கர்நாடகா: முஸ்லிம் எம்.எல்.ஏ-க்கள் தொகுதிகளில் 27.59% வாக்காளர்கள் நீக்கம்!
yesterday

கர்நாடகாவில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 சட்டமன்றத் தொகுதிகளில், எஸ்.ஐ.ஆர் மூலம் மொத்தம் 27.59% வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்பது வர்த்தா பாரதி நாளிதழ் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசியல் ஆய்வு நிறுவனமான 'சங்கல்ப்' வெளியிட்ட வாக்குச்சாவடி வாரியான தரவுகளை 'வார்த்தா பாரதி' நாளிதழ் ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில்,கர்நாடகாவில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 சட்டமன்றத் தொகுதிகளில், எஸ்.ஐ.ஆர் மூலம் மொத்தம் 27.59% வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

10 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் விகிதம் கர்நாடகாவின் வாக்காளர்கள் நீக்க விகிதமான 19.45%-ஐ விடக் கணிசமாக அதிகமாகும்.

2025-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 9,62,359 முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 2,46,759 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன; இதில் முஸ்லிம் வாக்காளர்கள் 25.64% பேர், பிற மதத்தை சேர்ந்த வாக்காளர்கள் 28.79% பேர் என்பதாகும்.

இந்த 10 தொகுதிகளில் அதிகபட்சமாக பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் 1,07,722 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து குல்பர்கா வடக்குத் தொகுதியில் 1,05,257 பேரும், மைசூரு நரசிம்மராஜா தொகுதியில் 99,367 பேரும், பெங்களூரு சிவாஜிநகர் தொகுதியில் 81,230 பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ராமநகரம் தொகுதியில் 28,088 பேரும், மங்களூரு தொகுதியில் 16,989 பேரும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதர தொகுதிகளான சாந்திநகர், பீதர், பெலகாவி வடக்கு, ஷிகான் ஆகியவற்றிலும் கணிசமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற வாக்குச்சாவடிகளை அடிப்படையாகக் கொண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, காங்கிரஸ் வலுவாக உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் 22,35,155 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் வாக்குச்சாவடி வாரியான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மொத்த 1,07,76,645 நீக்கங்களில் இது 20.74 சதவிகிதமாகும். கர்நாடகாவின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் 39 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களில் 35 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் காங்கிரஸ் வலுவாக உள்ள வாக்குச்சாவடிகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த 39 தொகுதிகளில் 2023 சட்டமன்றத் தேர்தலில் 26 தொகுதிகளை காங்கிரசும், 11 தொகுதிகளை பாஜகவும், இரண்டு தொகுதிகளை மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைப்பற்றியிருந்தன.

இந்த 39 தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் முஸ்லிம்களின் சராசரி பங்கு 22 சதவிகிதமாக உள்ளது. ஆனால், கர்நாடகாவின் அனைத்து 224 தொகுதிகளிலும் முஸ்லிம் வாக்காளர்களின் சராசரி பங்கு 12.9 சதவிகிதம் மட்டுமே.

வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில், முஸ்லிம் வாக்காளர்கள் இரண்டு பிரிவுகளில் அதிகமாக நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதேபோல், ஏற்கெனவே வேறு இடத்தில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி நீக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு 20.3 சதவிகிதமாக உள்ளது.

கர்நாடகாவில் வீடுகளில் இல்லை என்ற காரணத்தின் கீழ் மொத்தம் 15,15,088 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,58,770 பேர் முஸ்லிம்கள்.

ஏற்கெனவே வேறு இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மொத்தம் 7,08,666 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,43,940 பேர் முஸ்லிம்கள். அதாவது, இந்தப் பிரிவில் நீக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் முஸ்லிம் ஆவார்.

ஆனால், இறந்துவிட்டதாகக் கூறி நீக்கப்பட்ட வாக்காளர்களில் முஸ்லிம்களின் பங்கு 12.2 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. இந்தப் பிரிவில் மொத்தம் 2,00,277 முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் பெயர்களை அரசு இறப்புப் பதிவேடுகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டு சரிபார்க்க முடியும். ஆனால், 'வீட்டில் இல்லை', 'வேறு இடத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளார்' போன்ற காரணங்கள் பெரும்பாலும் களப்பணியாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கள ஆய்வு மதிப்பீடுகளைச் சார்ந்தவை.

இந்நிலையில், வீட்டில் இல்லை என்று குறிப்பிட்டு ஒருவரின் பெயரை நீக்குவதற்கு முன்பு எத்தனை முறை அந்த வீட்டுக்கு அலுவலர்கள் சென்றனர்? வேறு இடத்தில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார் என்று கூறுவதற்கு என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன? போலி அல்லது இரட்டைப் பதிவுகள் என்று கண்டறியப்பட்டதற்கான ஆதாரங்கள் என்ன? என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

கர்நாடகாவில் முஸ்லிம் வாக்காளர்கள் 15 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள 64 சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 64 தொகுதிகளிலும் 2025 வாக்காளர் பட்டியலின்படி 38,82,598 முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 8,80,543 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது 22.67 சதவிகிதமாகும்.

இதே தொகுதிகளில் பிற சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர் நீக்க விகிதம் 20.19 சதவிகிதமாக உள்ளது. அதாவது, முஸ்லிம் வாக்காளர்களின் பெயர் நீக்க விகிதம் 2.48 சதவிகிதப் புள்ளிகள் அதிகமாகும்.

மீதமுள்ள 160 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர் நீக்க விகிதம் 20.27 சதவிகிதமாகவும், பிற சமூகத்தினரின் பெயர் நீக்க விகிதம் 18.79 சதவிகிதமாகவும் உள்ளது.

வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்கப்பட்ட எண்ணிக்கைக்கும், அதற்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய முரண்பாடு இருப்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

சங்கல்ப் நிறுவனம் ஜூன் 16, 2026 முதல் கண்காணித்த தரவுகளின்படி, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக 7,85,716 படிவம் 9 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் ஆணையத்தின் கணக்கில் 10,08,038 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரண்டுக்கும் இடையே 2,22,322 என்ற எண்ணிக்கை வித்தியாசம் உள்ளது. அதாவது, பெறப்பட்ட விண்ணப்பங்களைவிட சுமார் 1.3 மடங்கு அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகள் மூலம் 1,88,324 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 8,96,519 பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், 7.85 லட்சம் விண்ணப்பங்களுக்கு எதிராக 10.08 லட்சம் புதிய வாக்காளர்கள் எவ்வாறு சேர்க்கப்பட்டனர் என்பதற்கான விரிவான விளக்கத்தையோ, விண்ணப்பங்களின் நிலை குறித்த முழுமையான விவரங்களையோ தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வெளியிடவில்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.