ஜான் பிரிட்டாஸ் எம்.பி. மீது கொடூரத் தாக்குதல் இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஆதர்ஷ் எம்.சாஜியைத் தாக்கி இழுத்துச் சென்ற கொடுமை உச்சநீதிமன்றம் தடுத்த பிறகும் தில்லியில் தொடரும் போலீஸ் அடக்குமுறை
11 Oct 2026, 10:52 pm

ஜான் பிரிட்டாஸ் எம்.பி. மீது கொடூரத் தாக்குதல் இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஆதர்ஷ் எம்.சாஜியைத் தாக்கி இழுத்துச் சென்ற கொடுமை உச்சநீதிமன்றம் தடுத்த பிறகும் தில்லியில் தொடரும் போலீஸ் அடக்குமுறை

புதுதில்லி, அக். 11 – தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தலைநகர் தில்லியில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது. அதை ஒடுக்க இறக்கிவிடப்பட்ட மத்தியப் படையினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவரும் மத்தியக்குழு உறுப்பினருமான ஜான் பிரிட்டாஸ் எம்.பி.யைச் செய்தியாளர்கள் கண்முன்னே இழுத்துச் சென்று, வாகனத்துக்குள் வைத்துத் தாக்கி, மூச்சுத் திணறிய நிலையில் சாலையோரம் இறக்கிவிட்டுச் சென்றனர். இந்திய மாணவர் சங்கத்தின்அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம்.சாஜி உள்ளிட்ட நூற்றுக்கண க்கான மாணவர்களும் இளைஞர்களும் அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். சட்டத்துக்குப் புறம்பாக யாரையும் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட அதே நாளில்இக்கொடுமைகள் அரங்கேறி யுள்ளன.

பேட்டியின் நடுவே பாய்ந்த படை

சனிக்கிழமை கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், கே.என்.பாலகோபால் ஆகியோருடன் சுமார் எட்டு மணி நேரம் காவலில்வைக்கப்பட்டிருந்தார் ஜான் பிரிட்டாஸ் எம்.பி.,ஞாயிற்றுக்கிழமை காலை கன்னாட் பிளேஸில் மாணவர்கள்கைது செய்யப்படுவதாகத் தகவல் அறிந்து அவர் அங்கு சென்றார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்தும், பதற்றத்தைத்தணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டி ருந்தார். அப்போது மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎப்) அவரைச் சூழ்ந்து, கையைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்று காவல் பேருந்தில் ஏற்றினர். இக்காட்சி தொலைக்காட்சி கேமராக்களில் பதிவானது. சுமார்நூறு காவலர்கள் அவரைச் சூழ்ந்ததாக ‘தேசாபிமானி’ உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

“மூச்சு நிற்கும் வரை அமுக்கினர்”

வாகனத்துக்குள் நடந்ததைப் பின்னர் பிரிட்டாஸ் விவரித்தார்: “நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறி, அடையாள அட்டையையும் பலமுறை காட்டினேன். அதன் பிறகும் நான்கைந்து சிஆர்பிஎப் வீரர்கள் என்னை இருக்கையோடு சேர்த்து அமுக்கினர்; என் தொண்டையை நெரிக்க முயன்றனர். முழுமையாக மூச்சுத் திணறும் வரை அதைத்தொடர்ந்தனர்.” அவர்களின் சீருடையில் பெயர்ப்பட்டையோ அடையாள அட்டையோ இல்லை என்றும் அவர் கூறினார்.அப்போது புதுதில்லி மாவட்டகாவல் துணை ஆணையர் சச்சின் சர்மாவிடமிருந்து பிரிட்டாசுக்கு கைப்பேசி அழைப்பு வந்தது.

காவலரின் உடல் கேமரா காட்சியைக் கட்டுப்பாட்டு அறையில் பார்த்தே அந்த அதிகாரி அழைத்ததாகப் பிரிட்டாஸ் கூறுகிறார். அதே வாகனத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் இளைஞர் ஒருவர்தான் கைப்பேசியை எடுக்க உதவினார். “எம்.பி.யை உடனே விடுவிக்காவிட் டால் சிக்கலாகும்” என்று அதிகாரி எச்சரித்த பிறகே படையினர் அவரை விடுவித்து, சாலையில் இறக்கிவிட்டுச் சென்றனர். “அந்த இளைஞர் இல்லாவிட்டால்நான்உயிர் பிழைத்திருக்க மாட்டேன்” என்றார் பிரிட்டாஸ். காவலர்கள்அவரிடம் மிக மோசமாக நடந்துகொண்டதாக அதே பேருந்தில் இருந்த சஜித் ஹுசைன் என்பவர்செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.நடைபாதையில் அமர்ந்து மிகவும் திணறி மூச்சு வாங்கிக் கொண்டிருந்த பிரிட்டாஸை, ஒரு சமூக ஆர்வலரும் மனிதநேயமிக்க ஒரு தில்லி காவலரும் சேர்ந்து ஆட்டோவில் ஏற்றி அனுப்பினர்.

“நாடாளுமன்ற உறுப்பின ருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் கதி என்ன? தில்லி காவல்துறை என்ன செய்

தாலும், கடைசி மூச்சு உள்ள வரை இப்போராட்டத்தில் தொடர்வோம்” என்று பின்னர் ஜான் பிரிட்டாஸ் உறுதிபடக் கூறினார்.

இணையத்தைத் துண்டித்து மக்களின் தகவல் தொடர்பையே அரசு முடக்குகிறது என்றும், போராட்டக்காரர்களைக் காவ லர்கள் சிறிய கேமராக்களால் மிக அருகிலிருந்து படம் பிடிப்பது அந்தரங்க உரிமை மீதான அத்துமீறல் என்றும் பிரிட்டாஸ் குற்றம்சாட்டினார். நால்வர் சேர்ந்து நின்றாலே கைது செய்து பலத்தை பிரயோகிக்கும் நிலை தலைநகரில் நிலவுகிறது என்றார் அவர். சனிக்கிழமை இரவு தமது இல்லத்துக்குள்ளும் காவ லர்கள் நுழைந்ததாகவும், தாம்எதிர்ப்புத் தெரிவித்த பிறகேஅவர்கள் வெளியேறியதாகவும் அவர் முன்னதாகக் கூறியிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சுப் பகுதியில் காயங்களுடன் அவர் தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டன. கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன், மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக், மாநிலங்களவை உறுப்பினர்கள் வி.சிவதாசன், ஏ.ஏ.ரஹீம் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தனர். “தில்லி காவல்துறை எல்லா வரம்புகளையும் மீறிவிட்டது” என்று மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மாணவர் தலைவர்கள் மீது வெறித் தாக்குதல்

முன்னதாக, காலை சுமார் 11.30 மணிக்கு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றின் தோழர்கள் கன்னாட் பிளேஸிலிருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணிதொடங்கினர். ராஜீவ் சவுக் மெட்ரோ நிலையம் முன்பு மத்தியப் படையினர் அவர்கள் மீது பாய்ந்தனர். சாலையில் அமர்ந்த மாணவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர்; மாணவிகள் கழுத்தைப் பிடித்து இழுக்கப்பட்டதாகத் ‘தேசாபிமானி’ தெரிவிக்கிறது.இந்தப் போராட்டத்தின் போது, மாணவர் சங்க அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம். சாஜியை, அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை தாக்குதலுடன் மீண்டும் கைது செய்தது. 24 மணி நேரத்திற்குள் 2ஆவது முறையாக ஆதர்ஷ் எம். சாஜி கைது செய்யப்பட்டுஉள்ளார். குறிப்பாக, கைது நடவடிக்கையின் போது ஆதர்ஷ் எம். சாஜியை ஒரு விலங்கினை இழுத்துச் செல்வது போன்று காவல்துறையினர் கொடூரமாக நடத்திச் சென்றனர். இந்தத் தாக்குதலில் அவர்காயமடைந்தார். காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது அவரது வலது கண்ணிற்கு அருகில் ரத்தம் வழிந்தது.

ஆதர்ஷ் எம்.சாஜியின் நெற்றியிலிருந்து ரத்தம் வழியும் காணொலியை சங்கம் வெளியிட்டுள்ளது. தில்லி மாநிலச் செயலாளர் சூரஜ் இளமோன், மத்திய செயற்குழு உறுப்பினர் அபிஜித் மணிலால், சிம்ரன், அனில், சரண்யா, சந்த் உள்ளிட்டோர் கூண்டு போன்ற காவல் வாகனங்களுக்குள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் நங்லோய் சூரஜ்மல்மைதானத்துக்கும் ஹரியானா எல்லைக்கும் கொண்டு செல்லப்பட்டதாகவும் மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மயங்கிக் கிடந்தவருக்கு உதவக்

கூடக் கூண்டைத் திறக்கவில்லை என்றும், ஆண் காவலர்கள் கூண்டுக்குள் நுழைந்து மாணவிகளை அடித்தனர் என்றும்அச்செய்தி கூறுகிறது.சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட வாலிபர் சங்க மத்தியச் செயற்குழு உறுப்பினர் ஜெய்க் சி.தாமஸ், தமது உடைகள் கிழிக்கப்பட்டதாகவும், இருபுறமும் வரிசையாக நின்ற காவலர்கள் அறைந்து, முழங்கையால் குத்தி, உதைத்த பிறகே வாகனத்தில் ஏற்றியதாகவும் தெரிவித்தார். இந்த வாகனங்களை “நடமாடும் குவாண்டனாமோ; சக்கரங்கள் மீதான சித்திரவதை முகாம்கள்” என்று வாலிபர் சங்க அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி. சாடினார். மாணவர் பெருமன்ற நிர்வாகி தினேஷும் தாக்கப்பட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, ஆனி ராஜா ஆகியோரும், விஜய் சவுக் அருகே ஏஐஎஸ்ஏ தலைவர் நேஹா போராவும் கைது செய்யப்பட்டனர்.

ஆர்.கே.ஆசிரம மார்க் அருகே மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். குருத்வாரா பங்களா சாகிப் அருகே மருத்துவர்களும் அமைதியாக நின்றவர்களும்கூடக் கைது செய்யப்பட்டதாகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குற்றம்சாட்டியது; தலைநகரில் நெருக்கடி நிலை போன்ற சூழல் நிலவுவதாகவும் அது கூறியது. தரையில் தடுக்கப்பட்டதால், கிராந்திகாரி யுவ சங்கதன் அமைப்பினர் நிகம்போத் படித்துறையில் யமுனை ஆற்றில் படகுகளில் நின்று போராடினர்.

“அமைதியாகப் போராடினோம்; நாங்கள் செய்த குற்றம் என்ன?” என்று காணொலியில் கேள்வி எழுப்பியுள்ள ஆதர்ஷ், “இன்று ஆயிரக்கணக்கானோர்; நாளை பல்லாயிரக்கணக்கானோர் வீதிக்கு வருவார்கள். ஓர் அங்குலம்கூடப் பின்வாங்க மாட்டோம்” என்று அறிவித்தார்.

காணொலி எடுத்த பாதிரியாரும் கைது

காவல்துறையின் வன்முறையைக் கைபேசியில் பதிவு செய்துகொண்டிருந்த தில்லி திரு இருதய ஆலயப் பங்குத்தந்தை பிஜு சேவியரையும் காவல்துறை பிடித்துச் சென்றது.தாக்கப்பட்டஆதர்ஷ்,ஜெய்க் ஆகியோருடன் பேசிய அவர், “மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையை ஏவிவன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தங்கள் சவக்குழியைத் தாங்களேதோண்டுகின்றன”என்றார்.

கண்டனக் குரல்கள்

சனிக்கிழமை அடக்குமுறையின்போதே வி.சிவதாசன் எம்.பி. உள்ளிட்டோர் காயமடைந்தனர் என்றும், பினராயி விஜயனுக்கு மணிக்கணக்கில் உணவு, தண்ணீர், மருந்து மறுக்கப்பட்டது என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு குற்றம்சாட்டி, நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தது. அதற்கு மறுநாளே கட்சியின்மாநிலங்களவைக் குழுத் தலைவர் மீதே இத்தாக்குதல் நடந்துஉள்ளது.

“ஊடகங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் சட்டமியற்றுபவரே இழுத்துச் செல்லப்படுகிறார் என்றால், நம் ஜனநாயகத்தின் நிலை என்ன?” என்று ஏ.ஏ.ரஹீம் கேள்வி எழுப்பினார். தில்லி காவல்துறை ஆர்எஸ்எஸ்–பாஜக குண்டர்களைப் போல நடந்துகொள்வதாகவும், இது நெருக்கடி நிலையை ஒத்த அடக்குமுறை என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு கண்டித்துஉள்ளது. பினராயி விஜயன் கைது செய்யப்பட்டதைக் கேரள முதல்வர் வி.டி.சதீசனும் கண்டித்திருந்தார். போராட்டக்காரர்கள், வழக்கறிஞர்கள், ஊடகத்தினர் பெருமளவில் கைது செய்யப்படுவது குறித்து ஐ.நா. மனித உரிமைகள்அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது; அதை “உள்விவகாரங்களில் ஏற்க முடியாத தலையீடு” என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது.“இந்தக் காயங்கள் மறக்கப்படாது. மீண்டும் மீண்டும் வீதிக்கு வருவோம்; நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போராட்டம்பன்மடங்காகும்” என்று இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே திங்கட்கிழமை தில்லியில் பெருந்திரள் போராட்டத்துக்குக் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.