மோடி - டிரம்ப் வர்த்தக ஒப்பந்தம் சுதந்திரமா? சரணாகதியா?
6 Feb 2026, 3:38 pm
<p><strong>மோடி - டிரம்ப் வர்த்தக ஒப்பந்தம் சுதந்திரமா? சரணாகதியா?</strong></p>
<p>இந்தியாவின் வரலாற்றில் இன்னொரு கறுப்பு அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. 1947-இல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா, 2026-இல் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அடிபணிந்திருக்கிறது. பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் அறிவித்துள்ள வர்த்தக ஒப்பந்தம் என்பது வெறும் பொருளாதார உடன்பாடா, அல்லது இந்தியாவின் இறையாண்மையை அடகு வைக்கும் சரணாகதியா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா பெற்றது என்ன? இழந்தது என்ன? அநீதியான வரி விதிப்பு இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா இந்தியப் பொருட்கள் மீது 18 சதவீத வரி விதிக்கிறது. ஆனால் இந்தியா அமெரிக்கப் பொருட் களுக்கு 0 சதவீத வரி - அதாவது பூஜ்ஜியம்! இது என்ன நியாயம்? முன்பு நாம் அமெரிக்கப் பொருட்களுக்கு 125 சதவீதம் வரை வரி விதித்து நம் சந்தையைப் பாதுகாத்தோம். காரணம், அமெரிக்க விவசாயி 400 ஏக்கரில் நவீன இயந்திரங்களைக் கொண்டு விளைவிக்கும் பொருட்களுடன், வெறும் 2 ஏக்கரில் வியர்வை சிந்தி உழைக்கும் இந்திய விவசாயி போட்டி போட முடியாது. 2025 ஆகஸ்ட் மாதத்தில், ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் இந்தியப் பொருட்கள் மீது அதிரடியாக வரிகளை உயர்த்தியது. ஆகஸ்ட் 1 அன்று 25 சதவீத ‘பரஸ்பர வரி’ (Reciprocal Tariff) விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 27 அன்று ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, மேலும் 25 சதவீத அபராத வரி விதிக்கப்பட்டது. மொத்தம் 50 சதவீத வரிச்சுமையால் இந்திய ஏற்றுமதி முடங்கியது. வரலாற்று ரீதியாக 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை மட்டுமே இருந்த வரியை 50 சதவீதமாக உயர்த்தி மிரட்டிவிட்டு, இப்போது 18 சதவீதமாகக் குறைத்ததையே ‘வெற்றி’ என மோடி அரசு கொண்டாடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். அமெரிக்க மானியமும் இந்திய விவசாயமும் இந்தியாவில் 60 கோடி மக்கள் விவசாயத்தைச் சார்ந்து வாழ்கிறார்கள். 8 கோடி குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு 2024-25 நிதியாண்டில் மட்டும் பயிர் காப்பீடு மற்றும் நேரடி உதவி என மொத்தம் 85 பில்லியன் டாலர் (சுமார் ₹7.68 லட்சம் கோடி) மானியம் வழங்கியுள்ளது. இது வெறும் 20 லட்சம் பண்ணைகளுக்கானது. ஆனால், இந்தியாவில் 14 கோடி விவசாயக் குடும்பங்களுக்குச் சேர வேண்டிய ஒட்டுமொத்த விவசாய அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடே ₹1.40 லட்சம் கோடிதான். அமெரிக்க மானியம் இந்தியாவை விட ஐந்தரை மடங்கு அதிகம். மானியம் பெற்று குறைந்த விலையில் வரும் அமெரிக்கப் பொருட்கள், வரி ஏதுமின்றி இந்தியச் சந்தையில் நுழையும்போது நமது விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக நசுக்கப்படும். இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் பொருளாதார ஆயுதம். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விவசாயம் பாது காக்கப்பட்டுள்ளது என்கிறார். ஆனால் அமெரிக்க வேளாண் அமைச்சர் புரூக் ரோலின்ஸ், “இந்தியச் சந்தை அமெரிக்க விவசாயிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது” என மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இதில் நாம் யாரை நம்புவது? நசுக்கப்படும் சிறுதொழில்கள் மற்றும் நெசவுத்துறை இந்திய உற்பத்தித் துறையின் முதுகெலும்பாக விளங்குவது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை (MSME - எம்.எஸ்.எம்.இ). 5.77 கோடி நிறுவனங்கள் மூலம் 20 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பளிக்கும் இத்துறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் (GDP - ஜி.டி.பி) 30 சதவீதப் பங்களிக்கிறது. அமெரிக்காவின் நவீன மின்னணுப் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் 0 சதவீத வரியில் நுழையும்போது, நமது சிறுதொழில்கள் போட்டியிட முடியாமல் மூடப்படும். அதேபோல், 4.5 கோடி பேருக்கு வேலை தரும் ஜவுளித்துறையில், 35 லட்சம் கைத்தறித் தொழிலாளர்கள் உள்ளனர். அமெரிக்க நிறுவனங்கள் நவீன இயந்திரங்கள் மூலம் தயாரிக்கும் ஆடைகள் வரி இன்றி வரும்போது, நெசவாளர்களின் கைத்தறி ஆடைகளை யார் வாங்குவார்கள்? இது நமது ஜவுளித் தொழிலுக்கு விடுக்கப்படும் மரண சாசனமாகும். அடிபணியும் அயலுறவுக் கொள்கை இந்தியாவின் பெருமைமிக்க ‘அணிசேராக் கொள்கை’ இன்று சிதைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரின் பின்னணியில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக் கூடாது என்ற டிரம்பின் அழுத்தத்திற்குப் பணிந்து, 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி மற்றும் பொருட்களை அமெரிக்காவிடம் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்தியாவின் ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 80 சதவீதத் தொகை யாகும். வெனிசுலாவில் உள்ள இந்திய நிறுவன மான ஓ.என்.ஜி.சி விதேஷ் (ONGC Videsh) நிலை என்ன? ஈரானின் சபஹார் துறைமுகத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாதது தற்செயலானதா? இதில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என நம்ப முடியுமா? மர்மமான பின்னணி : பிளாக்மெயிலா? அதானி மீதான சட்ட நடவடிக்கைகள் மற்றும் எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரதமர் மோடி, அனில் அம்பானி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரின் பெயர்கள் அடிபடுவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. 2019 தேர்தலுக்கு முன்பு, டிரம்ப்பின் வியூக வகுப்பாளர் ஸ்டீவ் பேனோனுடன் சந்திப்பு நடத்த எப்ஸ்டீனிடம் அனில் அம்பானி உதவி கோரியதாக மின் னஞ்சல் ஆதாரங்கள் கசிந்துள்ளன. அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எப்ஸ்டீனை மூன்று முறை சந்தித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த ஆவணங்களை வைத்து அமெரிக்கா இந்தி யாவைப் ‘பிளாக்மெயில்’ செய்கிறதா? அதானி வழக்கை நீர்த்துப்போகச் செய்யவே இந்த வர்த்தக ஒப்பந்தம் பயன்பட்டதா? என்ற கேள்விகள் எழுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. ஜனாதிபதி டிரம்ப்பின் சமூக வலைதளப் பதிவுகள் மூலமாகவே இந்தி யர்கள் இதனை அறிந்தனர். 1947-இல் விடு தலை பெற்ற இந்தியா, 2026-இல் மீண்டும் அடிமைத்தனத்திற்குள் நுழைய அனுமதிக்க முடியாது. பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகளின் உயிரும், நாட்டின் இறையாண்மையும் எதற்கும் ஈடாகாது.</p>
