கன்னியாகுமரியில் குதூகலம் முக்கடல் சங்கமத்தில் களைகட்டிய பாலர் பூங்கா - தொகுப்பு: சி.முருகேசன்
3 Oct 2026, 11:47 pm

கன்னியாகுமரியில் குதூகலம் முக்கடல் சங்கமத்தில் களைகட்டிய பாலர் பூங்கா - தொகுப்பு: சி.முருகேசன்

மூன்று கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியின் கரையில், அக்டோபர் தொடக்கத்தில் ஒரு புதிய அலை எழுந்தது — அது குழந்தைகளின் சிரிப்பலை. தமிழ்நாட்டின் 34 மாவட்டங்களிலிருந்து சங்கமித்த 164 குழந்தைகள், பாலர் பூங்காவின் மாநில மாநாட்டில் ஒன்றுகூடி, கற்றலும் களிப்பும் கைகோர்த்த ஒரு புதிய உலகை அங்கே படைத்தனர்.

தேசத் தந்தை காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று, காந்திஜியின் முகக் கவசம் அணிந்த சுமார் 200 குழந்தைகள் அணிவகுத்து அஞ்சலி செலுத்திய காட்சி, பார்த்தவர்களின் கண்களை ஈரமாக்கியது. சிறிய கைகள் கூப்பி, பெரிய இதயத்தின் மதிப்பை அவர்கள் வெளிப்படுத்தினர். மாநாட்டுக்கு கே. முகிலன், எம். சுகினாபாரதி, கீர்த்தி, ஜீவா, பிரியங்கா ஆகியோர் தலைமை தாங்கினர்; வரவேற்புக் குழுத் தலைவர் விஞ்ஞானி அருள் ஜெரால்டு பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.

‘போட்டியல்ல, கூட்டுச் செயல்பாடு தான் கல்வி’

மாநாட்டைத் தொடங்கி வைத்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், குழந்தைகளின் மனதில் அறிவியலின் விதையைத் தூவினார். ‘விஞ்ஞானிகளாகிய நாங்கள் தனித்தனியாகச் செயல்படுவதில்லை; குழுவாகவே விவாதித்து முடிவெடுக்கிறோம். ஆனால் நமது பள்ளிகளில் குழுவாகக் கற்கும் முறை இல்லை; போட்டிபோட்டுப் படிக்கும் மனநிலையே வளர்க்கப்படுகிறது. போட்டியால் கற்க முடியாது — கூட்டாகத்தான் கற்க முடியும். பாலர் பூங்கா போன்ற அமைப்புகளில் இணைந்து கற்க வேண்டும்’ என்று அவர் கூறியபோது, குழந்தைகளின் கண்களில் புரிதலின் ஒளி மின்னியது. பல்வேறு நிகழ்வுகள் மூலம் அறிவியல் உண்மைகளை அவர் விளையாட்டாக விளக்கினார்.

கேரள மாநில பாலர் சங்கக் கருத்தாளர் பி.டி. ராஹேஷ், இரு மாநிலங்களின் உள்ளத்தையும் ஒரே நூலில் கோர்த்தார். ‘கேரளத்தில் பாலர் சங்கம், தமிழ்நாட்டில் பாலர் பூங்கா — இரண்டின் முழக்கமும் ஒன்றுதான்: சாதி, மத வேறுபாடின்றி மனிதர்கள் அனைவரும் ஒன்று என்பதே’ என்றார். குழந்தைப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் கேரள பாலர் சங்கத்தின் முதல் தலைவராகி, முதலமைச்சர் ஆன இ.கே. நாயனாரையும், தமிழகத்தில் குழந்தை பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பாப்பா உமாநாத், ஜானகி அம்மா போன்ற தலைவர்களையும் அவர் நினைவுகூர்ந்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் என். அமிர்தம் அறிக்கையை முன்வைக்க, பூங்காவின் நோக்கங்களை வி. ராமமூர்த்தியும், சட்டதிட்டங்களை சி. சசிகுமாரும் விளக்கினர்.

‘பால பாரதியான நான் பாலர் பாரதியாகிவிட்டேன்’

கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி. லதா உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். வாழ்த்துரை வழங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி, குழந்தைகளின் குரலுக்கு மதிப்பளித்தார். ‘பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவிலும் சத்துணவிலும் பால், பயறு போன்ற சத்தான உணவுகள் சேர்க்கப்பட வேண்டும் என்ற குழந்தைகளின் கோரிக்கை இன்று தீர்மானமாக நிறைவேறியுள்ளது. இந்தக் குழந்தைகளே எதிர்கால இந்தியா; அவர்களின் உரிமை, கல்வி, ஆரோக்கியம் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இறுதியில், ‘பால பாரதி என்கிற நான் உங்களோடு பாலர் பாரதியாகிவிட்டேன்’ என்று அவர் குழந்தைபோல் மகிழ்ந்தபோது, அரங்கமே கைதட்டலில் மூழ்கியது.

சத்திய சோதனையும் சிலம்பின் நீதியும்

மாநாட்டை உணர்வுச் சிகரத்துக்குக் கொண்டு சென்றவை குழந்தைகளின் நாடகங்கள். குமரி கோடைச்சிட்டுகள் குழுவின் மாணவ மாணவிகள், காந்தியடிகள் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை நெகிழ்ச்சியான நாடகமாக்கினர். காந்தி படுகொலையைச் சாதாரண மரணமாகச் சித்தரிக்க முயலும் நவீன உலகின் ‘கோட்சே வாரிசுகளை’ அம்பலப்படுத்திய அந்நாடகம், மனித நேயமும் காந்தியமும் தோற்கக் கூடாது என்ற கருத்தை ஆழமாகப் பதித்தது.

மற்றொரு நாடகத்தில், திருப்போரூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜீவந்தினி கண்ணகியாக உருவெடுத்தார். காற்சிலம்புடன் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடமும் கோப்பெருந்தேவியிடமும் நீதி கேட்கும் அரசவைக் காட்சியில், குரலையும் திசையையும் மாற்றி மூன்று கதாபாத்திரங்களையும் அவர் தனியொருவராக நடித்து நகர்த்திய நேர்த்தி அனைவரின் பாராட்டையும் அள்ளிச் சென்றது. ஐந்து வயது ருஷியின் பாடல், சிலம்பாட்டம், அறிவியல் அற்புதங்கள், கலந்துரையாடல் என ஒவ்வொரு நிகழ்வும் குழந்தைகளின் உற்சாகப் பெருக்காய் அமைந்தது.

போர் வேண்டாம், சமாதானமே நிரந்தரம்

மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேறின. பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதல், ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்கப் போர், உக்ரைன் மீதான ரஷ்யப் போர் ஆகியவற்றில் பள்ளிகளும் மருத்துவமனைகளும் குறிவைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டும், குடும்பத்தை இழந்தும், மனநலம் குன்றியும் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, ‘இந்தப் போர்கள் அறவே கூடாது; சமாதானமே நிரந்தரமாக வேண்டும்’ எனத் தீர்மானம் இயற்றப்பட்டது.

தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்புப்படி (NFHS) தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 25 சதவீதக் குழந்தைகள் வளர்ச்சி குன்றிக் காணப்படுவதை ஒரு தீர்மானம் சுட்டிக்காட்டியது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் ரிக்கட்ஸ், எலும்பு அடர்த்தி குறைபாடு ஆகியவற்றைப் போக்க, அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் சத்துணவுடன் இணைத்துக் காலையிலோ மாலையிலோ பால் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது. ஐசிடிஎஸ் திட்டத்தின் கீழ் சத்துமாவு வழங்கும் திட்டத்தை 5 வயது வரை நீட்டிக்கவும், ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்கவும், உள்ளாட்சிகளில் சிறுவர் சபை அமைக்கவும், பட்ஜெட்டில் குழந்தைகளுக்கான நிதியை உயர்த்தவும், நகரம்-கிராமம்தோறும் நவீன சிறப்புப் பூங்காக்கள் அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேறின.

நிர்வாகிகள் தேர்வு; ஓவியத்தில் வண்ணத்துப்பூச்சிகள்

31 பேர் கொண்ட மாநிலக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைவராக சுகினா பாரதி (கடலூர்), செயலாளராக முகிலன் (திருப்பூர்) தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாகக் கோனாட்சி, ஜீவா, ஆனந்த், குயிலி, வெண்மணி, துர்கா, சாதனா உள்ளிட்ட 9 பேர் நிர்வாகிகளாயினர். அமைப்பாளராக என். அமிர்தம், ஒருங்கிணைப்பாளராக சி. சசிகுமார், நிதிப் பராமரிப்பாளராக ரமேஷ் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகளை எஸ். வாலன்டினா அறிமுகம் செய்ய, எஸ். கோடீஸ்வரி உறுதிமொழி வாசித்தார்; எஸ். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். மாநாடு நடந்த சிஎஸ்ஐ மையத்தில், குழந்தைகளை வண்ணத்துப்பூச்சிகளாக உருவகப்படுத்தி ஓவியர் சுரேஷ் தீட்டிய ஓவியமும், அவரே வடிவமைத்த மகாத்மா காந்தி சிலையும் அனைவரையும் கவர்ந்தன.

பல ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்து பாலர் பூங்காக்களை அமைக்கப் பாடுபட்ட என். அமிர்தம், குழந்தைகள் ஒன்றுகூடி மாநாடு நடத்திய இந்நிகழ்வைப் பெற்ற தாயின் நெகிழ்ச்சியுடன் பார்த்தார். ‘தமிழ்நாட்டின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது’ என்று அவர் தெரிவித்தார். ‘கற்று நாங்கள் நல்லராவோம், வென்று நாங்கள் முன்னேறுவோம், கட்டி எழுப்புவோம் இந்தியாவில் அழகிய சமத்துவ புது உலகம்’ என்ற முழக்கத்துடன், கன்னியாகுமரியின் கரையில் பாலர் பூங்கா எழுந்திருக்கிறது. மாநாட்டில் பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.எஸ். கண்ணன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.