மதவெறிப் பிரச்சாரத்தில் தோய்ந்த இருளின் பிடியில் நீதித்துறை - ச.வீரமணி
yesterday

மதவெறிப் பிரச்சாரத்தில் தோய்ந்த இருளின் பிடியில் நீதித்துறை - ச.வீரமணி

இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி அகற்றப்பட்டு குடியரசு அமைக்கப்பட்டபோது, அரசின் மூன்று அங்கங்களான நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் (Legislature), ஆட்சி நிர்வாகம் (Executive) மற்றும் நீதித்துறை (Judiciary) ஆகியவற்றுக்கிடையே சமநிலையை உத்தரவாதம் செய்யும் விதத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இது அதிகாரப் பகிர்வு மற்றும் பரஸ்பரக் கட்டுப்பாட்டு (checks and balances) நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.

தற்காலத்தில் ஆட்சியில் உள்ள இந்துத்துவா வாதிகள் மதச்சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கக்கும் சூழலைத் தொடர்ந்து உருவாக்கி வருவதைப் பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல், அவர்கள் பன்முகத்தன்மை கொண்ட இந்தியச் சமூகத்தில் இயல்பாகவே அமைந்துள்ள பல்வேறு அடையா ளங்களின் அடிப்படையிலும் ஒரு பகுதி மக்களை ‘அயலவர்களாக’ (others) பார்க்கும் மனப்பான்மை யை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவை அரச மைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள ‘பொது வான மற்றும் சமமான குடியுரிமை’ என்ற அடிப்படை அம்சத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். இவ்வாறு நாடாளுமன்றம் மற்றும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும்போது, நீதித்துறையும் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. அரச மைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக நீதித்துறை இருக்க வேண்டும் என்பதே அரசமைப்புச் சட்டம் வகுத்துத்தந்துள்ள கட்டமைப்பாகும். ஆனால், காலங்காலமாக நிலைபெற்றுள்ள இந்தக் கோட்பாட் டையே இப்போது ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் இந்துத்துவா சித்தாந்தம், சிதைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீதித்துறை சார்ந்த கோட்பாடு களும் மிகத் தீவிரமாக, பெரும்பாலும் நீதித்துறைக்கு உள்ளிருந்தே சிதைக்கப்படுவதை இப்போது நாம் பார்த்து வருகிறோம்.

அதிகார மேலாதிக்கமும் உச்சநீதிமன்றத்தின் பாராமுகமும்

நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் மற்றும் ஆட்சியா ளர்களின் செயல்பாடுகள் வாயிலாக வெளிப்படும் இந்துத்துவா கருத்தியல் மேலாதிக்கத்தின் அழுத்தங்க ளுக்கு மத்தியில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டிய நீதித்துறைக்கு, அரசமைப்பு என்கிற கட்டமைப்பைத் தக்கவைத்துக் கொள்வதே நாளுக்கு நாள் நிச்சயமற்றதாகி வரு கிறது. நீதித்துறை தன் மீதான கட்டுப்பாட்டையே இழந்ததற்கான மிக முக்கியமான உதாரணங்க ளில் ஒன்றாக, வேலையில்லாத இளைஞர்களையும் பொதுநல வழக்குகளைத் தொடரும் வழக்கறிஞர்க ளையும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ‘கரப்பான் பூச்சிகள்’ என்று இழிவாக வர்ணித்ததைக் குறிப்பி டலாம். எனினும், இத்தகைய சீரழிவை முறியடிப்ப தற்கான ஒரே வழியாக, பொதுவெளியும் மக்கள் ஆதரவும் அரசமைப்புச் சட்டம் சார்ந்த உரிமை யிடத்தை மீண்டும் மீட்டெடுக்க முயன்றிருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

‘கரப்பான் பூச்சி’ குறித்த அந்த விமர்சனம், போராடு வதற்கான உரிமையையும், ஆட்சியாளர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான அவசியத்தையும் வலி யுறுத்தும் குரல்களை வலுப்படுத்தியுள்ளது. பொதுத் தேர்வுகளின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை உறுதி செய்கிற மிக முக்கியமான விவகாரத்தில், இப் போராட்ட இயக்கம் கொண்டுள்ள அறம் சார்ந்த வலுவான நிலைப்பாடு, ஆட்சியாளர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

தலைமை நீதிபதி நேரடியாகத் தொடர்புடைய மற்றொரு முக்கியமான நீதித்துறை சார்ந்த முடிவு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வாக்களிப்பதற்குத் தங்க ளுக்கு அளிக்கப்பட்ட உரிமையைப் பறித்ததன் மூலம் பெருமளவிலான மக்களை வாக்களிக்கும் உரிமை யிலிருந்து விலக்கி இருப்பதாகும்; இவ்வளவு பெரிய அளவில் வாக்காளர்கள் மற்றும் அவர்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட சூழலிலும், தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சை யான முடிவை அதன் ‘சுயேச்சையான’ விஷயமாகக் கருதி, உச்சநீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டி ருக்கிறது; இது அரசமைப்புச் சட்ட கட்டமைப்பையே பலவீனப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பொறுப்புக்கூறல் என்ற அம்சம் விடுபட்டுப்போனது. அத்தகைய பொறுப்புக்கூறல் இல்லாத நிலையில், ஆணையத்தின் செயல்பாடுகளின் மீதான ‘சுதந்தி ரம்’ என்பது குறுகிய அரசியல் நலன்களுக்கு ஏற்ற வாறான சர்வாதிகாரப் போக்கிற்கே வழிவகுக்கும்.

முன்னதாக, அயோத்தி தீர்ப்பானது ஒரு மசூ தியை இடிப்பதற்காக வன்முறையில் ஈடுபட்ட வர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது என்பதைத் தலைமை நீதிபதி சந்திரசூட் ஒரு பொது நேர்காணலில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தார். வேறு வார்த்தைகளில் கூறுவ தானால், ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதே தவிர, அது நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது. நீதித்துறையே இத்தகைய நிலையை ஒப்புக்கொண்டால், அரச மைப்புச் சட்டம் சார்ந்த ஒழுங்குமுறை மட்டுமல்ல; சட்டத்தின் ஆட்சியே கூட எவ்வாறு நிலைத்திருக்க முடியும்?

கீழமை நீதிமன்றத்தின் துணிச்சலும் நீதிபதி தபஸ்ஸும் கானின் தீர்ப்பும்

ஆனால், கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் துணிச்சலான தீர்ப்புகளை வழங்கும் நிகழ்வுகள் காணப்படுவது நம்பிக்கையூட்டும் விஷய மாக உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 2022-இல் நடந்த குண்டர் கும்பலின் தாக்குதல் தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தபஸ்ஸும் கான் அளித்த தீர்ப்பு முக்கிய மானது; அதை முன்வைத்து இணையத்தில் ஒரு வெறுப்புப் பிரச்சாரம் தூண்டப்பட்டுள்ளது. இது தீர்ப்பின் மீதான கவனத்தை மாற்றி, நீதிபதியின் மத அடையாளத்தின் மீது கவனத்தைத் திருப்பியிருக்கி றது. மத ரீதியான வசைபாடல்கள் மற்றும் கொலை மிரட்டல்கள் உள்ளிட்ட கடுமையான எதிர்வினைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அவருக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், உயர்நீதிமன்றமும் தாமாக முன்வந்து இதில் தலையிட்டது.

இத்தகைய மிரட்டல்களை வழக்கறிஞர்கள் சமூகம் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. இத்தகைய தாக் குதல்கள் நீதித்துறையின் சுதந்திரத்தைக் குலைப்ப தோடு, சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையை யும் சிதைக்கின்றன என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சட்டரீதியான நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டு, ஆழ்ந்த பரிசீலனைக்குப் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், சமூக ஊடகங்களில் வெளியான அவ தூறான பதிவுகளுக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இருப்பினும், இந்த விவ காரத்தை ஒரு ‘தீவிரமான விஷயம்’ என்று கருதி, மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசி யல்வாதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நீதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த உத்தரவு ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சமூகத்திற்கும் ஓர் உத்வேகத்தை அளித்துள்ளது.

இத்தகைய அச்சுறுத்தல்கள் ‘நீதித்துறையின் சுதந்திரத்தையும், நீதித்துறை அதிகாரிகள் அச்ச மின்றிப் பணியாற்றுவதையும் நேரடியாகப் பாதிக் கின்றன’ என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வாயம் கருத்து தெரி வித்துள்ளது. அச்சுறுத்தல்களுக்குக் காரணமானவர்க ளைக் கைது செய்யுமாறு மாநிலக் காவல்துறைத் தலை வர் மற்றும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்ட அந்த அமர்வாயம், நீதிபதிக்குத் தொடர்ந்து காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டது. நீதிபதி கான் பணியாற்றும் நீதிமன்ற வழக்கறிஞர் சங் கத்தின் தலைவர், இது தொடர்பாகப் போதுமான நிறுவன ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். ‘பசுப் பாதுகாவலர்கள்’ என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குண்டர் கும்ப லால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புதான் இந்த விவகாரத்திற்குக் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குடிமக்களின் உரிமைப் பாதுகாப்பும் நீதிபதி மாதவ் ஜம்தாரின் கண்டனமும்

அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகளை நிலை நாட்டும் வகையில் அமைந்த மற்றொரு நிகழ்வாக, நீதிபதி மாதவ் ஜம்தார் மும்பை காவல்துறையை மிகக் கடுமையாகச் சாடியதைக் குறிப்பிடலாம். இந்த நடவடிக்கையின் அடிப்படையையே எதிர்த்து வழக்குத் தொடர்ந்த மனுதாரர் மீது, மும்பை காவல்துறை ‘வெளியேற்ற உத்தரவு’ (externment order) பிறப்பித்திருந்ததை அவர் விமர்சித்தார்.

“மனுதாரர் வெறும் ‘பாஜக அரசு ஒழிக, அமித் ஷா ஒழிக...’ போன்ற முழக்கங்களைத்தான் எழுப்பி யுள்ளார். குடிமக்கள் ஏன் இத்தகைய முழக்கங்களை எழுப்பக்கூடாது? இத்தகைய முழக்கங்களுக்காக ஏன் வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும்?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. மேலும் நீதிபதி ஜம்தார் வாய்மொழியாகக் கூறுகையில், “இது என்ன? இந்திய அரசின் அடிமை களாகக் குடிமக்கள் மாற்றப்படுகிறார்களா? அவர்க ளால் போராட்டங்களை நடத்தவோ, கிளர்ச்சிகளில் ஈடுபடவோ முடியாதா? இதெல்லாம் என்ன? இப்போது பல ஆவணங்கள் கசிந்துள்ளன. மக்கள் போராடினால், அவர்கள் மீது வழக்குகள் பாய்கின்றன... இது என்ன நியாயம்? போராடுவது குடிமக்களின் உரிமை...” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து, “காவல்துறை என்பது முத லமைச்சருக்கோ அல்லது பிரதமருக்கோ அடி பணிந்த ஊழியர்கள் அல்ல. அவர்கள் பொதுச் சேவகர்கள்... உங்கள் அதிகாரிகள் மீது நான் கனமான அபராதத்தை விதிக்கப் போகிறேன்,” என்றும் திட்டவட்டமாகக் கூறினார். காசாவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த போராட்டப் பேரணிக்கு மும்பை காவல்துறை விதித்த தடை யை நீக்க வைத்து, அந்த நடவடிக்கையைத் திரும்பப் பெறச் செய்ததும் இதே மும்பை உயர்நீதிமன்றம் தான் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

வாக்குரிமைப் பறிப்பும் முற்போக்குச் சக்திகளின் எதிர்காலமும்

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடைமுறையின் கீழ் வாக்குரிமை பறிக்கப் பட்ட குடிமக்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு களை விசாரித்த 19 தீர்ப்பாயங்களில் ஒன்றிற்குத் தலைமை தாங்கிய நீதிபதி டி. எஸ். சிவஞானம், தனது விசாரணையில் இருந்த 1,777 நீக்கப்பட்ட பெயர்களில் 1,717 பெயர்கள் தவறாக நீக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தார். இது 96 சதவீதமாகும். அடிப்படை குறைபாடுகள் கொண்ட ஒரு செயல்முறையால் வாக்க ளிக்க முடியாமல் போன வாக்காளர்களின் எண்ணிக்கையுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால், அந்த எண்ணிக்கை 25 லட்சமாக இருக்கும். இத்தகைய அனைத்து மனுக்களையும் தீர்த்து முடிக்க 20 முதல் 25 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்று பரவலாகக் கருதப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இத்த கைய அப்பட்டமான குறைபாடுகள் இருந்தபோதிலும், வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறை அரசமைப்புச் சட்ட உரிமைகளை மீறு வதாக உச்ச நீதிமன்றம் கருதவில்லை.

இவ்வாறு இன்றையதினம் இந்துத்துவாக் கொள்கையின் பின்னணியில் செயல்படும் நாடாளு மன்றம்/சட்டமன்றங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளின் பின்னணியில் உச்சநீதிமன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்கள் செயல்படும் ஒரு முக்கியமான கட்டத்தை நாம் எட்டியுள்ளோம். அரச மைப்புச் சட்ட ரீதியான கட்டமைப்பைக் காப்ப தற்கான ஒரே அர்த்தமுள்ள எதிர்ப்பு நடவடிக்கைக ளாகப் பொதுவெளிகளும் மக்கள் போராட்டங்களுமே திகழ்கின்றன. ஆனால், இத்தகைய மக்கள் போ ராட்டங்களுக்கு ஆதரவளிக்க உச்சநீதிமன்றத் திற்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் துணிச்சல் வருமா என்பதுதான் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. அதேவேளையில், நீதிபதிகள் கான், ஜம்தார் மற்றும் சிவஞானம் ஆகியோர் காட்டிய முன்மாதி ரிகளைப் பின்பற்றி, தாக்குதல்களை முறியடிக்கவும் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் முடியும். நீதித்துறையின் சுதந்திரத்தையே காப்பாற்றிக் கொள்ள இது மிக அவசியமானதாகும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 12 ஜூலை 2026 தமிழில் சுருக்கம்: ச.வீரமணி