“குற்றங்களும்... தண்டனைகளும்... விபத்தா..?” - கி.ஜெயபாலன், புதுகை
9 May 2026, 2:10 pm

“குற்றங்களும்... தண்டனைகளும்... விபத்தா..?” - கி.ஜெயபாலன், புதுகை

‘கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்”எனும் போது காதால் கேட்ட ஒலியை மட்டுமே வைத்து, உண்மையைக் காண முயலும் அபத்தத்தால் எழும் நிகழ்வுகளே ‘இது விபத்து; அவ்வளவே’ என்ற பொருள் தரும் “It was just an accident”என்ற ஈரானியத் திரைப்படம்.

தலைநகர் டெஹ்ரானில் இரவில் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் ஐந்து வயது மகளுடன் காரை ஓட்டிச் செல்கிறான் இப்ராகிம்.பயணத்தின் போது, நாயொன்று குறுக்கிட, கார் மோதி, நாய் இறந்து, காரும் பழுதாகிறது

.மகள், தகப்பனை கொலைகாரன் எனக் கூறி அழுகிறாள்.மனைவியோ, ”இது ஒரு விபத்து அவ்வளவுதான்”எனக்கூறி மகளை அமைதிப்படுத்துகிறாள்.

இந்நிகழ்வே, பின்னர் கதையின் மையக் கருவாக மாறுகிறது.ஒரு செயல்”விபத்தா?”அல்லது”குற்றமா?” என்ற கேள்விமுழுப்படத்தையும் ஆக்கிரமிக்கிறது.

காரை சீரமைக்க மெக்கானிக் ஷெட்டிற்கு சென்றபோது, அங்கு உதவியாளராக இருக்கும் அஜர்பைஜானைச் சேர்ந்த வாஹித், இப்ராகிமின் காலடி ஓசையை கேட்டு அதிர்ச்சி அடைகிறான்.

வாஹித் யாரென்றால், அரசுக்கு எதிராக செயல்பட்டு சிறைக்குச் சென்றவன்.அங்குள்ள அதிகாரி ஒருவனால் கடுமையான சிறைக் கொடுமைகளுக்கு ஆளானவன்.

அந்த அதிகாரியை சிறைவாசிகள் பெக்லெக் என ஏளனமாக அழைப்பர். இவன் சிரியா போரில் ஒரு காலை இழந்து, செயற்கை காலோடு நடமாடுபவன்.இவன், தனது அடையாளத்தை மறைக்கும் வகையில், சிறை வாசிகளின் கண்ணை கட்டியே கொடுமைகளை அரங்கேற்றுவான்.அவனது நடை சத்தத்தை வைத்தே வாஹித் உள்ளிட்ட இதர சிறைவாசிகள், அவனது இருப்பை உணர்வார்கள்.

எனவே, வாஹித் கேட்ட காலடி ஓசையும், ஏற்கனவே சிறையில் பழகிப்போன ஓசையோடு ஒத்து போவதால் தான் அதிர்ச்சி அடைகிறான்.

அதனால், சிறை கொடுமைக்காரன் இப்ராகிம் தான் என உறுதியாக நம்புகிறான். மறுநாள், தனது வேனில் இப்ராகிமின் கண்ணை கட்டி, பாலை வனத்திற்கு கடத்துகிறான்.

உயிரோடு புதைக்க, குழி தோண்டுகிறான். திடீரென”இவன் உண்மையிலேயே பெக்லெக் தானா?”என்ற சந்தேகம் வாஹித்துக்கு வலுக்கிறது.

இதனை தீர்க்க, ஏற்கனவே இவனோடு சிறையில் அரசுக்கெதிராக போராடி, சித்ரவதைக்கு உள்ளான பெண் போட்டோகிராபர், அவளது பழைய காதலன் மற்றும் புது மணப்பெண் ஆகியோரைச் சந்திக்கிறான்.

போட்டோகிராபரும், புதுமணப் பெண்ணும் அவனது உடல் வாசனையையும், பழைய காதலன், இப்ராகிம் காலின் தழும்பையும் கொண்டு அடையாளம் காண முயற்சிக்கிறார்கள்.

ஆனால், அனைவரும் ஒருவித குழப்பத்தோடு உறுதிப்படுத்தி, இவனைப் பழிவாங்கத் தயாராகிறார்கள்.

இந்த நேரத்தில் இப்ராகிம் மகள் போனில் பேசுகிறாள்.தனது தாய் மயக்கமடைந்ததை சொல்லி காப்பாற்றுமாறு, முன்பின் தெரியாத வாஹித்திடம் அழுகிறாள்.

பழிவாங்கத் துடித்த கூட்டத்திற்கு இப்போது, மனிதாபிமானம் மேலிட, இப்ராகிம் மனைவியை மருத்துவ மனையில் சேர்க்கின்றனர்.ஆண் குழந்தை பிறக்கிறது.

இந்நிலையில் நால்வருக்குள்ளும் இப்ராகிமை கொலை செய்வதா?மன்னிப்பதா?என்ற விவாதம் முற்றுகிறது.

புதுமணப்பெண்ணும், போட்டோகிராபரின் முன்னாள் காதலனும் முடிவெடுக்க முடியாமல் நடுவிலேயே வெளியேறுகிறார்கள். இறுதியாக வாஹித்தும், பெண் போட்டோகிராபருமே மிஞ்சுகின்றனர்.

இப்போது இவர்களுக்குள்ளான அறச்சீற்ற உரையாடல்களின் வழியாக, தனது மனைவியை இக்கூட்டம் காப்பாற்றியதையும், ஆண்குழந்தை பிறந்ததையும் இப்ராகிம் அறிகிறான்.த

னது நீசத்தனமான செயல்பாடுகளுக்கு மன்னிப்பு கோருகிறான்.

இவர்களும் இப்ராகிமை மன்னிப்பதே கதை.

படத்தின் முடிவில், வாஹித் மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பி, மாடிப்படி ஏறுகையில், சிறையில் கேட்ட கொடுமைக் காரனின் அதே காலடி ஓசை இப்போது மீண்டும் கேட்கிறது.

அப்படியே உறைந்து நிற்கிறான்.

அப்போது, வாஹித் முதுகுப் பகுதியை மட்டுமே, கேமரா சில மணித்துளிகள் காட்டி திரை இருளாகிறது.

இது, கடந்த காலத்தில் வாஹித் அனுபவித்த அடக்குமுறைகள் அவன் மனதின் கசப்பான நினைவுகளாக உறங்கிக் கொண்டு உள்ளது.

இந்தக் காலடிச் சத்தம் அவனது நினைவுகளை உசுப்பி விடுகிறது.

அதாவது, கசப்பான கடந்த காலத்தை பின்னால் விட்டுச் சென்றாலும், அந்த நினைவுகள் அவனை விடவில்லை என்பதைக் குறிக்கும் உளவியல் படிமமாக முதுகுக் காட்சியை கட்டமைத்துள்ளார், ஈரானிய சினிமாவின் முன்னோடி அடையாளமான இயக்குநர் ஜாபர் பனாஹி.

இப்ராகிம் தான் பெக்லெக்கா என்ற கேள்விக்கு படம் இறுதி வரை தெளிவான பதில் தரவில்லை. இதனால் குற்றவாளியாகவும், சந்தேகத்தின் பலியாடாகவும் ஆகிறார்.

மேலும், இவர் அடக்குமுறையை இயல்பாக ஏற்றுக் கொண்ட அமைப்பின் பிரதிபலிப்பாகவும், பின்னர் தனது செயல்களுக்கு மன்னிப்பு கோரும் மனிதனாகவும் இரண்டு முகங்களாக இப்ராகிம் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறையில் கொடுமைக்குள்ளான நால்வரும் கடைசி வரையில் பெக்லெக்கை கண்ணால் பார்க்க வில்லை.இப்ராகிமை, பெக்லெகென நினைத்து தண்டிக்க முயற்சித்த நால்வரையும் இப்ராகிமிற்கு தெரியாது.

ஏனென்றால் எல்லோரின் கண்ணையும் கருப்புத் துணி மறைத்துவிட்டது.இது, மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது சக மனிதர்களிடம் மனக் கண்ணை கட்டிக் கொண்டே பழகுகிறார்கள்.

ஒரு வித தெளிவற்ற உண்மையின் அடிப்படையில் முன்கூட்டிய கணிப்பிலே உறவைப் பேணுகிறார்கள் என்பதன் உருவகமாகவே கண்ணை கட்டிய கருப்புத்துணி பயன்படுத்தப் பட்டுள்ளது.

ஒரு மனிதனை சரியாக அடையாளங் காணாமல் கொலை செய்ய தீர்மானிக்கும் கூட்டமே, அவனது மனைவியை காப்பாற்ற முன்வருவது;போன்ற முரண்பாடுகள், வாழ்க்கையின் அபத்தத்தையும், மனிதனின் நிலைகுலைந்த அறச்சிந்தனையையும் சோக நகைச்சுவை சாயலோடு வெளிப் படுத்தியுள்ளது.

வழக்கமான வேலைகளை பார்த்து கொண்டு வாழ்க்கையை நடத்தும் சாதாரண மனிதர்களாகவும், திடீரென கோபமாகி பழிவாங்கத் துடிப்பவர்களாகவும், இறுதியில் மன்னித்து இயல்பு நிலைக்குச் செல்கின்ற பாத்திரங்களாக வரும் வாஹித், இப்ராகிம், பெண் போட்டோகிராபர், கோபக்கார காதலன், புதுமணப் பெண் ஆகிய பாத்திரமேற்றுள்ள முறையே வாஹித் மொபாசெரி, இப்ராகிம் அஸிஸ், மரியம் அஃப்ஸாரி, முகமது அலி, ஹடீஸ் பாக்பெடன் ஆகியோர் காத்திரமான நடிப்பைத் தந்து படத்திற்கு தனிச்சிறப்பு செய்துள்ளனர்.

மஞ்சள் வெயிலாடும் பாலை வனம் மற்றும் மலைக் குன்றுகளை பிரமிக்கும் வகையில் காட்சிப் படுத்தியும், இரவு நேரக் காட்சியில், வேனின் விளக்குகளால் பிரகாசிக்கும் மஞ்சள், சிவப்பு வண்ணத்தை கதைச் சூழலுக்கு பொருந்தும் வகையில் பயன்படுத்தி அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் அமீன் ஜபாரி.அமிர் எட்மினானின் படத்தொகுப்பு சிறப்பு.

2025-ஆம் ஆண்டிற்கான கேன்ஸ் விழாவின் பால்டிமோர் விருதை இப்படம் வென்றுள்ளது.முபியில் காணக்கிடைக்கிறது.