வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் வரலாறு படைத்தவர்களின் கதை! - எம்.ஜே.பிரபாகர்
12 Jul 2026, 10:00 pm
<p><strong>வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் வரலாறு படைத்தவர்களின் கதை! - எம்.ஜே.பிரபாகர்</strong></p><p>“பார்வையற்ற சாதனையாளர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கவில்லை... தங்களுக்குரிய வாய்ப்பு களைத் தாங்களே உருவாக்கினார்கள்...” என்ற உண்மையை உரக்கச் சொல்கிறது 10 எழுத்தாளர்கள் இணைந்து 26 பார்வையற்ற மாற்றுத்திறனாளிச் சாதனையாளர்களை நேர்காணல் செய்து உருவாக்கியுள்ள ‘காண்பதெல்லாம் மறையுமென்றால்’ என்னும் உன்னத நூல். பல்வேறு துறைகளில் முன்னோடிகளாகத் திகழும் இம்மாமனிதர்களின் வெற்றிப் பயணங்களை, அவர்களின் நிஜமான வாழ்வியல் சவால்களோடும் உணர்வுப்பூர்வமான அனுபவங்களோடும் இத்தொகுப்பு பதிவு செய்துள்ளது. பிறவியிலேயே பார்வையற்றவராக இருந்தாலும் சென்னை, தில்லி, இங்கிலாந்து எனப் பல்வேறு இடங்களில் பயின்று முனைவர் பட்டம் பெற்று, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் 25 ஆண்டுகாலம் துணை ஆசிரியராகப் பணியாற்றி, அதன் தலையங்கங்களை எழுதிய வியத்தகு ஆளுமை முனைவர் கரிமெள்ள சுப்ரமணியம்; மூளையில் ஏற்பட்ட புற்றுநோயால் பார்வை இழந்த பின்பும், வினாடி-வினா போட்டிகளில் பார்வையாளராக அமர்ந்து போட்டியாளர்களை விட அதிகப் பதில்களை அள்ளித் தந்து பரிசுகளை வென்ற முனைவர் ஏ.ராம்குமார்; சாதாரண ராணுவ வீரராகத் தன் பயணத்தைத் தொடங்கி, அங்கேயே பொறியியல் பட்டம் பெற்று படிப்படியாக உயர்ந்த பார்வையற்ற லெப்டினென்ட் கர்னல் சி. துவாரகேஷ் ஆகியோரின் வீரம் செறிந்த கதைகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்றதும், 2014-ல் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் (UPSC) வென்று இந்தோனேசியாவில் இந்தியத் தூதராகப் பணிபுரிந்து வரும் பெனோ ஜெஃபின் அழகிரி ஐஎப்எஸ்; கண் பார்வையற்றோர், காது கேளாதோர் போன்ற சொற்களை மாற்றி ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற சொல்லாடலை உருவாக்க உழைத்ததோடு, “கண்ணோட்டங்களை விரிவடையச் செய்வதே ஆசிரியரின் கடமை” என வாழும் ஐஐடி பேராசிரியர் முனைவர் ஹேமச்சந்திரன்; உயர் கணிதத்தில் இந்திய அளவில் முதன்முறையாக முனைவர் பட்டம் பெற்று, தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் ராமானுஜன் கணித ஆய்வுப் பிரிவின் தலைவராகச் சாதனை புரிந்து வரும் முனைவர் சுஷ்மா அகர்வால் போன்ற பன்முகத் திறமையாளர்களின் வாழ்வை இந்நூல் நம் கண்முன்னே நிறுத்துகிறது. ‘காண்பதெல்லாம் மறையுமென்றால்’ என்பது வெறும் பொழுது போக்குக் காவியமல்ல; ஓடிக்கொண்டே இருக்கும் மனித வாழ்வின் வேகத்தைக் குறைத்து, சற்று அமர்ந்து நம்மை நாமே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு சுயபரிசோதனைக் கண்ணாடி. மாற்றுத்திறனாளிகள் சுயமரியாதையுடனும், சுயசார்புடனும் வாழக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி வரும் ‘மெய்ப்பொருள் தொண்டு நிறுவனம்’, தனது ‘மெய்ப்பொருள் பப்ளிகேஷன்ஸ்’ வழியே இந்நூலை மிக அழகிய வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளது. வாழ்வில் ஏதேனும் ஒரு தடையைக் கண்டு சோர்ந்து போகும் ஒவ்வொரு மனிதனுக்கும் புதிய நம்பிக்கையையும், அசாத்தியமான ஊக்கத்தையும் வழங்கும் ஆகச்சிறந்த வழிகாட்டி இப்புத்தகம். காண்பதெல்லாம் மறையுமென்றால் தொகுப்பு: 10 எழுத்தாளர்கள் (நேர்காணல் தொகுப்பு) வெளியீடு: மெய்ப்பொருள் பப்ளிகேஷன்ஸ், சென்னை. விலை: ₹280/- தொடர்புக்கு: 9363687259</p>
