தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கண்ணகி நகரின் கண்ணீர்ச் சிலம்பு :களத்தில் ஒலிக்கும் நீதியின் குரல் - சி. ஸ்ரீராமுலு

31 Oct 2026, 9:30 pm
கண்ணகி நகரின் கண்ணீர்ச் சிலம்பு :களத்தில் ஒலிக்கும் நீதியின் குரல் - சி. ஸ்ரீராமுலு

கண்ணகி நகரின் கண்ணீர்ச் சிலம்பு :களத்தில் ஒலிக்கும் நீதியின் குரல் - சி. ஸ்ரீராமுலு

சென்னையின் தென்கோடியில், ஒக்கியம் துரைப்பாக்கத்தை ஒட்டி நிற்கிறது கண்ணகி நகர். அதிகாலை இருட்டில் புறப்பட்டு, நகரின் வீடுகளைக் கூட்டி, கட்டி, சமைத்து, வண்டி ஓட்டி, இரவில் களைத்துத் திரும்பும் எளிய மனிதர்களின் குடியிருப்பு அது. ஒருகாலத்தில் இந்த முகவரியே ஒருவரின் தகுதியை முடிவுசெய்யும் முத்திரையாக இருந்தது. அந்த முத்திரையை ஒரு பதினெட்டு வயதுப் பெண் தட்டிவிட்டார். நீதி கேட்ட கண்ணகியின் பெயரைச் சுமக்கும் ஊரின் மகள் கார்த்திகா, சிலம்புக்குப் பதிலாகக் கபடிக் களத்தில் கைகளை நீட்டி நிற்கிறார். அவர் கண்ணில் தெரிந்த ஈரம்தான் இன்று இந்த வாரம் தமிழகத்தின் பேசுபொருள்.

கால் சிறியது, கனவு பெரியது

தந்தை ராஜ் கட்டுமானத் தொழிலாளி. தூய்மைப் பணியாளராக உழைத்த தாய் சரண்யா இன்று ஆட்டோ ஓட்டுகிறார். வறுமை அந்த வீட்டின் நிரந்தர விருந்தாளி. அக்காக்கள் கபடி ஆடுவதைப் பார்த்து வளர்ந்த சிறுமி ஆறாம் வகுப்பில் களமிறங்கினார். தந்தையின் பெரிய ஷூக்களை அணிந்து பயிற்சி செய்தார். கால் சிறியது, ஷூ பெரியது, கனவு அதைவிடப் பெரியது. உடற்கல்வி ஆசிரியரும் பயிற்சியாளர் ராஜியும் அந்த ஆர்வத்தைத் திறமையாகச் செதுக்கினார்கள். தேசிய ஜூனியர் அணி வரை அந்தக் கனவு உயர்ந்தது.

பதக்கங்களால் எழுதிய முகவரி

2023இல் இந்தியப் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பின் தேசியப் போட்டியில் தமிழ்நாடு முதன்முறையாகத் தங்கம் வென்றபோது அணியின் கேப்டன் கார்த்திகா. தேசிய அளவில் 11 முறை களமிறங்கி 8 தங்கம்; அவற்றில் 5 முறை கேப்டன். 2024 கேலோ இந்தியாவில் வெள்ளி. உச்சம் பஹ்ரைனில் வந்தது. 2025 ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியின் இறுதியில் இந்தியா ஈரானை வீழ்த்தியது. துணைக் கேப்டன் கார்த்திகாவின் ரைடுகள் ஈரானின் தடுப்பைச் சிதறடித்தன. கண்ணகி நகர் மேளதாளத்துடன் வரவேற்றது; அன்றைய முதலமைச்சர் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். “எங்கள் ஊரிலிருந்தும் முடியும்” என்று அவர் காட்டியது நூறு குடும்பங்களின் கனவுக்கு அனுமதிச் சீட்டானது.

அகமதாபாத்தில் உதிர்ந்த கண்ணீர்

இந்த நிலையில் தான், அகமதாபாத்தில் நடைபெறும் முதல் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பில், நைஜீரியாவை வீழ்த்தித் தொடர்ந்து நான்காவது வெற்றியுடன் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. அந்த ஆரவாரத்தின் நடுவே, பயிற்சியாளருடனான வருத்தத்தால் கார்த்திகா களத்திலேயே கண் கலங்கும் காணொலி பரவியது. தேசிய அளவில் ஆடிய வீரர்கள் உள்ளிட்ட பலரும், ஒரு தமிழக வீராங்கனைக்குப் போதிய வாய்ப்பு ஏன் தரப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

பயிற்சியாளரின் விளக்கம்

தலைமைப் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் சாதாரணமானவர் அல்ல. 2010 ஆசிய விளையாட்டுத் தங்கம் வென்றவர்; ஹாங்சோ ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் அணியைத் தங்கத்துக்கு வழிநடத்தியவர்; கபடியில் தியான் சந்த் விருது பெற்ற முதல் வீராங்கனை. ஆவடி அருகே சேக்காடு கிராமத்தில் ஒரு பியூனின் மகளாக, பதினாறு வயதில் தாயை இழந்து, சத்துணவில் வளர்ந்த அவரது போராட்டக் கதையை உலகுக்குச்

சொன்னது நமது வண்ணக்கதிர். அதனால்தான், அதே பின்னணியிலிருந்து எழுந்த இன்னொரு பெண்ணின் வாய்ப்பு மறுக்கப்படும்போது வேதனை ஆழமாகிறது. எளியவர்களின் குரலை ஒலிக்கச் செய்வதுதான் நம் கடமை.

ஃபார்ம் நாளுக்கு நாள் மாறும், காயத்தால்தான் கார்த்திகா ஆசிய விளையாட்டில் இடம்பெறவில்லை, வட மாநிலங்களிலும் சிறந்த வீராங்கனைகள் உண்டு என்பது கவிதாவின் வாதம். “தமிழ்நாட்டு வீராங்கனை என்பதற்காக ஒரு சில இடத்தில்தான் ஃபேவர் செய்ய முடியும்” என்கிறார். குடிசையில் வாழும் பல வீராங்கனைகளின் நிலையையும் ஊடகங்கள் வெளிக்கொணர வேண்டும் என்ற அவரது ஆதங்கத்திலும் உண்மை உண்டு.

எண்கள் கேட்கும் கேள்விகள்

ஆனால் கபடி ஆர்வலர்கள் தரவுகளுடன் கேட்கிறார்கள். 72வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப்பில் 17 வயது கார்த்திகா 81 ரைடு புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாரே? மூன்று அர்ஜுனா விருதாளர்கள் அடங்கிய தேர்வுக்குழு அவரைப் பயிற்சி முகாமுக்குத் தேர்வுசெய்தது தவறா? காயம் என்றால் காமன்வெல்த் அணிக்கு எப்படித் தேர்வானார்? உகாண்டாவுக்கு எதிராக முதன்மை வீராங்கனையாக எப்படி இறங்கினார்? நான்கு மாதங்களுக்கு முன் கடைசியாக ஆடினார் என்றும், இரண்டு மாதங்களுக்கு முன் காயம் என்றும் பயிற்சியாளரே முரண்படுகிறார். இதற்குத் தெளிவான விளக்கம் வேண்டும்.

புகழும் தராசும்

ஊடகம் கொண்டாடுகிறது என்பதற்காக ஒருவரை அணியில் வைக்க வேண்டியதில்லை; அதே காரணத்துக்காக ஒதுக்கவும் கூடாது. தேர்வின் தராசுக்கு ரைடு புள்ளிகளும்ஆட்டத்திறனுமே எடைக்கற்கள். இந்தச் சூழலில் பயிற்சியாளரின் விளக்கத்துக்குப் பெரிய இடமும், பதினெட்டு வயதுப் பெண்ணின் குரலுக்குச் சிறிய இடமும் தந்தது தினமலரின் குதர்க்கத்தையே காட்டுகிறது. பொறாமை, சதி என்ற ஊகங்களைவிட, எண்களோடு நிற்கும் கேள்விகளுக்கே முதலில் பதில் வேண்டும். அணியின் வெற்றியும் ஒரு வீராங்கனையின் நியாயமான வாய்ப்பும் எதிரெதிர் அல்ல.

இளம் சிறகும் பெரிய வானமும்

2036 ஒலிம்பிக்கில் கபடி இடம்பெற்றால் இந்தியாவுக்காகத் தங்கம் தொடுவதே கார்த்திகாவின் கனவு. கண்ணகி ஒருமுறை சிலம்பை உடைத்து நீதியை நிலைநாட்டினாள். இந்தக் கண்ணகி நகரின் மகள் தன் ஒவ்வொரு ரைடிலும் விடை சொல்லிவிட்டார். மீதி விடையை அணித் தேர்வாளர்களும் நிர்வாகமும் சொல்ல வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.