காங்கேயத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் அமைச்சரிடம் விவசாயிகள் அவசரக் கோரிக்கை
8 Jun 2026, 11:05 pm
<p><strong>காங்கேயத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் அமைச்சரிடம் விவசாயிகள் அவசரக் கோரிக்கை</strong></p><p>திருப்பூர், ஜூன் 8- காங்கேயம் அருகே உள்ள மூன்று ஊராட்சிகளின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி, காங்கேயம் வட்டார விவசாயிகள் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் விவசாயிகள் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளான படியூர், சிவன்மலை, கீரனூர் ஆகிய கிராமங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பையே முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்ட இந்த கிராமங்கள், கீழ்பவானி பாசனம், பி.ஏ.பி. பாசனம் மற்றும் அவிநாசி-அத்திக்கடவு ஆகிய எந்தவொரு முக்கியப் பாசனத் திட்டங்களிலும் இணைக்கப்படாத புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாகவே இருந்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 1,800 அடிக்கும் கீழே சென்று, அபாயகரமான வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆய்வறிக்கையில்கூட இப்பகுதி ‘மழை மறைவுப் பிரதேசம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து ஏற்படுத்தும் வகையில், சென்னிமலை ஒன்றியம் எக்காட்டாம்பாளையம் பகுதியில் தடுப்பணை அமைத்து, கீழ்பவானி பாசன கசிவுநீரை சேகரிக்கும் திட்டம் சுமார் ரூ.15 கோடி மதிப்பில் தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்படி, அந்தத் தடுப்பணையிலிருந்து நீரேற்று (Lift Irrigation) முறையில் கீரனூர், சிவன்மலை, படியூர் ஆகிய மூன்று கிராமங்களுக்கும் குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து, அங்குள்ள குளம் மற்றும் குட்டைகளில் நிரப்ப வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாய உற்பத்தியும் பெருகி பொதுமக்களின் வாழ்வாதாரம் உறுதியாகும். தற்போது இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, அரசு புதிய ஆழ்குழாய்க்ணறுகள் அமைப்பதற்கும், மின் மோட்டார் மற்றும் இதர பராமரிப்பு செலவுகளுக்கும் பெருமளவிலான தொகையை செலவிட்டு வருகிறது. இந்த நீர் செறிவூட்டும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால், அரசுக்கு ஏற்படும் இந்த தொடர் செலவுகள் மிச்சமாகும். எனவே, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
