திருச்சி விரைவு செய்திகள்
20 May 2026, 9:52 pm

போதுமான விதைகள் -உரங்கள் இருப்பு: கன்னிப்பூ நெல் சாகுபடியை சிறந்த முறையில் செய்திடுக! குமரி ஆட்சியர் வேண்டுகோள்

நாகர்கோவில்,மே 20- கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள் மற்றும் உரங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு பெற்ற ஏஎஸ்டி 16, டிபிஎஸ் -5 மற்றும் ஏஎஸ்டி-21 ரக சான்று மற்றும் ஆதார நெல் விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு உள்ளது. யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட இரசாயன உரங்களும், அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்களும் மாவட்டம் முழுவதும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கன்னிப்பூ சாகுபடிக்காக குமரி மாவட்ட விவசாயிகள் தீவிரமாக தயாராகி உழவு செய்து வருகின்றனர். குமரி மாவட்ட விவசாயத்தின் முதுகெலும்பாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் முறையே 23.6 அடி மற்றும் 27 அடி நீர்மட்டம் உள்ளது. கடந்த வருடங்களைப் போல் ஜுன் முதல் தேதியில் அணைகள் பாசனத்திற்காக திறக்கப்பட கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குமரி மாவட்டத்தில் பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. எனவே கன்னிப்பூ சாகுபடிக்கான ஆயத்தப்பணிகள் மேற்கொண்டு கன்னிப்பூ நெல் சாகுபடி சிறந்த முறையில் செய்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.

காளிகேசம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

நாகர்கோவில்,மே 20- குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக காளிகேசம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் காளிகேசம் சுற்றியுள்ள பகுதியில் பெய்த கனமழையினால் காளிகேசம் ஆற்றில் தண்ணீர் கலங்கி வருவதாலும் மேலும் மலைப்பகுதியில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாலும் காளிகேசம் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

நாகர்கோவில் சாலையில் தேங்கிய மழைநீர்

நாகர்கோவில்,மே 20- நாகர்கோவில் மாநகராட்சி மறவன்குடியிருப்பு பேருந்து நிறுத்தம் அருகே மழை நீர் வடிகால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தகவல் அறிந்து வந்த மேயர் மேரி பிரின்சி லதா ஆய்வு மேற்கொண்டு கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகள் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தேசிய பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற பெண் தலைமை காவலர் போலீஸ் எஸ்.பி.,பாராட்டு

நாகர்கோவில்,மே 20- இந்திய அளவில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டு பதக்கத்தினை வென்ற பெண் தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். இரண்டாவது அகில இந்திய காவல்துறை பேட்மிண்டன் தொடர்- 2026 மே 9 முதல் மே 13 வரை உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிபிடி பேட்மிண்டன் அகாடமியில் நடைபெற்றது. இந்த 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான பேட்மிண்டன் விளை யாட்டுப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து, ஆயுதப்படை பெண் தலைமை காவலர் ஜீவா கலந்துகொண்டு மூன்றாம் பரிசினை வென்றார். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ரா.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

வேகத்தடையில் தடுமாறி விழுந்து பைக்கில் வந்த வாலிபர் பலி

தூத்துக்குடி, மே 20- திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (20). இவர் தூத்துக்குடி பூபால்ராயர்புரம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்து, உள்ளூர் சலூன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். செவ்வாயன்று இரவு வேலை முடிந்ததும், ஹரிகிருஷ்ணன் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு டீ குடிப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். இவர்களது பைக் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவ மனை பிரதான சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த சாலையில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வேகத்தடையில் வேகமாக ஏறி இறங்கியதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த ஹரிகிருஷ்ணன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதனால் அவரது தலையின் பின் புறத்தில் பலத்தக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்குப் பரிசோதனை செய்த அவச ரச் சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர், ஹரிகிருஷ்ணன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இவ்விபத்து குறித்துத் தூத்துக்குடி வடபாகம் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

கார்களில் கடத்த முயன்ற 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்

அருமனை, மே 20- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே புதன்கிழமை காலையில் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் விளவங்கோடு வட்டம் பகுதி யில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அருமனை அருகே காரோடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த தமிழ்நாடு பதிவு எண் கொண்ட காரை நிறுத்தும் படி சைகை காட்டினர். அப்போது நிறுத்தாமல் அதி வேகமாக கார் சென்றது. மாங்கோடு வழியாக பனச்சமூடு கேரளா ஒற்ற சேகரமங்கலம் நெய்யாற்றின் கரை விழிஞ்ஞம் வழியாக சுமார் 37 கிலோ மீட்டர் துரத்தி சென்று கேரளாவில் உள்ள முக்காலா என்ற இடத்தில் வைத்து கடத்தல் காரை பிடித்தனர். காரிலிருந்து இரண்டு பேர் தப்பி ஓடினர். காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 2000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடித்த அரிசியை காப்புங்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் காரை திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விளவங்கோடு வட்டம் மாங்கோடு பகுதியில் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்த போது மினி வேனை நிறுத்தும் படி கூறினர். ஓட்டுநர் தப்பி ஓடினார். மினி வேனை சோதனை செய்த தில் அதில் சுமார் 1000 கிலோ பொது வினி யோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. பிடிபட்ட அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டு கடத்தல் வாகனத்தை திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாது காப்பாக நிறுத்தப்பட்டது.

திருச்செந்தூர் ஸ்டார்ஸ் மாடல் பள்ளி மாணவி சாதனை

தூத்துக்குடி, மே 20- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், திருச்செந்தூர் ஸ்டார்ஸ் மாடல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி பெர்னிஸ் செல்வகுமாரி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் குமாரபுரம் பகுதியில் உள்ள ஸ்டார்ஸ் மாடல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் முழுமையாகத் தேர்ச்சி பெற்று, நூறு சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும், இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி பெர்னிஸ் செல்வகுமாரி, 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேலும் அவர் தமிழக அளவில் 4-ஆவது இடத்தை பெற்று பள்ளிக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். சாதனை புரிந்த மாணவி பெர்னிஸ் செல்வகுமா ரிக்கும், 100 சதவிகிதம் தேர்ச்சி பெற உழைத்த பிற மாணவச் செல்வங்களுக்கும் பள்ளியின் வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், சாதனை மாணவிக்கு ஆடை மற்றும் இனிப்புகள் வழங்கிப் பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

நாளை தென்காசி கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தென்காசி, மே 20- தென்காசி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் தலைமையில் மே 22 வெள்ளிக்கிழமையன்று மதியம் 12 மணியளவில் தென்காசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் (முதல் மாடியில்) நடத்தப்படவுள்ளது. எனவே, மேற்படி கூட்டத்தில் தென்காசி கோட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், வீரகேரளம்புதூர் மற்றும் கடையநல்லூர் வட்டங்களைச் சார்ந்த விவசாய பெருங்குடிமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவிபால் தெரிவித்துள்ளார்.

பைக் திருடியவர் கைது

குழித்துறை, மே 21- மார்த்தாண்டத்தில் பைக் திருட்டு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம், காப்பிக்காட்டைச் சேர்ந்தவர் சேம்தாஸ் (வயது 64). இவர் மார்த்தாண்டம் ஜங்ஷனில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வருகிறார். தினசரி பைக்கில் வந்து அந்தப் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு பணிக்குச்செல்வார். இரவில் பணி முடிந்து பைக்கை எடுத்துச் செல்வது வழக்கம். சம்பவத்தன்று பணிக்கு வந்தவர் இரவு சென்று பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காஞ்சிரகோடு தட்டான் விளையைச் சேர்ந்த ஜெபசிங் பைக்கை திருடிச் செல்வது தெரியவந்தது. போலீசார் ஜெபசிங்கை கைது செய்து பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தென்காசி மாவட்டத்தில் 95.60 சதவீதம் பேர் தேர்ச்சி

தென்காசி, மே 20- 2025-26 ஆம் கல்வியா ண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 அன்று வெளியிடப் பட்டன. தென்காசி மாவட்டத் தில், 2025-26 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொ துத்தேர்வினை 226 உயர் / மேல்நிலைப்பள்ளிகளைச் சார்ந்த 8865 மாணவர்களும், 9303 மாணவிகளும் மொத் தம் 18168 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். அவ்வாறு தேர்வு எழுதியவர்களில் 8284 மாணவர்களும், 9084 மாணவிகளும் மொத்தம் 17368 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தென்காசி மாவட்டம் 95.60 சதவீதம் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தைப் பெற்று மாநில அளவில் 16 ஆம் இடம் பிடித்துள் ளது. தென்காசி மாவட்டத் திற்குட்பட்ட 226 உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 21 அரசுப்பள்ளிகள் உட்பட மொத்தம் 93 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ள தாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.60 சதவீதம் பேர் தேர்ச்சி மாநில அளவில் 9ஆவது இடம்

தூத்துக்குடி,மே 20- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் 96.60 சதவிகித தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 9- ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 159 பள்ளிகள் நூறு சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளன. நடப்பு 2025-2026 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 21,762 மாணவ, மாணவிகள் எழுதி னர். இதில் 21,022 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 96.60 ஆகும். 159 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 308 பள்ளிகளில், 159 பள்ளிகள் தங்களது மாணவர்களை 100 சதவிகிதம் முழுமையாகத் தேர்ச்சி பெறச் செய் துள்ளன. அதேபோல், மாவட்டத்தில் உள்ள மொத்தம் 89 அரசுப் பள்ளிகளில் 40 பள்ளி கள் நூறு சதவிகித தேர்ச்சியைப் பதிவு செய்து, தனியார் பள்ளிகளுக்கு இணை யாக முத்திரை பதித்துள்ளன. சாதனைகள் புரிந்த மாணவர்களையும் அதற்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்ன ராணி மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.