வீழ்ந்த கணவர் தாங்கிய விடுதலைச் சுடரை ஏந்தித் தொடர்ந்திடும் வீரத் துணைவி!
9 May 2026, 2:17 pm

வீழ்ந்த கணவர் தாங்கிய விடுதலைச் சுடரை ஏந்தித் தொடர்ந்திடும் வீரத் துணைவி!

ஒரு கையில் பேனாவையும், மறு கையில் தன் பச்சிளம் குழந்தையையும் ஏந்திய ஒரு தந்தை 2025 ஆம் ஆண்டு இஸ்ரேல் ராணுவத்தால் மிருகத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டு ஒரு குடும்பம் சிதைக்கப்பட்ட உண்மைச் சம்பவம் இது.

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர்க் குற்றங்களையும் இனப்படு கொலைகளையும் செய்தி வாயிலாக இந்த உலகிற்குத் தெரிவித்து வந்த ஊடகவியலாளர் யாஹ்யா சோபே (Yahya Sobeih), தனது மகள் பிறந்த ஐந்தே மணிநேரத்தில் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வையும் அதன் பிறகு என்ன நடந்தது என்பதையுமே இந்த கட்டுரையில் நாம் பார்க்க உள்ளோம்.

2025 மே 7, அன்று காலை, யாஹ்யாவின் மனைவி அமல் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய போர் வெறிபிடித்த நாடுகளாலும் அந்த போரில் லாபம் சம்பாதித்து வரும் அதானி குழுமம், லாக்ஹீட் மார்ட்டின் (lockheed martin) போன்ற நிறுவனங்களாலும் பூமியில் வாழும் நரகமாக காசா மாற்றப்பட்டு விட்டது.

பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒரு மனிதன் வாழ்வதற்கும், சுகாதாரப் பாதுகாப்பிற்கும், நோய் நொடிகளில் இருந்து தப்பி பிழைப்பதற்கும் தேவையான எதுவுமே காசாவில் இல்லை.

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த இக்கட்டான சூழலில், 2025 மே 7 அன்று பத்திரிகையாளர் யாஹ்யா மற்றும் அவரது மனைவி அமலுக்கு சனாவின் என்ற "அழகான இளவரசி" பிறந்ததால் அந்த நிமிடங்களை இருவரும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

குழந்தையின் காதில் இறைவசனங்களை ஓதி, அவளைத் தூக்கிக் கொஞ்சி, அந்த அழகான தருணங்களை யஹ்யா புகைப்படங்களாகப் பதிவு செய்தார்.

ஒரு ஊடகவியலாளராகப் போர்முனையில் நின்ற யாஹ்யா, தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை உலகிற்குத் தெரிவித்தார்.

இனிப்பு வழங்கியபோது நிகழ்ந்த படுகொலை மருத்துவமனையில் மனைவியையும் குழந்தையையும் விட்டு வெளியே வந்த யஹ்யா, தனது மகளின் பிறப்பைக் கொண்டாடுவதற்காகத் அங்கிருந்த தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

ஒரு தந்தையாகவும், ஊடகவியலாளராக அவர் தனது கடமையையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டிருந்த அந்தத் தருணத்தில்தான், காசா நகரின் மையப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலமாக வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் யாஹ்யா அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்.

அவருடன் இனிப்பு வாங்க வந்த உறவினர்களும் நண்பர்களும் கொல்லப்பட்டனர்.

உண்மையைக் காட்டிய இணையம் மருத்துவமனையில் இருந்த அமலுக்கு யாஹ்யா கொல்லப்பட்ட செய்தி தெரியாது.

தனது கணவருக்கு அலைபேசி மூலம் அவர் தொடர்ந்து தொடர்பு கொண்ட போது அழைப்பு எடுக்கப்படவில்லை என்பதால் சந்தேகமடைந்த அமல் பெரும் கலக்கத்தில் மூழ்கினார்.

தனது குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த அந்த தருணம் சில மணித்துளிகளில் நிறம் மாறி வருவதை அவர் உணர்ந்தார்.

கலங்கிய கண்களுடன் திடப்படுத்திக்கொண்ட மனதுடன் உடனடியாக இணையத்திற்கு சென்று தேடு பொறியில் தேடியபோது தான் அந்த அதிர்ச்சியூட்டும் தலைப்பைக் கண்டார்.

"பத்திரிகையாளர் யாஹ்யா சோபே, தனது மகள் பிறந்த ஐந்தே மணிநேரத்தில் கொல்லப்பட்டார்." என்பது தான் அந்த தலைப்பு.

சில மணி நேரங்களுக்கு முன் பெருந்துயரின் இடையிலும் சற்றே மகிழ்ச்சியில் திளைத்திருந்த அந்தக் குடும்பம் மீண்டும் மரணச் சுழற்சிக்கே திரும்பியது.

"ஒரு ஊடகவியலாளராக அவர் எப்போதும் களத்தில் தான் இருப்பார்.

எந்த நேரத்திலும் இந்த மரணம் நடக்கலாம் என்பதால் அவர் அதை எதிர் பார்த்தே இருந்தார்.

ஆனால் இந்த மரணம் என் மகள் பிறந்த அதே நாளில் இது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை" என அமல் கதறுகிறார்.

தெம்பே இல்லாத அந்த உடலில் தனது கணவரின் மரணத்தை நினைத்து உலகையே நடுங்கச் செய்யும் வகையில் வெடித்துச் சிதறிய அந்த ஒப்பாரிக்குரல் ஒவ்வொரு மனிதனின் நெஞ்சிலும் ஈட்டியை இறக்கியது.

மரண சுழற்சிக்குள் வாழும் மனிதர்களால் அதில் இருந்து தப்பிக்க வழியில்லாத போது தனக்கும் தனது குழந்தைகள், வாழ்க்கைத் துணை, பெற்றோர்கள், நண்பர்கள் என தங்கள் அன்புக்குரிய நபர்களின் மரணம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று தம்மை தாமே தயார்ப் படுத்திக் கொள்வது மட்டுமே தானே ஒரே வழியாகிப் போய்விடுகிறது.

தொடரும் ஊடகப் பணி தற்போது தனது கணவர் பணியாற்றிய அதே ஊடக நிறுவனத்தில் அமல் பணியில் சேர்ந்துள்ளார்.

யாஹ்யாவின் குரலை ஒடுக்க நினைத்த தாக்குதலுக்குப் பதிலடியாக, அவர் விட்டுச் சென்ற ஊடகப் பணியைத் தனது கையில் எடுத்துள்ளார்.

ஒருபுறம் வறுமை, மறுபுறம் தந்தையற்ற மூன்று குழந்தைகள் என அவர் போராடினாலும், "சனா பிறந்த தினமே அவளது தந்தையின் நினைவு தினமாகவும் மாறிப்போனதை அவளுக்கு எப்படி விளக்குவேன்?" என்ற கேள்வி அமலை இன்றும் வாட்டுகிறது.

ஆனால் தனது மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக இந்த நிலையிலும் எப்படிப் போராடுவது என்ற கேள்வி மட்டும் அவர் மனதில் எழவே இல்லை.

ஒவ்வொரு பாலஸ்தீனரின் இதயத்திலும் சுடர் விட்டு எரியும் பாலஸ்தீன விடுதலை நெருப்பு அவரது நெஞ்சில் இன்னும் கூடுதலாக கனல்கிறது.

அந்த அனல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பட்டுத் தெறித்து அனைவரது உள்ளத்திலும் சுடுகிறது.