இதழ்சிரிப்பால்... - கோவி.பால.முருகு
12 Sept 2026, 8:49 pm

இதழ்சிரிப்பால்... - கோவி.பால.முருகு

இதழ்சிரிப்பால் கண்களிலே புகுந்து கொண்டாய்

இன்னிசையின் மொழியாலே மனத்தைக் கொண்டாய்

பளிங்குக்கண் பார்வையாலே பற்றிக் கொண்டாய்

பல்லழகு முத்தானப் பரிசைக் கொண்டாய்

மெல்லுடலை அணைத்திடவே மேனி கொண்டாய்

மென்பஞ்சு பாதத்தின் நடையைக் கொண்டாய்

கைவிரலின் பரிசத்தில் கிறக்கம் கொண்டாய்

கண்ணம்மா உன்னிடத்தில் சொர்க்கம் கொண்டாய்!

என்குலத்தைச் செழிக்கவந்த என்றன் மகளே!

என்குடும்பம் மகிழ்ந்திடவே பிறந்த தாயே!

உன்வரவால் பெற்றயின்பம் கோடி கோடி

உன்வாசம் வீடெல்லாம் பரவும் தேடி

மண்ணகத்தில் நீவளர்ந்து விருட்ச மாவாய்

விண்ணகமும் உன்புகழால் ஒளிர்ந்து நிற்கும்

பகுத்தறிவுச் சுடரேந்தும் பண்பை ஏற்பாய்

பைந்தமிழாய் மெருகுற்று வாழ்வாய் கண்ணே!

இவையெல்லாம் எனக்குவேண்டும் என்றன் உயிரே!

இயலுமுன்னால் எழுந்திடுவாய் சிங்கப் பெண்ணே!

பெயர்சொன்னால் நாவினிக்கும் கரும்புச் சாறே

பேர்புகழால் மனமினிக்கச் செய்வாய் கண்ணே!

பெண்ணென்றால் சக்தியென்று உரக்கச் சொல்வாய்

பேரறிவால் ஆதிக்கச் சூழ்ச்சி வெல்வாய்!

ஓவியமே காவியமே அமுதே தேனே

ஒப்புமைக்கும் எட்டாத கண்ணே வாழ்க!