வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து பாசிச மனப்பான்மை போன்றது! நாடு முழுவதும் வலுக்கும் கண்டனங்கள்
16 May 2026, 9:01 pm

வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து பாசிச மனப்பான்மை போன்றது! நாடு முழுவதும் வலுக்கும் கண்டனங்கள்

தில்லி நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், தனக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வெள்ளியன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,”மூத்த வழக்கறிஞர் பட்டத்திற்காக தீவிர முயற்சி எடுத்த வழக்கறிஞரை கண்டிக்கிறோம். நாட்டில் வேலையில்லாத சில இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளைப் போன்று இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை அல்லது தொழிலில் இடமும் கிடைப்பதில்லை. அவர்களில் சிலர் ஊடகங்களாகவும், சிலர் சமூக ஊடகங்களாகவும், தகவல் அறியும் சட்ட ஆர்வலர்களாகவும், பிற ஆர்வலர்களாகவும் மாறி எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள். இந்த ஒட்டுண்ணிகளுடன் நீங்களும் கைகோர்க்க விரும்புகிறீர்களா? இந்த உலகமே மூத்த வழக்கறிஞர் ஆக தகுதியுடையதாக இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் உங்களுக்கு அந்தத் தகுதி இல்லை” என சர்ச்சைக்குரிய வகையில் கூறினார். - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்

மன்னிப்புக் கேட்க வேண்டும்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்திற்கு நாடு முழுவதும் அனைத்துத் தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இளைஞர்களுக்கு எதிராகத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்ட வசமானவை. அவரது முன்னிலையில் இருந்த அந்த இளைஞர் பொறுப்பற்றவராக இருந்திருக்கலாம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் ஆர்வலர்கள் மீதான அவரது வெறுப்பையே பிரதிபலிக்கின்றன. இது தற்போதைய பாசிச ஆளும் வர்க்கத்தின் சிந்தனையையும் ஒத்தி ருக்கிறது. இது ஒரு தவறான சமிக்ஞையை சமூகத்திற்கு அனுப்புகிறது. அவர் இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் ; விளக்கமளிக்க வேண்டும். பிரசாந்த் பூஷண் (உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்)

கேள்வி கேட்கும் உரிமையே ஜனநாயகத்தின் அடித்தளம்

மதிப்பிற்குரிய நீதிபதி (தலைமை நீதிபதி சூர்ய காந்த்) அவர்களே, அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்கும் உரிமையே ஜனநாயகத்தின் அடித்தளமாகும். குடிமக்கள், ஊடகவியலாளர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள், பொதுக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பொறுப்புத்தன்மை மூலம் பொது நிறுவனங்களை வலுப்படுத்துகிறார்கள். ‘ஒட்டுண்ணிகள்’ மற்றும் ‘கரப்பான்பூச்சிகள்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைமை நீதிபதிக்கு அழகல்ல. இது தகுதியற்றது. அர்பா கானம் ஷெர்வானி (ஊடகவியலாளர்)

ஒட்டுண்ணிகளால் தான் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை

மன்னிக்கவும் ஐயா (தலைமை நீதிபதி சூர்ய காந்த்). ஆனால் இந்தக் கட்டமைப்புக்குள் (அரசு, நீதித்துறை) ஒட்டுண்ணிகள் இருக்கவே செய்கிறார்கள். அந்த ஒட்டுண்ணிகளின் காரணத்தினாலேயே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த ஒட்டுண்ணிகள் வெளிப்படைத்தன்மையற்ற ஒரு அமைப்பை நடத்தி, ஒட்டுமொத்த கட்டமைப்பையே சிதைத்துக்கொண்டே தகவல்களை மறைப்பதால்தான், மக்கள் சமூக ஊடக ஆர்வலர்களாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களாகவும் மாறுகிறார்கள். ஜாய் தாஸ் (அரசியல் விமர்சகர்)

குறைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர்கள் கரப்பான்பூச்சிகளா?

இளைஞர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள், குரலற்றவர்களுக்காகக் குரல் கொடுத்து, கடினமான கேள்விகளை எழுப்பி, கட்டமைப்பின் குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர்கள் கரப்பான்பூச்சிகளா? நிஜமாகவா, மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே? நம்முடைய ஜனநாயகம் இந்த நிலைக்குத்தான் வந்து சேர்ந்துள்ளதா? உண்மையிலேயேவா? நீதிபதி கிருஷ்ணய்யர் போன்ற மகத்தான மனிதர்கள் இதற்கு என்ன சொல்லியிருப்பார்கள் என்று வியப்பாக இருக்கிறது. ராஜ்தீப் சர்தேசாய் (ஊடகவியலாளர்)

மக்களை அவமதிப்பதற்கு உரிமை இல்லை

ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும் மக்களை அவமதிப்பதற்குத் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்பது தலைமை நீதிபதிக்கு உணர்த்தப்பட வேண்டும். மக்களுடைய உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது பகிரங்கமான அவமதிப்பைக் காட்டியதன் மூலம், நீதியின் உயரிய சிம்மாசனத்தில் அமரும் தகுதியை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் இழந்துவிட்டார். இது மிகவும் வெட்கக்கேடானது. அபூர்வானந்த் (தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்)

மாற்றுக் கருத்து என்பதுதான் ஜனநாயகத்தின் உயிர்நாடி

மிக உன்னதமான பதவியில் இருக்கும் ஒரு நீதிப தியிடமிருந்து இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இல்லவே இல்லை. இது மாற்றுக்கருத்தை அவமதிக்கும், சிறுமைப்படுத்தும் செயலாகும். மாற்றுக்கருத்து என்பதுதான் ஜனநாயகத்தின் உயிர்நாடி என்பதை ஒரு தலைமை நீதிபதி புரிந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கும் விஷயம் ஆகும். ஜவஹர் சிர்கார் (முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்)

அரசியலமைப்பு நிறுவனங்கள் தோற்கும்போது, ஜனநாயகத்தின் மதிப்புகளை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் இளைஞர்களுக்கு முக்கியப் பங்குண்டு. தலைமை நீதிபதி போன்ற ஒரு உயர்ந்த பதவியில் இருப்பவர் இன்னும் நிதானத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும். வேலையின்மை என்பது இளைஞர்களின் தவறல்ல, அது அரசின் கொள்கை தோல்வியாகும்; இளைஞர்கள் இதில் பாதிக்கப்பட்டவர்களே. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்