கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத பகுதிநேர நியாயவிலைக் கடை உடனடியாகத் திறக்க கிராம மக்கள் கோரிக்கை
yesterday
<p><strong>கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத பகுதிநேர நியாயவிலைக் கடை உடனடியாகத் திறக்க கிராம மக்கள் கோரிக்கை</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 22 - கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்ட பகுதிநேர நியாயவிலைக் கடை நீண்ட நாட்களாகச் செயல்படாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு அமைக்கப்பட்ட இந்த நியாயவிலைக் கடை, திறக்கப்பட்டும் இன்று வரை முழுமையாகச் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு அருகிலுள்ள கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தினமும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக நீண்ட தூரம் பயணம் செய்வது, முதியவர்கள், பெண்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், “எங்கள் வசதிக்காகக் கட்டித் தரப்பட்ட கடை செயல்படாததால், நாங்கள் கடும் அவதிப்படுகிறோம். அன்றாடம் வேலைக்குச் செல்லும் எங்களுக்கு, பொருட்கள் வாங்கச் செல்வது கூடுதல் சுமையாக உள்ளது” என்று வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, வடசிறுவள்ளூர் பகுதிநேர நியாயவிலைக் கடையை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், கூட்டுறவுத் துறைக்கும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் அடிப்படைத் தேவையை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.</p>
