காற்றில் என்றும் உந்தன் கீதம்... - ஈரோடு மு.சங்கரன்
12 Jul 2026, 10:03 pm

காற்றில் என்றும் உந்தன் கீதம்... - ஈரோடு மு.சங்கரன்

பண்பாடும் நீலக்குயிலே! கொஞ்சம் சங்கீதம் கற்றுத் தந்த ஞானக் குயிலே! ஏழிசை கீதமும் உன்னிடம் சங்கமம், எங்கள் மனமும் மெய்யும் என்றென்றும் கேட்கும் உன் லயம்...

உன் குரல் கேட்ட பின்புதான் குயிலின் கூவலும் இப்படித்தான் இருக்குமோவெனக் கணித்தோம் நாங்கள்!

பாடலாசிரியர்கள் எழுதுவார்கள் அவ்வளவே... அப்பாடலை நீ பாடக் கேட்க அனைவரும் எழுவார்கள்...

அழகிய கண்ணே! என நீ பாடத் துவங்க கல்மனமும் கரையுமே! ஆயிரம் தாமரை மொட்டுகளும் கட்டவிழ்ந்து மலருமே! தூக்கமும் கண்களைத் தழுவுமே! தூங்காத விழிகளும் துணை தேடி அலையுமே!

எத்தனை உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்தாய் நீ! அத்தனை உருவங்களும் எங்கள் வீடுகளில் ஏகாந்தமாய் அலைகின்றன...

மக்கள் விருதே பெரிதெனக் கூறி, மத்திய அரசின் விருதை மறுத்த சுயமரியாதைக்காரி நீ!

சிணுங்கலுக்கும் இலக்கணம் வகுத்தாய்! சிரிப்பிலும் ஒரு முத்திரை பதித்தாய்! சன்னமான குரலில் நீ பாடிய ரகசியங்கள், மௌனமான நேரத்தில் உன் குரலின் மந்தகாசங்கள், இவற்றால் கழியும் எம் இனிமைப் பொழுதுகள்...

காதலாகிக் கசிந்துருகி, குழந்தையாய்க் குழைந்து கூவி, கிழவியாய் நடுங்கிப் பாடி அத்தனை வயதினரையும் உன் குரலில் அடைத்தாய்! சின்ன வண்ணக்குயிலாய் அழைத்தாய்!

பொன்வானம் பன்னீர் தூவும் நேரமும், காலை நேரப் பூங்குயில் கானம் இசைக்கும் கணத்திலும், மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் பாடும் வேளையும், ஊரு சனம் தூங்கிடும் பொழுதிலும் உன் கானமே எமக்கு இன்பம் தருமே!

காற்றே உன் கீதமாய்த்தான் நாளும் பேசுகிறது... செங்கதிரும் நிலவும் உந்தன் இசையாய் ஒளி வீசுகிறது...  - ஈரோடு மு.சங்கரன்