப்பட்டி மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். கல்லடை ஊராட்சி கீழ் வெளியூரில் உள்ள பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக் குழு உறுப்பினர் டி. செல்வம் நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சை தமிழ்ப் பல்கலை.க்கு தமிழக அரசு ரூ.43.21 கோடி ஒதுக்கீடு

தஞ்சாவூர், ஆக. 17- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு 2026 - 27 ஆம் ஆண்டுக்கான தொகுப்பு நல்கையாக ரூ.43.21 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என துணைவேந்தர் குழு உறுப்பினர் பெ. பாரதஜோதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தமிழப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜனவரி பருவத்தில் முனைவர் பட்டத்துக்கு 30 மாணவர்களும், 2026 - 27 ஆம் கல்வியாண்டில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு 123 மாணவர்களும், ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப்படிப்புக்கு 74 மாணவர்களும், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு 130 மாணவர்களும், இளங்கல்வியியல் மற்றும் கல்வியியல் நிறைஞர் படிப்புகளுக்கு 62 மாணவர்களும் என மொத்தம் 419 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டின் தொகுப்பு நல்கையாக 43 கோடியே 21 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயும், வருகைதரும் பேராசிரியர்களின் மதிப்பூதியத்துக்காக 36 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளது’’ என்றார். கடந்த 2016 முதல் 2026 வரையிலான ஒன்றிய, மாநில அரசின் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மாணவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. பேச்சு, கட்டுரை, ஓவியம், பட்டிமன்றம் போன்ற போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஜெயபால், நடத்துநர் பிரபு கௌரவிக்கப்பட்டனர்.