சென்னை விரைவு செய்திகள்
19 Jun 2026, 11:59 pm

வடபொன்பரப்பியை மீண்டும் சங்கராபுரத்துடன் இணைக்க கோரிக்கை

சங்கராபுரம், ஜூன் 19 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், வடபொன்பரப்பி குறுவட்டத்தை மீண்டும் சங்கராபுரம் வட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா தலைமையில், சங்கராபுரம் வட்டாட்சியர் வைரக்கண்ணன் முன்னிலையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “வாணாபுரம் புதிய தாலுகா உருவாக்கப்பட்ட பிறகு, வடபொன்பரப்பி, மூங்கில்துறைப்பட்டு, மேல்சிறுவள்ளூர், புதுப்பட்டு மற்றும் ரங்கப்பனூர் ஆகிய ஊர்கள் வாணாபுரம் வட்டத்தில் சேர்க்கப்பட்டன. இருப்பினும், புவியியல் ரீதியாகவும், போக்குவரத்து ரீதியாகவும் இந்த ஊர்கள் சங்கராபுரத்துடனேயே நெருங்கிய தொடர்புடையவை. திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இவ்வூர் மக்கள், தங்கள் அன்றாட அரசுப் பணிகள் மற்றும் இதரத் தேவைகளுக்காக சங்கராபுரம் வருவதையே பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது இந்த ஊர்கள் வாணாபுரம் வட்டத்தில் உள்ளதால், அங்கிருந்து வாணாபுரம் செல்வதற்கு பொதுமக்கள் இரண்டு பேருந்துகளை மாற்ற வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் நேர விரயமும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கருவூல அலுவலகம் இடமாற்றம்

கள்ளக்குறிச்சி, ஜூன் 19- கள்ளக்குறிச்சி பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கி வந்த மாவட்ட கருவூல அலுவலகம், தற்போது வீரசோழபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அலுவலகமானது ஆட்சியர் அலுவலக வளாகத்தின் தரைதளத்தில், அறை எண் 004 முதல் 011 வரையிலான அறைகளில் செயல்படுகிறது. இந்த புதிய அலுவலகம் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளார். இந்த இடமாற்றம் குறித்து ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதிய சங்கங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்கனவே தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.