3 ஆண்டுகளாகக் கிடப்பில் கனியாமூர் ரயில்வே மேம்பாலப் பணி மாற்று வழியால் அவதிப்படும் கிராம மக்கள்
21 Jul 2026, 11:46 pm
<p><strong>3 ஆண்டுகளாகக் கிடப்பில் கனியாமூர் ரயில்வே மேம்பாலப் பணி மாற்று வழியால் அவதிப்படும் கிராம மக்கள்</strong></p><p>சின்னசேலம், ஜூலை 21- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கனியாமூர் ஊராட்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பாதியில் நிற்கும் பணிகளை உடனடியாக ஆய்வு செய்து துரிதப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். கனியாமூர் கிராமத்திற்குச் செல்லும் முக்கியச் சாலை ரயில்வே தண்ட வாளத்தைக் கடந்து செல்கிறது. இங்கு நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடக்கத்தில் வேக மாக நடைபெற்று வந்த இப்பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்ற மும் இன்றி முற்றிலுமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. பணிக்காகத் தோண்டப்பட்ட குழிகளும் குவிக்கப்பட்ட கட்டுமானப் பொருட்களும் அப்படியே கிடக்கின்றன. மேம்பாலப் பணி பாதியில் நிற்பதால், பிரதான சாலையில் இருந்து கனியாமூர் கிராமத்திற்குச் செல்லும் நேரடி வழி முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. இத னால் பள்ளிச் செல்லும் மாணவர்கள், அலு வலகப் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி மாற்று வழியில் சென்று வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இந்த மாற்று வழியும் சேறும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமாகி விடுகிறது. இதன் காரணமாக அவசரக் காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட கிராமத்திற்குள் உரிய நேரத்தில் வர முடிவதில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேம்பாலப் பணிகள் முடங்கியுள்ளதால் பொதுமக்கள் அன்றாடம் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் நேரடியாக நேரில் வந்து பணிகளை ஆய்வு செய்து, தொடர்புடைய துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மேம்பாலப் பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்கி விரைவில் முடித்துத் தர வேண்டும் என கனியாமூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
