பெரிய ஏரி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு: தென்கீரனூர் ஏரி வறண்டு போகும் அவலம்!
1 hour before
<p><strong>பெரிய ஏரி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு: தென்கீரனூர் ஏரி வறண்டு போகும் அவலம்!</strong> </p><p>கள்ளக்குறிச்சி, ஜூலை 12- கள்ளக்குறிச்சி பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் பாசன வாய்க்கால்கள் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், முப்பியம்மன் கோவில் குளமும், தென்கீரனூர் ஏரியும் நீர்வரத்து இன்றி வறண்டு பாழாகி வருகின்றன. கோமுகி அணையில் இருந்து நீர் நிரம்பி, பெரிய ஏரிக்கு வந்த பிறகு, அங்கிருந்து காந்தி ரோடு பாசன வாய்க்கால் வழியாக 1.5 கி.மீ. தொலைவிலுள்ள முப்பியம்மன் கோவில் குளம் மற்றும் தென்கீரனூர் ஏரியை நீர் சென்றடைய வேண்டும். ஆனால், இந்த வாய்க்காலின் பெரும்பகுதியை சிலர் கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து மூடிவிட்டனர். அதேபோல், கோட்டைமேடு வழியாகத் தென்கீரனூர் ஏரிக்குச் செல்லும் மற்றொரு வாய்க்காலும் அடைக்கப்பட்டுள்ளதால், ஏரியின் நீர்வரத்துப் பகுதி கடுமையாகக் குறைந்துள்ளது. நீர்வரத்து வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், கனமழை காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தூர்ந்துபோன இந்த வாய்க்கால்கள் தற்போது நகரக் கழிவுநீர் கலக்கும் சாக்கடையாக மாறியுள்ளன. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 50 ஆண்டு பழமையான ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் 200 மீட்டர் வாய்க்கால் மட்டுமே சீரமைக்கப்பட்டது. எஞ்சியுள்ள 1.3 கி.மீ. தூர வாய்க்கால் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் பாசன வாய்க்காலை முழுமையாகத் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும். இதன் மூலம் முப்பியம்மன் கோவில் குளம் மற்றும் தென்கீரனூர் ஏரிக்கு நீர்வரத்தை மீண்டும் சீரமைக்க பொதுப்பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
