நாட்டு முடியா? நாற்று முடியா? - * ப.முருகன்
30 May 2026, 10:24 pm

நாட்டு முடியா? நாற்று முடியா? - * ப.முருகன்

ஏரு பெருசா இந்த ஊரு பெருசா - சொல்லடி / நெல்லு பெருசா பயக சொல்லு பெருசா.... என்பது ஒரு திரையிசைப் பாடல் . கவிச்சக்கரவர்த்தி கம்பரும் கூட மன்னர் மணிமுடி யை விட உழவரின் நாற்று முடியே சிறந்தது என்கி றார்.

அதாவது நாட்டு முடியை விட நாற்று முடி சிறந்தது என்கிறார்.

அவர் எழுதிய “ஏரெழுபது “ எனும் நூலில் உழவின் துவக்கநிலை முதல் நிறைவு நிலை வரை உள்ள ஒவ்வொரு செயலையும் அதன் அம்சங்களையும் எழுபது பாடல் களில் விளக்குகிறார். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைப்பும் கொடுத்துள்ளார்.

அவற்றை - அதாவது அந்தத் தலைப்புகளைச் சொன்னாலே நீண்டுவிடும்.

இது தவிர நூலின் பாயிரமாக ஒன்பது பாடல்கள் பாடி யுள்ளார். மொத்தத்தில் 79 பாடல்களைக் கொண்டுள்ளது ஏரெழுபது.

“தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடி மன்ன வராகி / எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞ் / செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்பு டைய ரானாலென் / உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய் யப் பிறந்தாரே “ (ஏரெழுபது ... பாடல் 8) என்கிறார் “வேளா ளர் சிறப்பு “எனும் தலைப்புப் பாடலில்.

நால் வருணத் திலும் மேல் வருணம் எனப் பாடலில் புகழ்ந்திருக்கிறார். சமூக நிலைமை அப்போது என்னவாக இருந்திருக்கும்? யூகியுங்கள்.

ஆனால் உண்மையில் பிராமணர்களோ, நாலாஞ்சாதிப் பயலே என உழவர்களைத் திட்டியிருப்பது தான் நடந்திருக்கும். “

மாணிக்க முதலாய மணியழுத்தித் தொழில் சமைத்த / ஆணிப்பொன் முடிவேந்தர் அணிமுடியு முடியாமோ? / பேணிப்பைங் கோலமுடி பெருக்காளர் சுமவாரேல் / சேணுக்குந் திசைப்புறத்து செங்கோன்மை செல்லாதே ! “ என்கிறார் கம்பர் “நாற்று முடி சுமந்த சிறப்பு “எனும் பாடலில்.

அடுத்து வரும் “உரிய இடத்தில் முடி சேர்த்தலின் சிறப்பு “எனும் பாடலைப் பாருங்கள்.

“தென்னன்முடி சேரன்முடி தெங்குபொன்னி நாடன்முடி / கன்னன் முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கண்முடி / இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம் /மன்னுமுடி வேளாளர் வயலின் முடி கொண்டன்றோ? “ என்கிறார் கம்பர்.

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் / உழன்றும் உழவே தலை “ என வள்ளுவர் உழவைப் புகழ்ந்துரைத்தார்.

“உழுவார் உலகுக்கு அச்சாணி “என்றார்.

“உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதும் / விட்டேம் என்பார்க்கும் நிலை “ என்கிறார் வள்ளுவர். அதாவது உழவர்களின் கை உழாது மடங்கிவிடுமானால் யாவரும் விரும்பும் உணவை யும் கைவிட்டோம் என்று துறந்தவர்க்கும் அவ்வறத்தில் நிலைத்து நிற்க முடியாது என்பதாகும். க

ம்பர் இன்னும் ஒரு படி மேலே போகிறார். “வெய்யகலி வலிதொலைக்கும் வேளாளர் விளைவயலிற் / செய்யின்முடி விளம்பாரேல் விளம்பு வன சிலவுளவோ? / மையறுமந் தணர்விளம்பார் மறைமனுமன்னவர் விளம்பார் / ஐயமறு புலவோரும் அருந்தமிழ் நூல்விளம்பாரே!” என்று “நடவு மங்கலப் பாட்டின் சிறப்பு” எனும் பாடலில் கூறுகிறார்.

வயலில் நாற்று முடி விளம்பாவிட்டால் அதாவது நடவு செய்வதற்காக வயலின் (செய்யின் ) சேற்றுப் பரப்பில் நாற்று முடிகளை எடுத்து வீசிப் பரப்பினால் தான் நாற்று நடுபவர்களின் கைகளுக்கு தோதாக - உதவியாக இருக்கும்.

அப்போதுதான் வயலில் நாற்று நடுபவர்கள் சீராக நட முடியும். சீராக நடவு செய்தால் தான் பயிர் சீராக வளரும்.

விளைச்சலும் சீரும் சிறப்புமாக இருக்கும். எனவே இது - நாற்று முடி விளம்புதல் - வேளாண்மையில் மிக முக்கியமானதாகும்.

எவ்வளவு சிறப்புடையது என புகழப்பட்டாலும் மிக நீண்டகாலமாகவே உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது தான் நிலை.

அதனால் உழவர்கள் ஊருக்கெல்லாம் உணவளித்தாலும் அவர்கள் உழவடை செய்ய - விவசாயம் செய்ய - அடுத்தவரிடம் கையேந்தும் அதாவது கடன் வாங்கும் நிலையில் தான் விவசாயிகள் உள்ளார்கள். எவ்வளவு சிரமப்பட்டாலும் அவர்கள் தங்கள் உழவுப் பணியை கைவிடுவதில்லை. அதனால், “அழுது கொண்டி ருந்தாலும் உழுது கொண்டிரு” என்னும் முதுமொழி நிலவுகிறது.

கடன் வாங்கி விவசாயம் செய்து அது கட்டுபடி யாகாமல் போவதால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் சுழலுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.

ஆனாலும் பழைய கடனை அடைக்க புதிய கடன் என்று அவர்கள் வாழ்க் கையே கடனிலேயே மூழ்கிவிடுகிறது.

“கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் “என்று கம்பர் இராமாயணத்தில் இராவணன் பற்றிக் கூறியது உழவர்களுக்கு மிகவும் பொருந்திப் போகிறது.

ஆனால் ஆட்சியாளர்கள் தான் உழவர்களுக்கு உண்மை யிலேயே உதவ மனமில்லாமல் இருக்கிறார்கள்.

ஆனால் உதவுவது போல காட்டிக்கொள்வதில் தயங்குவதே இல்லை.

அவர்கள் ஏற்கெனவே சொன்னதைச் செய் வதே இல்லை. ஆனால் சமாளிப்பு வேலைகளையே செய்கிறார்கள்.

மண்ணிலே முத்தெடுத்து பிறர்வாழ வழங்கும் குணமுடைய விவசாயிகள், விக்கிரமாதித்யனைப் போல் விடாமல் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கையில் நாளைக் கழிக்கிறார்கள்.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உழவை வாழவைக்கிறார்கள்.