தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய அரசின் சதிகளை முறியடிக்கும் மற்றுமொரு தொல்லியல் களம் “கரிவலம்வந்தநல்லூர்” - சு. வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்

16 Jul 2026, 8:56 pm
ஒன்றிய அரசின் சதிகளை முறியடிக்கும் மற்றுமொரு தொல்லியல் களம் “கரிவலம்வந்தநல்லூர்” - சு. வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்

ஒன்றிய அரசின் சதிகளை முறியடிக்கும் மற்றுமொரு தொல்லியல் களம் “கரிவலம்வந்தநல்லூர்” - சு. வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்

மதுரை, ஜூலை 16 - கீழடியைத் தொடர்ந்து, தமிழக வரலாற்றுப் பெருமைக்கு வளம் சேர்க்கும் மற்றொரு சான்றுக்களமாக ‘கரிவலம்வந்தநல்லூர்’ மண்ணுக்குள் இருந்து மேலெழத் தொடங்கியுள்ளதாக மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு அகழாய்வு செய்யப்பட வேண்டிய 8 இடங்களைக் கண்டறிந்து, அதற்கான முறையான அனுமதி கோரும் கடிதத்தைத் தமிழக அரசின் தொல்லியல் துறை, கடந்த 2025 ஜூலை மாதம் இந்தியத் தொல்லியல் துறைக்கு அனுப்பியது.

இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அகழாய்வு செய்யும் காலங்கள் மாறுபடுகின்றன. வட இந்தியாவில் மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்குவதால், அது முடிந்த பின், நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மே மாதம் வரை அகழாய்வுப் பணிகள் நடைபெறும். தென் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழைக் காலம் என்பதால், ஜனவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை அகழாய்வுப் பணிகள் நடைபெறுவது பல்லாண்டுகளாகப் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.

தமிழ்நாட்டிற்கு மட்டும் மறுக்கப்படும் நீதி!

இந்தியா முழுவதற்கும் அகழாய்வு எங்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான ஒப்புதல் தரும் அமைப்பாக, ஒன்றியத் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் “மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழு” (CABA - Central Advisory Board of Archaeology) உள்ளது. இந்தக் குழுவின் தலைவர் ஒன்றியக் கலாச்சாரத் துறை அமைச்சர் ஆவார். அகழாய்வு செய்யப்பட வேண்டிய இடம் குறித்த விண்ணப்பத்தை இந்தக் குழுவிடம் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் குழு மூன்று மாத காலத்திற்குள் முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், இந்த நீதி தமிழ்நாட்டிற்கு மட்டும் வழங்கப்படுவதில்லை.

உரிய காலத்தில் துவங்க முடியாத அகழாய்வு!

2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அகழாய்வு செய்யப்பட வேண்டிய 8 இடங்களைப் பட்டியலிட்டு, அதற்கான விண்ணப்பத்தைத் தமிழகத் தொல்லியல் துறை 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதமே ஒன்றிய அரசுக்கு அனுப்பிவிட்டது. நவம்பர் மாதம் ஒன்றியக் கலாச்சாரத் துறை அமைச்சரின் தலைமையில் ‘காபா’ (CABA) கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் அனுமதி கோரிய பிற மாநிலங்களுக்கு அகழாய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது; ஆனால், தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டுக்கான அகழாய்வுப் பணி ஜனவரியில் தொடங்கப்பட வேண்டும். ஆனால், ஒன்றிய அரசின் அனுமதி இல்லாததால் பணி தொடங்கப்படாமல் காலதாமதமானது. மார்ச் மாதம் வரை அனுமதி வழங்கப்படவில்லை.

ஒன்றிய அரசிடம் தொடர்ந்து முறையிட்டேன்

எனவே, மார்ச் 9 அன்று, ஒன்றியக் கலாச்சாரத் துறை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில்: “கீழடி, ஆதிச்சநல்லூர், நாகப்பட்டினம், தெலுங்கானூர்-மங்கடு, வெள்ளலூர், மணிகொல்லை, கரிவலம்வந்தநல்லூர் மற்றும் பட்டினமருதூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இப்பகுதியின் பண்டைய வரலாறு மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கம் கொண்ட இந்த முன்மொழிவுகள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (ASI) ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தவரை, களப்பணியைச் செய்ய ஜனவரி முதல் ஜூலை வரை மிகவும் உகந்த காலமாகும். தற்போது மார்ச் மாதம் நடைபெற்று வருகிறது; ஒவ்வொரு நாள் தாமதமும் இந்த அறிவியல் ஆய்வுகளின் தரம் மற்றும் காலக்கெடுவை பெருமளவில் பாதிக்கிறது. அகழாய்வுக்கான தொழில்நுட்ப அனுமதி நிலுவையில் இருப்பது கவலையளிக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் அனுமதி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினேன்.

போராட்டங்களுக்குப் பின் கிடைத்த அனுமதி

அன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து, “அனுமதியைத் தாமதப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை, உடனடியாக வழங்குங்கள்” என்று வலியுறுத்தினேன். இறுதியில் மார்ச் 16 அன்று அனுமதி வழங்கப்பட்டது; மார்ச் 21 அன்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எனக்குப் பதில் கடிதம் எழுதினார். அகழாய்வுக்கான மூன்று மாத காலத்தை இழந்திருந்தாலும், ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் எவ்விதத் தாமதமும் இன்றிப் பணியைத் தமிழகத் தொல்லியல் துறை உடனடியாகத் தொடங்கியது.

கரிவலம்வந்தநல்லூரில் மேலெழுந்த புதிய சான்று

அகழாய்வுப் பணி தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைவதற்குள், தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் - க.மலையடிப்பட்டியில் கீழடியைப் போன்ற சங்க கால வாழ்விடப் பகுதி கண்டறியப்பட்டுள்ளது. ஈராயிரம் ஆண்டுகள் பழமையான செங்கல் படிக்கட்டுக் கிணறு, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், கண்ணாடி மணிகள்உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழக வரலாற்றுக்கு வளம் சேர்க்கும் மற்றொரு சான்றுக்களம் மண்ணுக்குள் இருந்து மேலெழத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் இரண்டு ஆங்கில நாளிதழ்கள் இது குறித்துச் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. முன்னாள் தொல்லியல் துறை அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு, மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஒன்றிய அரசு எந்தக் காரணத்திற்காக அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தியதோ, அந்தக் காரணத்தின் உண்மை யை அகழாய்வுக் குழிகள் மெய்ப்பி க்கத் தொடங்கியுள்ளன. அதற்காகவே தமிழகம் பெருமிதம் கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

எங்கள் வரலாறே, உங்களின் வெறுப்பிற்கு எதிரான ஆயுதம்

ஒன்றிய மோடி அரசே, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை, கீழடியில் எதுவுமில்லை என்று வஞ்சகம் செய்து வெளியேறிப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி அகழாய்வை முடித்துப் பத்து ஆண்டுகள் கடந்தும், இன்னும் அவரது அறிக்கையை வெளியிட நீங்கள் தயாராக இல்லை. ஒன்றியத் தொல்லியல் துறை தமிழகத்தில் வந்து அகழாய்வு செய்யவும் முன்வருவதில்லை; தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வு செய்ய அனுமதி கேட்டால் உரிய காலத்திற்குள் அனுமதி வழங்கவும் நீங்கள் தயாராக இல்லை. தமிழகத்தின் மீதும், தமிழக வரலாற்றின் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பை உங்களின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்துகிறீர்கள்.

உங்கள் செயலுக்கான பதில் எங்கள் செயலில் இருக்கிறது.

வேத காலத்திற்கு முற்பட்ட செழுமை மிகு நாகரிகத்தின் அனைத்துத் தடயங் களும் தமிழ் நிலத்தின் திசைகள் தோறும் நிரம்பியுள்ளன. சங்க இலக்கியம் பேசும் வாழ்வியல் உண்மைகளையும், வர லாற்றுச் சான்றுகளையும் இப்புதிய கண்டு பிடிப்புகள் இடைவிடாமல் மெய்ப்பிக்கும். “எங்கள் வரலாறே எங்கள் ஆயுதம்” என்பதை கரிவலம்வந்தநல்லூரும் நிரூபிக்கும்! இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.